லசந்தவின் படுகொலையில் பொன்சேகாவுக்குத் தொடர்பு; தப்பிக்கவே மகிந்த மீது சேறு பூசுகிறார்

தன் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பித்துகொள்வதற்காக ராஜபக்ஸக்களை நோக்கி குரைக்கும் பணியை அரசாங்கத்திடமிருந்து பொன்சேகா பொறுப்பெடுத்துள்ளரா என்று சந்தேகிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் ஊடக பேச்சாளரான சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
சிங்கத்திற்கும் மரநாய்க்கும் இடையே பாரிய வேறுபாடு உள்ளது என்பதனை பொன்சேகா புரிந்துகொள்ள வேண்டும். சிங்கத்திற்கு வயது போனாலும், நோய் ஏற்பட்டாலும் புற்களை தின்னாது. ஆனால் மரநாய் என்ற விலங்கு மாமிச உண்ணி என்று கூறினாலும் விஞ்ஞாபூர்வ அறிக்கைகளின்படி சில மரநாய்கள் மரங்களின் பட்டைகளையும் தின்னும். இதனால் அவை நாயாகும் சந்தர்ப்பங்களும் உண்டு. ஆனால் சிங்கம் ஒருபோதும் நாயாகாது என்பதனை அவர் புரிந்துகொள்ள வேண்டும்.
அவருக்கு இப்போது ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் நாங்கள் கவலையடைகின்றோம். மக்கள் மத்தியில் தன்னை வீரர் போன்றும், மகிந்த ராஜபக்ஸவையை துரோகியெனவும் கூற முயற்சிக்கும் அவர் கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் வீதிகளில் தனது குண்டுபட்ட வாகனத்தை காட்சிப்படுத்தி பிரசாரம் செய்தாலும் அவரின் கூட்டத்தில் எவரும் கலந்துகொள்ளவில்லை. இதன்மூலம் தன்னைப்பற்றி சமூகம் என்ன நினைக்கின்றது என்பதனை புரிந்துகொள்ள முடியும். ஆனால் மகிந்த ராஜபக்ஸவை இப்போதும் எவ்வளவு பேர் பார்க்க வருகின்றனர். இதனால் சிங்கம் எப்போதும் சிங்கமாகவே இருக்கும்.
பொன்சேகா போன்றோரின் கருத்துக்களுக்கு மகிந்த ராஜபக்ஸ பதிலளிக்கப்போவதில்லை. அவர் சிங்கமாகவே இருக்கின்றார். தான் தலைமை வகித்த இராணுவத்தையே காட்டிக்கொடுத்த பொன்சேகா இப்போது மகிந்த ராஜபக்ஸவை தூக்கில் போட வேண்டும் என்று கூறுகின்றார். மகிந்த ராஜபக்ஸ இறுதி நேரத்தில் யுத்த நிறுத்தத்திற்கு முயன்றதாக கூறியுள்ளார். அப்படியென்றால் ஏன் நீங்கள் இறுதி யுத்தத்தின் போது சீனாவுக்கு சென்றிருந்தீர்கள். நீங்களே யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்திருந்தால் ஏன் உங்களுக்கு எதிராக போர்க் குற்றச்சாட்டு முன்வைக்கப்படவில்லை என்று கேட்கின்றேன். இதன் ரகசியம் என்ன? ஐநா மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்படும் தீர்மானங்களில் பொன்சேகா வெள்கைக்கொடி தொடர்பில் குறிப்பிட்ட கருத்துக்களே பிரதானமானதாக இருக்கின்றன. அப்படியென்றால் யார் இராணுவத்தை காட்டிக்கொடுத்தது. என்பதனை சிந்திக்க வேண்டும்.
பொன்சேகா இராணுவத் தளபதியாக மட்டுமே இருந்தார். படைகளின் தளபதியாக ஜனாதிபதியே.இருந்தார். தீர்மானங்களை எடுப்பவர் ஜனாதிபதியே.
இன்னுமொரு ரகசியத்தை கூறுகின்றேன். ஜோசப் மைக்கல் பெரேரா எதிர்க்கட்சி பிரதம கொரடாவாக இருந்த காலத்தில் பீபீசி செய்தி சேவைக்கு வழங்கப்பட்ட நேர்காணலில் லசந்த விக்கிரதுங்கவை கொலை செய்ய சரத்பொன்சேகாவே டீமொன்றை போட்டவர் என்று கூறியிருந்தார். இந்நிலையில் சந்தேகமொன்று உள்ளது. திசைக்காட்டி அரசாங்கத்தால் மகிந்த ராஜபக்ஸவை நோக்கி குரைப்பதற்கு இவர் தூண்டப்பட்டுள்ளமையானது தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மூடி மறைப்பதற்காகவா என்ற சந்தேகமும் உள்ளது. லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவ்வேளையில் தான் தப்பித்துக்கொள்வதற்காக ராஜபக்ஸவையை நோக்கி குரைக்கும் பணியை பொன்சேகா பொறுப்பெற்றுள்ளாரா என்ற சந்தேகங்கள் உள்ளன என்றார்.
![]()