ஐ.நா.மனித உரிமைப் பேரவையில் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காது; யாழில் கஜேந்திரகுமார் எம்.பி. தெரிவிப்பு

இலங்கையில் இடம்பெற்ற இன அழிப்புத் தொடர்பில் சர்வதேச நீதிமன்றத்தில் உரிய சாட்சியங்கள் வழங்கப்பட்டு இனப்படுகொலையாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது தான் எங்கள் கட்சியின் குறிக்கோள். இதனை விடுத்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை போன்ற அரங்குகளில் தமிழ்மக்களின் பொறுப்புக் கூறல் விவகாரத்தைப் பேசிக் கொண்டிருக்கும் வரை இந்த விவகாரத்தைச் சர்வதேச நீதிமன்றத்தின் முன் கொண்டு செல்லும் செயல் நடைபெறாது. தமிழ்மக்களுக்கான நீதி கிடைக்காது. எனவே, கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட கோணத்தில் ஏற்று இதுசம்பந்தமாக ஆராய்ச்சி செய்து செயற்படுவதற்கு எம் மத்தியில் யார் முன்வந்தாலும் எங்களுடைய முழு ஒத்துழைப்புமிருக்கும் எனத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
கடந்த- 2006.01.02 ஆம் திகதியன்று திருகோணமலை நகரத்தின் காந்தி சிலையருகில் வைத்துப் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களுக்கு நீதிகோரி நீண்டகாலமாகப் போராடி வந்த படுகொலையான மாணவரான ரஜிகரின் தந்தையார் மருத்துவர் காசிப்பிள்ளை மனோகரன் அண்மையில் அமரத்துவமடைந்திருந்தார். அன்னாருக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், இன்றுவரை நீதி மறுக்கப்பட்டவர்களை நினைவு கூரும் வகையிலும் மக்கள் செயல் தன்னார்வ அமைப்பு ஏற்பாட்டு செய்திருந்த கானல் நீதி நிகழ்வு நேற்றுத் திங்கட்கிழமை யாழ்ப்பாணம் தந்தை செல்வா மண்டபத்தில் மக்கள் செயல் தன்னார்வ அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒரு அரசை நீதிமன்றத்தின் முன் நிறுத்தக் கூடிய ஒரேயொரு கட்டமைப்பாகச் தற்போது சர்வதேச நீதிமன்றம் மாத்திரமே காணப்படுகிறது. எனினும், சர்வதேச நீதிமன்றத்தில் ஒரு வழக்கை இன்னொரு அரசு மாத்திரமே தாக்கல் செய்ய முடியும். வேறு எவராலும் வழக்கைத் தாக்கல் செய்ய முடியாது. தற்போதுள்ள சூழலில் இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதற்கு எந்தவொரு நாட்டு அரசும் தயாராக இல்லை. இவ்வாறான செயற்பாட்டை நாடுகள் முன்னெடுப்பதற்கு அழுத்தங்கள் வழங்கப்பட வேண்டும். இவ்வாறான அழுத்தங்களை முன்னெடுப்பதற்கு ஒரேயொரு வழியாகச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மாத்திரமே காணப்படுகிறது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் 2002 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் அவர்களுடைய செயற்பாடுகளை எடுத்துப் பார்த்தால் ரோம் சாசனத்தில் கையொப்பமிடாத நாடுகளையும், குற்றச்செயல்களில் ஈடுபடுகின்ற தரப்புக்களையும் ஏதோவொரு வகையில் நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
மியன்மாரில் ரோஹிங்கியா இன மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள குற்றங்களைத் தற்போது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது பாதுகாப்புச் சபை ஊடாக நடந்தவொரு விடயமல்ல. மியன்மாரும் இலங்கை போன்று ரோம் சாசனத்தில் கைச்சாத்திடவில்லை. பாதுகாப்புச் சபை ஊடாகச் செல்வது சாத்தியமில்லாத பாதை எனக் கருதி மியான்மாரில் ரோஹிங்கியா இன மக்களுக்கெதிராக இடம்பெறும் இனப் படுகொலை, போர்க் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கெதிரான குற்றங்கள் காரணமாக அங்குள்ள மக்கள் தங்கள் உயிர்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ரோம் சாசனத்தில் கைச்சாத்திட்டுள்ள பங்களாதேஷ் நாட்டுக்குள் அகதிகளாய் செல்கிறார்கள். இதன்காரணமாகச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு நியாயாதிக்கம் காணப்படுகின்றது என்று சுட்டிக்காட்டி மியான்மாரில் ரோஹிங்கியா இன மக்களுக்கெதிராக நடக்கும் அனைத்துக் குற்றங்களையும் விசாரிக்கும் நிலைமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
![]()