இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் இந்தியாவா?

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அதன் பின்னால் இந்தியா இருப்பதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான ஓய்வுபெற்ற சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரட்ன, உயர் பதவிகள் தொடர்பான பாராளுமன்ற குழுவில் கூறியதாக தெரிவித்து சமூக வலைத்தளங்களில் வெளியான செய்திகள் குறித்து நேற்று வியாழக்கிழமை சபையில் கடும் சர்ச்சை ஏற்பட்டது.

புதன்கிழமை நடைபெற்ற உயர் பதவிகள் தொடர்பான பாராளுமன்ற குழுவுக்கு வருகை தந்திருந்த ரவி செனவிரட்ன, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அதன் பின்னால் இந்தியா இருப்பதாகவும் கூறியுள்ளதாக தெரிவித்து சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்த செய்திகளை மறுத்து பொலிஸ் ஊடகப் பிரிவினால் நேற்று அறிக்கையொன்று வெளியிடப்பட்டிருந்த நிலையில், அது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, நேற்று பாராளுமன்றத்தில் விசேட கூற்றை முன்வைத்து கருத்து வெளியிட்ட போதே சர்ச்சை ஏற்பட்டது.

இதன்போது தயாசிறி ஜயசேகர கூறுகையில்,

நான் உயர் பதவிகள் தொடர்பான பாராளுமன்ற குழுவில்உறுப்பினராக உள்ளேன். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரட்ன அந்தக் குழுவிற்கு வருகை தந்திருந்த போது, நிஸாம் காரியப்பர் கேட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்து, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். அது தொடர்பில் சகல ஊடகங்களும் எங்களிடம் கேட்கின்றன.

இந்நிலையில், தற்போது பொலிஸ் ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில், அதன் பின்னால் இந்தியா இருப்பதாக அவர் கூறவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அவர் அவ்வாறான கருத்தை கூறவில்லை. எனினும் இது தொடர்பில் உடனடியாக தெளிவுப்படுத்த வேண்டும். உயர் பதவிகள் தொடர்பான குழுவில் இதுபற்றி கூறாமல் நீதிமன்றத்தில் யார் பிரதான சூத்திரதாரி என்பதனை கூறுங்கள். இது தொடர்பில் அமைச்சரோ, பிரதி அமைச்சரோ அல்லது பொறுப்புவாய்ந்த ஒருவரோ கூற வேண்டும் என்றார்.

இதேவேளை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார கூறுகையில்,

இது தொடர்பில் விசாரணை நடத்தப்படுகின்றது. அந்த செயற்குழுவில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அவர் அவற்றை ஊடகங்களுக்கு கூறவில்லை. அது விசாரணையின் ஒரு பகுதி என்பதனால் அந்த கருத்தை நீக்குமாறு உத்தரவிட முடியாது. வேறு வழியில் இந்த விசாரணைகளை சீர்குலைக்க முயற்சிப்பவர்களுக்கு இடமளிக்க வேண்டாம் என்று கோருகின்றேன் என்றார்.

இதனை தொடர்ந்து மீண்டும் எழுந்த தயாசிறி ஜயசேகர, குறித்த விடயத்தை நிஸாம் காரியப்பரே அதனை டுவிட் செய்துள்ளார். உயர்பதவிகள் தொடர்பான குழுவில் நடக்கும் விடயங்களை எவரும் டுவிட் செய்வதில்லை. அவர் இன்று (நேற்று) காலையிலேயே டுவிட் செய்திருந்தார். ஆனால் இந்த விடயங்கள் நேற்று (புதன்கிழமை) மாலையே வெளியாகியிருந்தன என்றார்.

இதேவேளை அமைச்சர் வசந்த சமரசிங்க கூறுகையில்,

உயர் பதவிகள் தொடர்பான குழுவுக்கு அதிகாரிகள் பொறுப்புக் கூறலுடனேயே அழைக்கப்படுகின்றனர். அது பாராளுமன்றத்தில் உள்ள பிரதான செயற்குழுவாகும். இங்கு வரும் அதிகாரிகள் அந்த குழுவின் மீது நம்பிக்கை வைத்தே கேள்விகளுக்கு பதிலளிக்கின்றனர். அவ்வாறு பதிலளிக்கும் விடயங்கள் அந்த குழுவின் உறுப்பினர்களால் தனிப்பட்ட சமூக வலைத்தள கணக்குகளில் வெளியிடப்படுகின்றது என்றால் அது பாரதூரமான குற்றமாகும். அவர்களுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டும்.இவ்வாறு வெளியில் சமூக வலைத்தளங்களில் எழுதும் பழக்கத்தை நிறுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட எம்.பியை அழைத்து அவரை எச்சரிக்க வேண்டும். அவரை அந்த குழுவில் இருந்தும் வெளியேற்ற வேண்டும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *