இலங்கை

நூற்றுக்கும் மேற்பட்ட குற்றவாளிகள் வடக்கு கடலால் இந்தியாவுக்கு ஓட்டம்; பிரதான சூத்திரதாரி பல்வேறு தகவல் 

இலங்கையில் இருந்து குற்றவாளிகளை வடக்கு கடல் மார்க்கமாக இந்தியாவுக்குக் கொண்டு செல்லும் பிரதான சூத்திரதாரி என கூறப்படும் நபரின், வட்ஸ்அப் கணக்குகள் மூலம், அவர் குற்றக்குழு தலைவர்களுடன் தொடர்புகளைப் பேணினாரா என்பது குறித்து கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

படகுகள் மூலம் இந்தியாவுக்கு அனுப்புவதற்காக அவர் 25 இலட்சம் முதல் 30 இலட்சம் ரூபா வரை பணம் வசூலித்துள்ளதாக தற்போதைய விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக விசாரணை மேற்கொள்ளும் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியான இஷாரா செவ்வந்தியை நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல உதவிய குற்றச்சாட்டின் பேரில் அவர் அண்மையில் கிளிநொச்சிப் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

கடந்த சில வருடங்களில், திட்டமிட்ட குற்றக்குழு முக்கியஸ்தர்கள் மற்றும் கூலி படையினர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆனந்தனின் வலையமைப்பின் உதவியுடன் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பலருக்கு வலை வீச்சு

இதேவேளை கனேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்டதன் பின்னர், இஷாரா செவ்வந்தி நாட்டில் தலைமறைவாகியிருக்க உதவிபுரிந்தமை தொடர்பில் மேலும் பலர் கைது செய்யப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இஷாராவுடன் தொலைபேசி கலந்துரையாடல்களில் ஈடுபட்டவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் கைது செய்யப்படவுள்ளனர். அதன்படி, அவரின் தொலைபேசி அழைப்புகள் ஆராயப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை வெளிநாடுகளுக்கு கடல் மார்க்கமாக அனுப்பும் பிரதான ஆட்கடத்தல்காரர் உள்ளிட்ட வடக்கில் கைது செய்யப்பட்டுள்ள 04 சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் கைது செய்யப்பட்டவர்களே நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இவர்களை தடுப்புக் காவலில் விசாரணை செய்வதா? அல்லது விளக்கமறியல் உத்தரவு கோருவதா என்பது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இஷாரா செவ்வந்தி தலைமறைவாகியிருந்த பகுதிகளில் உதவி புரிந்தவர்கள் தொடர்பான விரிவான விசாரணைகளை கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், இஷாராவிற்கு உதவிபுரிந்தமை தொடர்பில் இதுவரையில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களில் சிலர் தடுப்புக் காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *