இலங்கை

வடக்கில் மழை காலம் தொடங்குவதால் செம்மணிப் புதைகுழிகளில் தேங்கி நிற்கும் வெள்ளம்; அகழ்வைத் தாமதப்படுத்தும் மழை

வடக்கில் மழையுடனான காலநிலை நிலவிவருவதன் காரணமாக செம்மணி மனித புதைகுழி அகழ்வு இடங்களில் வெள்ளம் நிரம்பியுள்ளதாலும் மழை தொடரும் வாய்ப்புகள் உள்ளதாலும் செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் மீண்டும் தற்போது இடம்பெற வாய்ப்பில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் நீதிவான் எஸ்.லெனின்குமார், சட்ட வைத்திய அதிகாரி, சட்டத்தரணிகள், குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர், பொலிஸார் உள்ளிட்ட குழுவினர் குறித்த பகுதிக்கு நேற்று திங்கட்கிழமை களவிஜயம் மேற்கொண்டனர்.

இதன்போது செம்மணி மனித புதைகுழிப் பகுதியில் அகழ்வுகள் இடம்பெற்ற பகுதிகள் பாதுகாக்கப்படாததால் மூடப்படாததால் தற்போது பெய்து வரும் மழையினால் மனிதப் புதைகுழி அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்ட இடங்களில் வெள்ளநீர் தேங்கி இருந்தமை அவதானிக்கப்பட்டது.அத்துடன் வடக்கில் பருவ மழைக்காலம் ஆரம்பமாகியுள்ளதால் இனிதொடர்ந்தும் மலை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது இவ்வாறான நிலையில் செம்மணியில் மீண்டும் அகழ்வு பணிகளை உடனடியாக ஆரம்பிக்க முடியாத நிலை காணப்பட்டது.

செம்மணி சதுப்பு நிலத்தையும் களிமண் தரையையும் கொண்ட பகுதியாக இருப்பதனால் தொடர்ச்சியாக மழை பெய்தால் அப்பகுதி முழுவதும் வெள்ள நீரில் மூழ்கிவிடும்.இதனால் இன்னும் ஒரு சில மாதங்களுக்கு அப்பகுதியில் அகழ்வு பணிகளை முன்னெடுக்க முடியாதமை சுட்டிக்காட்டப்பட்டது.

இதனையடுத்து குறித்த வழக்கு எதிர்வரும் நவம்பர் 3ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டதுடன் அன்றைய தினத்தில் மீளவும் களப்பணி ஆய்வு நடத்தி அகழ்வு பணி தொடர்பான திகதியை அறிவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *