கதைகள்

குதிருக்குள் கிடக்கும் சங்கதிகள் – சிறுகதைத் தொடர் – 09 …. மீனாசுந்தர்

நாற்காலி

ஆணவம்ங்கற மலக்கூடைய மூளைக்குள்ள சொமந்து திரியறவனுக்கு அருவருப்புன்றது ஆபரணமாத்தான தெரியும்? வீராச்சாமி அப்படியொரு ரகமான ஆளுதான். அவரப் பொறுத்த வரைக்கிம் மனுசப் பொறப்புன்றது ஆண்டவன் விதிச்சதுங்கறதை விடவும், அவனேதான் ஆராரு இந்தப் பிறவியில என்னென்னவா பொறக்கணுன்றதயும், அதுல மேல ஆரு கீழ ஆருன்றதையும் முடிவு பண்ணிடுறதா நம்புற கெட்டித்தட்டிப்போன வகையறா. வீராச்சாமிக்குக் கொழந்தங்க, பொம்பளங்க, பெரியவங்கன்ற வித்தியாசம் எதுலயும் கெடயாது. எல்லாத்திலயும் அவரு கணக்கு வேறயாத்தான் இருக்கும். எல்லாரும் வடக்க நின்னா அவரு தெற்க நிக்கிற குயுக்தி புத்தி. அவரு வீட்டுல ஒருநாளு ஒரு சம்பவம் நடந்திச்சி. அது சம்பவம்ன்றதைவிட பெரிய சங்கடம். சின்னப் புள்ளங்க ரெண்டு பேரு வௌயாடிட்டு இருந்தானுங்க. பால்மனம் மாறாத பரிசுத்தமாருக்கற ரெண்டு கொழுந்து மனசுக.

“எலே அருணு… நாம ஒரு வௌயாட்டு வெளாடுவோமாடா? நான்தான் பள்ளிக்கொடத்துச் சாராம்… நிய்யிதான் எங்கிட்ட படிக்கிற புள்ளயாம்… நான்ம் பாடம் சொல்லிக் கொடுப்பேன்… நிய்யி ஒழுங்கா சொல்லணும்… நிய்யி தப்பா சொன்னியேன்னு வச்சுக்கயேன்… ஒன்னிய நான் சும்மானாச்சிக்கும் அடிப்பேன்ஞ்… செரியா?”

அருண் தலைய ஆட்டியாட்டிச் சம்மதம் தெரிவிச்சான். ஒடனே வகுப்பு ஆரம்பமாயிட்டு.
“எங்க இப்ப சொல்லு… அம்மா… ஆடு… இலை… ஈ….’

செல்வம் சேர்ல ஒக்காந்து வாத்தியாரப்போலச் சொல்லிக் குடுத்துக்கிட்டே இருக்கான். அருணு கய்யக் கட்டிக்கிட்டு கருமமே கண்ணாருக்கறமாரி பவ்யமா பின் தொடர்ந்து சொல்லிக்கிட்டே போறான்.

“டேய்… அங்க இங்க வேடிக்க பாக்காத. பாடத்த கவனி.., நிய்யி ஒழுங்கா சொல்லலென்னு வெச்சிக்கயென் ஒதப்பேன்”னு செல்வம் சொல்லிக்கிட்டே வெளயாட்டுக்கு மண்டையில ஒரு குத்து போடுறான். அருணும் சார்.. அடிக்காதிங்க சார்.. இனிமே ஒழுங்கா சொல்லிடுறேன்னு சொல்லிக்கிட்டே ஓ.. ன்னு அழறான். ரெண்டு மொகத்துலயும் மகிழ்ச்சி தாறுமாறா தாண்டவமாடுது.

வௌயாட்டும் அவ்வளவு ரம்மியமா போயிக்கிட்டிருக்கு. இது நடந்துக்கிட்டு இருக்கிறப்பவே அருணு அழுவுற சப்தம் வீராச்சாமிக்கு கேட்குது. மவன் உண்மையாவே அழறான் போலருக்குன்னு நெனச்சிக்கிட்டு வேக வேகமா வீட்டுக்குள்ளருந்து வெளில ஓடி வந்தாரு வீராச்சாமி. வந்து பாத்ததும் அப்பிடியே தெகச்சிப் போயி நின்னுட்டாரு. கண்ணு ரெண்டும் மொளகா பழம்மாரி செக்கச்செவேர்ன்னு செவந்து கோவம் கிடுகிடுன்னு தலக்கி ஏறிடிச்சி… நரம்பெல்லாம் பொடைச்சிக்கிட்டு உருவமே ஒருமாரி மாறிப் போயிடிச்சி.

‘அட.. ங்கொப்புறானே உட்டேன்… கவுச்சடிச்ச நாறப்பய மொவனே… ஒனக்கு இவ்வளோ திமிரான்னு கேக்குறன்? எவன் வூட்டு சேர்ல எவன் வந்து ஜம்பமா உக்காந்துக்கிட்டு யாரடா நாட்டாமப் பண்றே? ஏண்டா… என்னா கொழுப்புருந்தா என் வூட்டு மாட்டுத் தொழுவத்தில சாணியள்ளிக் கொட்டுற எச்சக்காரப்பய மவன் நிய்யி., சேர்ல உக்கார்ந்திருப்பே. ராசாதிராசன்மாரி வளத்து வர்ற எம் மவன கய்ய கட்டி நிக்க வெப்பே… கெட்ட கேட்டுக்கு ஒனக்கு வாத்தியாரு ஆச வேறயா? முட்டாப் பயலே.. படவா மவனே.. மூஞ்சி மொகரைய பேத்துப்புடுவன் பாரு… எழுந்திருச்சிப் போடா அந்தாண்ட“

கழுத்தப் புடிச்சி ஒரே தூக்கா தூக்கி, பயம் கொண்ட மட்டும் ஓங்கி மொதுவுல ஒரு சாத்து சாத்தி வீசினாரு வெளில. “யம்மாஆஆஆ…”ன்னு அலறிக்கிட்டே வாசல்ல போயி விழுந்தான் செல்வம். சின்னப்புள்ள. இத எதிர்பார்த்திருக்க மாட்டான். ரொம்ப பயந்து நெலகொலஞ்சி போயிட்டான்.
வீராச்சாமிதான் அருணோட அப்பா. அந்தப் பகுதியில நிலபுலன்ங்க, வசதிவாய்ப்புன்னு கொறையில்லாம வாழுற செல்வாக்கான ஒரு ஆளு. வழிவழியா குடும்பம் மொத்தமும் பணக்காரத்திமிர் அப்பிக் கெடக்குது. அவங்க வீட்டுலதான் பண்ணையாளா வேல செஞ்சிக்கிட்டிருக்கிறாரு பொன்னுசாமி. அவரு மவன்தான் இந்த வாத்தியாரு செல்வம். அருணும் செல்வமும் ஒரே வகுப்புல படிக்கிறானுங்க.

வீராச்சாமி பார்க்க பந்தாவா இருப்பாரு. நல்ல உசரம். திடகாத்திரமான ஒடம்பு. மாம்பழம் மாதிரி நெறம். கருகருன்னு முறுக்கின மீசை, கிருதாவத் தொட்டுக்கிட்டிருக்கிற மாதிரி வெட்டரிவா கணக்கா இருக்கும். வெள்ளயும் சொள்ளையுமா வேட்டிய கட்டி, பைஜாமா சட்டையப் போட்டுக்கிட்டு, வேட்டியோட ஒரு மொனையை இடது கையால மடக்கிப் புடிச்சிகிட்டு நிமிர்ந்து நடந்தாருன்னா பாத்துக்கிட்டே இருக்கணும் போலருக்கும். ஆனா கொணத்துல அப்படியே நேருக்குமாறா இருப்பாரு. எப்பவும் மனசுல ஒரு கிருத்துருவம், வக்கிரம் ஓடிக்கிட்டே இருக்கும். எவனுக்கு, எங்க, எப்ப வேட்டு வக்கலாம்ன்னு நெனச்சிக்கிட்டே இருக்கற ஆளப்பத்தி வேற என்னத்த சொல்லிக்கிடுறது? கெட்டகுணம், கெட்டநடத்தை கூடவே பொறந்தது. பொறாமை, சூழ்ச்சி, வஞ்சகம், அடாவடி, திமிருன்னு பொழங்குற மனுசங்கிட்டே ஈரத்தை எப்பிடி எதிர்பார்க்க முடியும்? சுருக்கா சொல்லணும்னா அச்சு அசலான கடஞ்செடுத்த கல்லு மனசுக்காரன். கல்லாவது கரையும். இவரு கரைய மாட்டாருங்கற அடிச்சிச் சொல்லலாம்.

அன்னிக்கு சாயந்தரம் பொன்னுசாமி வூடு வந்து சேத்தப்ப, செல்வம் நல்லா அசந்து தூங்கிக்கிட்டிருந்தான். வீசுற காத்துல செல்வத்தோட முடிக்கற்றைங்க ஒன்னோட ஒன்னா குதூகலிச்சி உறவாடிக்கிட்டிருந்திச்சி. பொன்னுசாமி அவனயே வச்சக் கண்ணு வாங்காம பாத்துக்கிட்டிருந்தான். அவனைப் பார்க்க பார்க்க மனக கொதிச்சிச்சி. அழுகையும், ஆத்திரமும் தொண்டைய அடச்சிக்கிட்டு நின்னுச்சி. செல்வத்தோட தலைய தூக்கி தன்னோட மடியில வச்சிக்கிட்டு, மொகத்த வருடுனான். தலமுடியக் கோதி, மொதுவ தொட்டு தடவிக் கொடுத்தான். மொதுவுல அஞ்சிதல பாம்புமாரி பதிஞ்சி கெடந்த வீராச்சாமியோட அஞ்சி வெரலும் படமெடுத்த ஆடறமாரி தோனிச்சி. பாம்போட தலையிலதான் வெசம் இருக்கும்ங்கறமாரி வீராச்சாமிக்கு அஞ்சி வெரல்லயும் கொடிய நஞ்சு. பொன்னுசாமி அடைஞ்ச வேதனக்கி அளவில்ல. கைரேகை அதை மேலும் கௌறி விட்டு ரணப்படுத்துனிச்சி.

பொன்னுசாமி மனசுக்குள்ளாற குறுக்கும் நெடுக்குமா என்னென்னவோ எண்ணங்க அலயலயா நவந்து ஓடினிச்சி. ஒரே மவன். செல்ல மவன். ஒரு நாற்காலி வேணும்ன்னு கேட்டுக்கிட்டே இருக்கான். இந்த நாற்காலி இலட்ச ரூவா இல்ல. ஆனாலும் நம்ம வருமானத்துல வாங்கிக் கொடுக்க முடியல. கொடுத்திருந்தா ஏன் அங்கெல்லாம் போயி உக்காரப் போறான்? இந்தக் கேடுகெட்டப் பயலுக்கும் நாற்காலின்னா ஏன்ந்தான் இப்படி ஆலா பறக்குறான்னு தெரியில. நாற்காலி ஆச இவனப் பைத்தியம்மாரி ஆக்கிருச்சி. எங்கக் கெடக்குது, எவன் வீடுன்னு கூட யோசிச்சிப் பார்க்குறதில்ல. ஏறி ராசா கணக்கா உட்காந்திடுறான். புழுத்த தலைக்கி பொற்கிரிடம் கேக்குறமாரி நம்ம நெலமக்கி இந்த ஆசயெல்லாம் வரலாமான்னு புரியல.

பள்ளிக்கூடத்து வாத்தியார் நாற்காலியிலேயே ரெண்டு நாளக்கி முன்னாடி உக்காந்திட்டான்னு மோலாசு வேற. நம்ம பரம்பரைலயே யாருக்கும் இந்த நாற்காலி ஆச வந்ததில்ல. இவன் மட்டும் எப்பிடித் தப்பிப் பொறந்தான்னே புரியல. நானும் யோசிச்சி யோசிச்சிப் பாக்குறன்,. இவனுக்கு எப்படித்தான் வந்திச்சோ இந்த நாக்காலி மோகம்ன்னு ஒன்னும் புரிபட மாட்டேங்குது.
அப்பிடியும் சாயந்திர நேரத்துல நான் ஒண்ணும் சும்மா இருக்கறதில்ல. தெனமும் அவனோட கொஞ்சி கொஞ்சி வௌயாடுறேன். மொதுவுல தூக்கிக்கிட்டு உப்பு மூட்டோய்… உப்பு மூட்டோய்னு கூவுறேன். வேற எவன்ய்யா இந்தத் தெருவுல மவனோடு சேர்ந்து இப்பிடி உல்லாசமா வெளயாடுறான்? ஆனா எதுலயும் இவன் திருப்தி அடையறதில்ல. உப்பு உப்போய்ன்னு சொல்லி முடிக்கிறதுக்குள்ள என்னை எறக்கி விடும்பான். ஏங்கண்ணுன்னு கேட்டா, எப்பப்பா எனக்கு நாற்காலி வாங்கித் தருவேம்பான். சரி இப்ப உப்பு வௌயாடுவோம்…

அப்புறம் பாப்போம்ன்டான்னா கேக்க மாட்டான்… அடம் புடிப்பான். எனக்கு உப்புமூட்ட வெளாட்டு புடிக்கல… ப்போ… எனக்குச் சேருதான் வேணும்… ச்சேரு தான் வேணும்.. நம்ம தெருவுல கண்ணன் வூட்ல வாரச்சீட்டுல சேர்ந்துதான ச்சேரு வாங்கினாங்க… நீயும் அதுமாரி வாங்கினா என்னான்னு கேட்டுட்டு ஓன்னு அழ ஆரம்பிச்சிடுவான். அப்பக்கி, அவன சமாதானப் படுத்துறத்துக்காக நாளக்கி வாங்கிடுவோம்… நாளக்கி வாங்கிடுவோம்ன்னே பல காலத்த நவத்தியாச்சி… ஆனா இன்னிக்கி நடக்காத கண்றாவியெல்லாம் நடந்தே போச்சி.
அப்பிடிஇப்பிடின்னு பொன்னுசாமியும் வாரச்சீட்டுல சேந்திட்டான். நோட்டுலப் பேரெழுதி கட்டுற பணத்த வரவு வக்கிறதுக்காவ அட்டையும் போட்டாச்சி. வாராவாரம் கய்யில கெடக்கிறது பத்தோ, இருவதோ எதுவாருந்தாலும் வரவு வச்சிடணும்னு மனசுக்குள்ள ஒரு வைராக்கியத்த ஏற்படுத்தி வச்சிருந்தான் பொன்னுசாமி. பாதித் தொகைக்கு மேல கட்டுன பெறவு புடிச்ச நாற்காலிய எடுத்துக்கிடலாமாம். மீதிய சில தவணைகள்ல கொஞ்சம்கொஞ்சமா அடைச்சிடலாம்ன்னு தவணைக்காரவுங்க சொல்லிட்டாங்க.

வாரந்தவறாம சீட்டு கட்டுறதுலயே குறியாருந்தான் பொன்னுசாமி. செலவுகள எல்லாம் கொறச்சிக்கிட்டான். ஒரு நாளக்கி ஒரு கட்டு பீடி வாங்கிக் குடிச்சவன் இப்பப் பாதியா கொறச்சிட்டான். கடக்கிப் போயி டீ குடிக்கிறத விட்டிட்டு வீட்டுலயே வரக்காப்பிப் போட்டு குடிக்கப் பழகிட்டான். அரிசி, மொலவாசெலவு, காயிகறி வரக்கிம் எல்லாத்துலயும் அதிரடியா சிக்கனசிகாமணியா மாறிப் போனான். அவனுக்கு ஒரே எண்ணந்தான் இப்பக்கி. எதைக் கொறச்சாலும் சரி, எப்பாடு பட்டாவது சீட்ட கட்டிப்புடணும். பொன்னுசாமிக்கு நாற்காலி வாங்குறதுங்றது ஒரு இலட்சியக் கனவாவே கொழுந்து விட்டு எரிய ஆரம்பிச்சிட்டுச்சி
என்னக்கி சீட்டு கட்ட ஆரம்பிச்சாங்களோ, அதுலருந்தே செல்வம் கனவுல மெதக்க ஆரம்பிச்சிட்டான். அவனோட சின்ன வயசு மனசுல அது ரொம்ப ஆனந்தமாவே இருந்திச்சி. உள்ளுக்குள்ள அருவிமாரி கொட்ட ஆரம்பிச்சிடுச்சி. நாற்காலி வந்தபின்ன வூட்டுல எங்கப் போடுறது, அதுல ஆராரு உக்கார்றதுன்னெல்லாம் கூட அவன் தன்னோட பெத்தவங்கள்ட்டயும், நண்பர்கள்டயும் கற்பனையா பேச ஆரம்பிச்சிட்டான்.

தவணைங்க பொன்னுசாமி நெனச்சமாரி செரமம் கொடுக்கல. கடகடன்னு ஓட ஆரம்பிச்சிடுச்சி. மொத்தம் பதினைஞ்சித் தவணைகள்ல பத்துத் தவணைங்க கட்டியாச்சி. இன்னும் அஞ்சி தவணைங்கதான் பாக்கி. மொறப்படி ஏழு தவணைங்க கட்டினாலே பொருளை எடுத்துக்கலாம். ஆனா அப்ப நாற்காலி கைவசம் இல்லேன்னும் இன்னும் ரெண்டு மூணு நாள்ல வந்தப்பின்ன எடுத்துக்கலாம்ன்னும் தவணக்காரங்க சொன்னதால நாற்காலியோட வருகை தள்ளிப் போயிக்கிட்டே இருந்திச்சி.

பதினோறாவது தவணை கட்டுறப்ப பொன்னுசாமி கேட்டான்.
“நாற்காலி வந்திருச்சிங்களா? எப்ப எங்க கையிக்கி கெடக்கிம்?”
பொன்னுசாமியோட ஆர்வத்த புரிஞ்சிக்கிட்டு தவணைக்காரு மெல்லிசா சிரிச்சாரு. அந்தப் புன்னகையோடவே சொன்னாரு.
“நாளக்கி வந்து எடுத்துக்கங்க”.

அந்த வார்த்தைகளக் கேட்டதும் பொன்னுசாமிக்கு வானத்துல பறக்கமாரி இருந்திச்சி. பையன சேருல உக்காரவச்சி பாக்கறமாரி கற்பனை செஞ்சிக்கிட்டு அந்தச் சந்தோசத்த அனுபவிச்சான். சந்தோசம் கட்டுப்பாட்டுக்குள்ள வராம திமிறி நின்னுச்சி. வானுக்கும். மண்ணுக்குமா குதிக்கணும்போல இருந்திச்சி, பக்கத்துல நின்ன செல்வாவ அப்படியே அலேக்கா தூக்கி ரெண்டு கன்னத்துலயும் மாறிமாறி முத்தமிட்டுக்கிட்டே இருந்தான். பொன்னுசாமிக்கு கண்ணு கலங்கிப் போயிடுச்சி, “செல்வா… உனக்குப் புடிச்ச நாற்காலி நாளக்கி வந்திடும்ண்டா கண்ணு… இனிமே நிய்யி யாரு வீட்லயும் போயி உக்காரப்புடாது ஆமா… உனக்குத்தான்டா… உனக்கு மட்டுந்தான்டா அந்த நாற்காலி. நிய்யி உக்காந்து உக்காந்தே தேயுடா.. என்னோட கண்ணு குளிரன்னு..” உணர்ச்சிவசப்பட்டு பேசுனான் பொன்னுசாமி.

மறுநாள் சாயந்திரமா வேலை தலைமாட்டுலேர்ந்து முன்னமே வந்திட்டான் பொன்னுசாமி. பொட்டிக்குள்ளருந்த வேட்டி சட்டைய எடுத்துப் போட்டுக்கிட்டு புது மாப்பிள்ளை கணக்கா கௌம்பி போனான். செல்வத்துக்கும் அப்பாவோட போறதுக்கு ஆசதான். கெஞ்சிப் பாத்தான். ஆனா பொன்னுசாமி சேரையும் எடுத்துக்கிட்டு உன்னையும் அழச்சிக்கிட்டு வர்றது செரமமாருக்கும்ன்னு தடுத்துட்டான். அப்பா சொல்ற காரணத்தைப் புரிஞ்சிக்கிட்டான் செல்வம்.
வூட்ட விட்டு வெளில ஒத்த அடி எடுத்து வைக்கல. வெளயாடக்கூடப் போகல. சேரு ஞாபகமா வாசல்லயே உக்காந்திருந்தான். தெரு முனையை எட்டி எட்டிப் பார்த்துக்கிட்டே இருந்தான். அவங்கூட உக்காத்திருந்த பயலுங்ககிட்ட, நாற்காலியப் பத்தி சதா அளந்து விட்டுக்கிட்டேயிருந்தான்.

“டேய்… எங்கப்பா இந்நேரம் நாற்காலிய எடுத்திருக்கும்ண்டா… பஸ்சுல ஏறி இருக்கும்ண்டா… இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திடும்ண்டான்னெல்லாம் நேர்முக வர்ணனை செய்யுற மாதிரி பேசிக்கிட்டே இருந்தான்.

பொழுது சாஞ்சி லேசா இருட்ட தொடங்கனிச்சி. செல்வத்துக்கு மொகம் முழுசும் ஏக்க ரேகைக பரவத் தொடங்குனிச்சி. அப்பிடியே கண்ணசந்து தூக்கக் கலக்கத்தில தள்ளாடத் தொடங்குனான். ஆனாலும் கண்ண கசக்கிகசக்கி உக்காத்துக்கிட்டே தூங்கி விழுந்தான்.
“செல்வம் உங்க அப்பா வந்திட்டுடோய்ய்ய்ய்…”

யாரோ ஒரு சின்னப்பையன் கத்திக்கிட்டே ஓடி வந்தான். அவ்வளவுதான். தூக்கமெல்லாம் சுக்கு நூறா தெறிச்சி விழுந்திருச்சி. செல்வம் சட்டுன்னு எழுந்திருச்சி தெருவு மொகனய நோக்கி பரபரன்னு ஓட ஆரம்பிச்சிட்டான்.

பொன்னுசாமி அமைதியே உருவாகி மெல்லமா வந்துக்கிட்டே இருந்தான்.
“அப்பா… அப்பா….வந்திட்டியாப்பா”
செல்வம் ஓடித் தாவினான்.

“இங்கவாடி என்ந் தங்கம். இந்தாடி ஒனக்குப் புடிச்ச மிச்சரும், பூந்தியும்” ன்னு ரெண்டு பொட்டலத்த எடுத்தக் கொடுத்தான். செல்வத்த அப்படியே வாரி தூக்கிக்கிட்டான் பாசமா. வீட்ட நெருங்குறப்பவே, பொன்னுசாமி பொண்டாட்டி ஓடி வந்து வாங்கன்னு கூப்பிட்டவ. வெறுங்கையோட வாடிப்போன மொகத்தப் பாத்து பதறினா.

அவ்வளவுதான். அதுக்கு மேலயும் அவனால கட்டுப்படுத்த முடியல. தன்னையும் மறந்து துண்ட எடுத்து மொகத்தப் பொத்திக்கிட்டு “ஓ..”ன்னு அழ ஆரம்பிச்சிட்டான் பொன்னுசாமி.
“ஏங்க.. என்ன காரியம் செய்யிறியோ? அவன் சின்னப்புள்ளக்கி நேரா சும்மாருங்க”
பொன்னுசாமி மனைவி அவனைத் தடுத்துச் சமாளித்தாள். துண்டை முகத்திலிருந்து விலக்கிப் பார்த்த பொன்னுசாமி குமுறினான்.

“பாவிப் பயலுவ… ஏமாத்திப் புட்டானுவடி… கடைய காலிப் பண்ணிட்டுப் போயிட்டானுவளாம்… சீட்டுக் கட்டின எல்லாரும் வயிறெறிஞ்சிப் போயி கடை வாசல்லயே நிக்கிறாங்க…நாளக்கி நாளக்கின்னு அவன் நாள கடத்தினது இதுக்குத்தானா? எம் புள்ளக்கி கடைசி வரயிமே ஒரு நாற்காலி கூட வாங்கிக் கொடுக்க வக்கில்லாத பாவியாயிட்டேனே..”னு குழந்தை மாதிரி விசும்பி விசும்பி அழுதான்.

செல்வம் பாவம். புள்ள கெடந்து எதுவும் புரியாம தவிச்சான். அப்பா அழுவுறதப் பாத்து நாற்காலியையே மறந்துப் போயி நின்னான். செல்வத்தோட அம்மாவும் கண்கலங்கி அழுதப்ப செல்வத்துக்கும் தாங்க முடியல. அவனும் அழுதான். வீடே பேரோலமாய் ஒலித்தது.
புள்ள அழுவுறானேன்னு பொன்னுசாமி அழுகய நிறுத்திட்டு செல்வத்த அணைச்சிக்கிட்டு கண்ணத் தொடச்சி விட்டான். யாரோ செய்யச் சொன்னமாதிரி செல்வம் தானாவே அப்பா மொதுகுல போயி சாஞ்சி கட்டிப் புடிச்சிக்கிட்டான்.

பொன்னுசாமி அவனது கால்களைப் பற்றி முதுகிற்கு வாகாக ஏற்றிக்கொண்டு கூவினான்.
“உப்பு உப்போய்… உப்பு உப்போய்… உப்பு உப்போய்…ய்”

பொன்னுசாமிக்கு நடந்த எதையும் ஜீரணிக்க முடியல. மேலும் மேலும் ஆத்திரமும் அழுகையும் பொங்கிக்கிட்டு வந்துச்சி, குமுறிக்கிட்டே கூவிக்கிட்டிருந்தான்.
உப்பு… உப்..போ..ய்…. உப்.பு… உப்போ… ய்..

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *