கவனயீனமாகச் செயற்பட்டதால் பொலிஸ் மா அதிபரும் கொலைக்குக் காரணம்!

வெலிகம பிரதேச சபை தலைவரின் கொலை அரசியல் நோக்கத்துடன் மேற்காெள்ளப்பட்டது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
வெலிகம பிரதேச சபை தலைவரின் கொலை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வெலிகம பிரதேச சபை தலைவர் பொது மக்கள் தினத்தில் பிரதேச சபையில் அவர் கடமையில் இருக்கும்போதே இடம்பெற்றுள்ளது, அந்த இடத்தில் ஒரு பொலிஸ் அதிகாரி ஆயுதத்துடன் இருந்திருந்தால், இந்த நிலை ஏற்பட்டிருக்காது. அதேநேரம் பொலிஸ்மா அதிபரின் கவனயீனமும் இந்த கொலைக்கு காரணமாகும் என்ற தீர்மானத்துக்கு எங்களுக்கு வரவேண்டி ஏற்படுகிறது.
அத்துடன் ஐ.ஆர்.சி குழுவுக்கு பாதுகாப்பு வழங்குவதில்லை என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்து முட்டாள் தனமானதாகும். ஏனெனில் ஐ.ஆர்.சி குழுவினருக்கும் பாதுகாப்பு பெற்றுக்கொள்ளும் உரிமை இருக்கிறது. வெலிகம பிரதேச சபை தலைவர் ஐ.ஆர்.சியை சேர்ந்தவர் அல்ல. அப்படி எந்த தீர்ப்பும் அவருக்கு எதிராக இல்லை. அதுதொடர்பில் குற்றச்சாட்டே தெரிவிக்கப்படுகிறது. குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுவதால் மாத்திரம் ஒருவர் குற்றவாளியாக கருதப்படுவதில்லை. மாறாக நீதிமன்றத்தில் அது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
அத்துடன் பிரதேச சபை தலைவர், தனக்கு மரண அச்சுறுத்தல் இருப்பதாகவும் அந்த அச்சுறுத்தல், இவர்களிடமிருந்தே இருப்பதாகவும் தெரிவித்து, ஒருசிலரின் பெயர்களை குறிப்பிட்டு பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கிறார். அந்த நபர்களையே பொலிஸாரும் கண்டுபிடித்திருந்தனர்.
எனவே பிரதேச சபைத் தலைவரின் கொலை அரசியல் கொலையாகும். அதில் சந்தேகம் இல்லை. இது அரசியல் கொலை என தெரிவிப்பதற்கு ஒரு செக்கன்கூட சிந்திக்கத் தேவையில்லை. பிரதேச சபை தலைவர் போட்டியின் அடிப்படையிலேயே, இந்த கொலை இடம்பெற்றுள்ளது. அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதனை ஏற்றுக்கொள்ளாவிட்டால், விசாரணைகள் சரியான திசைக்கு செல்லாது. மாறாக வேறு கோணத்திலே செல்லும் என்றார்.
![]()