எந்தந்த இடங்களில் மண்ணை அகழ்ந்தால் எலும்புக்கூடுகள் வருமென வீரவன்ச கூறவேண்டும்

கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த போது காணாமல் ஆக்கப்பட்டவர்களை மறக்குமாறு கேட்டுக் கொண்டார்.வீரவன்ச காணாமலாக்கப்பட்டவர்களை,மண்ணைத் தோண்டிப் பார்க்கச் சொன்னார்.
வீரவன்ச இனவெறியுடன் பேசினாலும்,செம்மணியில் மண்ணைத் தோண்டிய போது 240 எலும்புக்கூடுகள் கிடைத்தன.எனவே மேலும்,எந்தந்த இடங்களில் மண்ணை அகழ வேண்டும் என்பதை வீரவன்ச கூறினால்,நல்ல சாட்சியமாக அது அமையும்.என மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பலமான அரசியல்வாதிகளின் பின்னணியில் இருந்து கொண்டு,சட்ட விரோதமான வணிகம் மற்றும் பலவந்தமான செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற நபர்களும் தப்பித்து வருகின்றனர்.குற்றச் செயல் புரிந்தமைக்கான சாட்சியங்கள், முறைப்பாடுகள் இருந்தும் ஆட்சியர்கள், இனம் சார்ந்து அரசியல் சார்ந்து இருப்பதால்,அத்தகைய குற்றவாளிகள் பாதுகாக்கப்படுகின்றார்கள்.
திருகோணமலையில் 2006 இல் 5 தமிழ் மாணவர்கள், இளைஞர்களின் படுகொலை தொடர்பாக விசேட அதிரடிப் படையினர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அதற்கான முறைப்பாட்டாளர்கள் இருந்தனர்.இவ்விடயத்தில் கொலை செய்யப்பட்டவர்களில் ஒருவரான தனது மகன் ரஜீவனுக்கு நீதியைத் தேடி, வைத்தியர் காசிப்பிள்ளை மனோகரன் உள்நாட்டில் மாத்திரம் அல்லாமல், சர்வதேச ரீதியாக ஜெனீவாவில் மனிதவுரிமைப் பேரவை வரை நீதிக்காகப் போராடினார்.இருபது வருட போராட்டத்தில் அவருக்கு நீதி கிடைக்கவில்லை. உள்நாட்டு நீதிப்பொறிமுறையால் அந்த தந்தைக்கு எந்த நீதியும் கிடைக்கவில்லை. அவரது சர்வதேசம் வரையான நீதித்தேடலும் பயனளிக்கவில்லை. ஏக்கத்துடனும் மனவழுதத்துடனும் இருந்த மனோகரன் , அண்மையில் உயிர்நீத்து விட்டார்.
இவ்வாறே காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை ஏக்கத்துடனும், கண்ணீருடனும் தேடிய நூற்றுக்கு மேற்பட்ட உறவினர்கள் ஏக்கப் பெருமூச்சுடன் தமது உயிரை மாய்த்துள்ளனர்.
மகிந்த,மைத்திரி, கோத்தா,ரணில் ஆகிய ஜனாதிபதிகளாக இருந்தவர்களால்,பாரிய குற்றங்கள் புரிந்த படுபாதகக் குற்றவாளிகள் கூட தண்டிக்கப்படவில்லை. அவர்கள் இனம் சார்ந்து அரசியல் சார்ந்து சிந்திப்பதால், குற்றவாளிகள் தப்பிக்கின்றார்கள் என்று தமிழ் மக்கள் சிந்திக்கின்றனர். அதேவேளை, யுத்தம் முடிவடைந்து பதினாறு ஆண்டுகள் கடந்துள்ளதால், சாட்சியங்கள் பல மறைந்து வருகின்றன. மறைக்கப்பட்டும் வருகின்றன.
எனவே,காலத்தை இழுத்தடிப்பதால், குற்றவாளிகள் சட்டப்பிடியில் இருந்து விடுபட வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளைக் கூட ஜனாதிபதிப் பதவியில் இருந்தவர்கள் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுவித்துள்ளனர்.கோத்தா ஜனாதிபதியாக இருந்த போது காணாமல் ஆக்கப்பட்டவர்களை மறக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
வீரவன்ச காணாமலாக்கப்பட்டவர்களை,மண்ணைத் தோண்டிப் பார்க்கச் சொன்னார். இவைதான் சிங்கள ஆட்சியாளர்களின், தமிழர்களுக்கான உள்நாட்டுப் பொறிமுறைக்கான தார்ப்பரியமாக உள்ளன.வீரவன்ச இனவெறியுடன் பேசினாலும்,செம்மணியில் மண்ணைத் தோண்டிய போது 240 எலும்புக்கூடுகள் கிடைத்தன.
மேலும்,எந்தந்த இடங்களில் மண்ணை அகழ வேண்டும் என்பதை வீரவன்ச கூறினால்,நல்ல சாட்சியமாக அது அமையும்.
அதே வேளை காலத்தையும் நீடித்து, சாட்சியங்களையும் இழக்கச் செயவதே உள்நாட்டுப் பொறிமுறையின் உத்திகளாக அமைந்துள்ளன.சுண்டிக்குழி மாணவி கிருசாந்தியைப் 1996இல் படுகொலை செய்த கோப்ரல் ராஜபக்ச குழுவினர்,அவளைத் தேடிச் சென்ற தாய்,சகோதரன் பிரணவன்,பக்கத்து வீட்டுக்காரன் கிருபாமூர்த்தி ஆகி யோரையும் படுகொலை செய்தமை சாட்சியங்களை அழிக்கும் சூழ்ச்சியேயாகும்.
![]()