இலங்கை

ஒற்றையாட்சி அரசியலமைப்பை தோற்கடிக்க முன் வரவேண்டும்; கஜேந்திரகுமார் தெரிவிப்பு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புதிய ஏக்கிய ராஜ்ஜிய ஒற்றையாட்சி அரசியலமைப்பைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் இந்த அரசியலமைப்பு தமிழ்மக்களின் எதிர்ப்பின்றி நிறைவேறியதாகக் காட்டப்பட்டால் தமிழ்த்தேசிய இனம் தாங்களாகவே விரும்பி உரிமைகளைக் கைவிட்டதாக வரலாற்றில் உறுதி செய்யப்படும். அந்த மாபெரும் தவறைத் தமிழினம் தடுப்பதாகவிருந்தால் நாங்களனைவரும் எங்களைச் செயற்பாட்டாளர்களாக மாற்றிக் கொள்ள வேண்டும். மக்கள் மயப்படுத்தப்பட்ட கூட்டு விழிப்புணர்வுச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டுமெனத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் ஏற்பாடு செய்திருந்த சமகால அரசியல் உரையரங்கு நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை பருத்தித்துறை வீதி, நல்லூர் சட்டநாதர் ஆலயத்துக்கு அருகாமையிலுள்ள திவ்யஜீவன சங்க மண்டபத்தில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தலைமையில் இடம்பெற்ற போது கலந்து கொண்டு கருத்துரை ஆற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாங்கள் சமகால அரசியலைத் தொடர்ச்சியாகக் கதைப்பது தமிழ்த்தேசிய அரசியலிலுள்ள அரசியல் கட்சிகளின் குறைபாடு காரணமாகவே ஆகும். தமிழ்மக்களின் நலன்களைப் பூர்த்தி செய்கின்ற வகையில் கூட்டாகத் தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுப்பதற்கான செயற்பாட்டாளர்கள் இல்லை என்ற குறைபாடு காரணமாகத் தான் இவ்வாறான அரசியல் உரையரங்குகளை நடாத்த வேண்டியுள்ளது.

ஒற்றையாட்சி அரசியலமைப்பின் ஆபத்துத் தொடர்பில் எங்களுக்கு வருகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் நாங்கள் சரியாகப் பயன்படுத்தித் தமிழ்மக்கள் மத்தியில் விழிப்புணர்வுகளை முன்னெடுக்க வேண்டும். தமிழ்மக்கள் மத்தியில் தமிழ்த்தேசியம் சார்ந்து செயற்படுகின்ற அரசியல் ஆய்வாளர்களின் பங்கு இதில் முக்கியமானது. தமிழ்மக்கள் மத்தியில் புதிய ஒற்றையாட்சி அரசியலமைப்புத் தொடர்பில் பரவலாக விழிப்புணர்வு நிலை உருவாகி அதற்கெதிரான கோஷங்கள் வலுப்பெறுமாயின் எதிர்வரும் காலங்களில் தமிழ்மக்களின் இனப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிலையை நாம் அடைய முடியும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *