இலங்கை

தையிட்டி திஸ்ஸ விகாரையில் பொலிஸாரின் ஏற்பாட்டில் விழா; எதிர்ப்புப் போராட்டத்தால் களையிழந்தது

சட்டவிரோத தையிட்டி திஸ்ஸ விகாரையில் பலாலிப் பொலிஸாரும், காங்கேசன்துறைப் பொலிஸாரும் இணைந்து நேற்றுத் திங்கட்கிழமை காலை பெருமெடுப்பில் கயல் மஹா உற்சவம் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்த போதும் ஆக்கிரமிக்கப்பட்ட காணி உரிமையாளர்களுடன் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரும் இணைந்து ஏற்பாடு செய்து நடாத்திய எதிர்ப்புப் போராட்டம் காரணமாக உற்சவம் களையிழந்து காணப்பட்டது.

இந்த எதிர்ப்புப் போராட்டம் நேற்றுக் காலை 6.30 மணி முதல் நண்பகல்-12 மணி வரை தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு அருகில் முன்னெடுக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பி எதிர்ப்பில் ஈடுபட்டிருந்தனர்.

இந் நிலையில் எதிர்ப்புப் போராட்டம் காரணமாக,விகாரையில் இடம்பெற்ற உற்சவத்தில் கலந்துகொள்வதற்காகப் பிக்குமார்கள், தென்னிலங்கையிலிருந்து அழைத்து வரப்பட்ட சிங்கள மக்கள், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மாற்றுப் பாதை ஊடாக விகாரைக்குச் சென்றமையை அவதானிக்க முடிந்தது. போராட்டம் காரணமாகத் தையிட்டி திஸ்ஸ விகாரைச் சூழலிலும், அதனை அண்டிய பகுதிகளிலும் ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இதேவேளை, தையிட்டி விகாரை வளாகத்தில் சீமெந்திலான பல சுற்றுக் கட்டுமானங்கள் புதிதாக அமைக்கப்பட்டு அதற்குள் பூக்கன்றுகள் வைத்து அழகுபடுத்தும் பணிகளும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *