இந்திய உதவியை மறுத்த அமைச்சரே பதவி நீக்கம்; சீனாவிடம் வாங்கலாமென்றால் ஏன் இந்தியாவிடம் வாங்கக் கூடாது

சீனா கடன் வழங்கும் போது அதனை பெற்றுக்கொள்ளும் அரசாங்கம் காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு இந்தியா 63 மில்லியன் டொலரை வழங்க முன்வந்த போது அதனை பெற்றுக்கொள்ளவில்லை. அந்த நிதியுதவியை நிராகரித்த அமைச்சர் தான் தற்போது துறைமுக அமைச்சில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யான இரா. சாணக்கியன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இடம் பெற்ற ருவன்புர அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லல் தொடர்பான தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
வடக்கு , கிழக்கு மாகாணங்களை பொறுத்தவரையில் போக்குவரத்து பிரதான அம்சமாக காணப்படுகிறது. போக்குவரத்து வசதிகளில் காணப்படும் குறைபாடுகள் மற்றும் சிக்கல்கள் இந்த இரண்டு மாகாணங்களும் அபிவிருத்தியடையாமல் இருப்பதற்குரிய பிரதான காரணியாக உள்ளன.
2013 மற்றும் 2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மொனராகலை ஊடாக மட்டக்களப்புக்கு அதிவேக நெடுஞ்சாலையை அமைக்கும் முன்மொழிவு ஒன்று காணப்பட்டது.அதேபோல் தம்புள்ளை – வடக்குக்கான அதிவேக நெடுஞ்சாலை அமைக்கும் திட்டமும் காணப்பட்டது.
வடக்கு ,கிழக்கு மாகாணங்களுக்கு அதிவேக நெடுஞ்சாலைகளை அமைக்கும் திட்டம் குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.கண்டி அதிவேக நெடுஞ்சாலை அமைப்பது வரவேற்கத்தக்கது. எமக்கும் அது பயனுள்ளதாக இருக்கும்.
மீரிகம -கடவத்த அதிவேக நெடுஞ்சாலை அபிவிருத்தி கருத்திட்டத்துக்கு சீனாவிடமிருந்து 500 மில்லியன் டொலர் கடன் பெற அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இந்த கடன் குறித்து அரச நிதி பற்றிய குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும்.
சீனா கடன் வழங்கும் போது அதனை இந்த அரசாங்கம் பெற்றுக்கொள்கின்றது. ஆனால் காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியா 63 மில்லியன் டொலரை வழங்குவதற்கு முன்வந்த போது அரசாங்கம் அதனை பெற்றுக்கொள்ளவில்லை. அந்த நிதியுதவியை நிராகரித்த அமைச்சர் தான் தற்போது துறைமுக அமைச்சில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
சீனாவுடன் கடந்த அரசாங்கங்கள் மோசடியான கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ச மீது தற்போதைய ஜனாதிபதி சீனா கொடுக்கல் வாங்கலை தொடர்பு படுத்தி குற்றஞ்சாட்டினார்.ஆனால் இன்று அந்த நிறுவனங்களுடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதனால் இந்த அரசாங்கமும் கடந்த அரசாங்கங்களை போன்று செயற்படப் போகிறதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்றார்.
![]()