செவ்வந்திக்கு உதவியதாக யாழில் தொடர்ந்து பலருக்கு வலைவீச்சு

இஷாரா செவ்வந்தி இந்தியாவிற்குத் தப்பிச் செல்லப் பயன்படுத்திய படகு யாழ்ப்பாணம் அராலித்துறை கடற்கரைப் பிரதேசத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
இஷாரா செவ்வந்தி இந்தியாவிற்குத் தப்பிச் செல்ல உதவினார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள ஆனந்தன் என்பவரிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் குறித்த படகு மீட்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இருந்து வந்த விசேட பொலிஸ் குழுவினரே படகினை மீட்டுள்ளதாகவும் , படகின் வெளியிணைப்பு இயந்திரம் மீட்கப்படவில்லை எனவும், படகின் உரிமையாளரை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை செவ்வந்தி தொடர்பிலான வழக்கு விசாரணைகளை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள பொலிஸ் விசேட குழுவினரே தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும் , செவ்வந்தியை இந்தியாவிற்கு அழைத்து சென்றவர்கள்,தப்பிச் செல்ல பயன்படுத்திய படகின் உரிமையாளர்,யாழ்ப்பாணத்தில் செவ்வந்தி தங்கியிருப்பதற்கு இடமளித்தோர் , அதற்கான ஏற்பாடுகளை செய்தோர் என பல்வேறு தரப்பினர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளையும் பொலிஸ் விசேட குழுவினரே முன்னெடுத்து வருவதாக பொலிஸ் தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.
இதேவேளை இஷாரா செவ்வந்தி தப்பிச் செல்ல உதவியதாகக் கூறப்படும் இரண்டு சந்தேக நபர்களை நவம்பர் ஏழாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகள் மற்றும் பிரதிவாதிகளின் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
இதற்கிடையில், கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள துப்பாக்கிச் சூடு நடத்தியவரையும் அந்த திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
![]()