நிறைவேறவுள்ள ஜெனீவா தீர்மானம் மிக மோசமானது; சுமந்திரனுக்கு இதில் பங்குண்டு; கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு

இலங்கை தொடர்பில் 2012 இல் இருந்து இதுவரை நிறைவேற்றப்பட்ட ஜெனிவா தீர்மானங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏமாற்றமாக அமைந்திருந்தும் கூட இந்த வருடம் நிறைவேறவுள்ள தீர்மானம் அவை அனைத்தையும் விட மிகவும் மோசமான, பலவீனமான ஒரு தீர்மானம் என அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
ஜெனீவா தீர்மானம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறிய அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 2012 ஆம் ஆண்டிலிருந்து ஜெனிவா அமர்வுகளில் நிறைவேற்றப்படுகின்ற தீர்மானங்களும் எடுக்கின்ற நடவடிக்கைகளும் மோசமான ஏமாற்றமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைந்திருந்தும்கூட இந்த வருடம் நிறைவேற்றப்படவுள்ள தீர்மானம் 2012 இல் இருந்து இதுவரை நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விட மிகவும் பலவீனமான ஒரு தீர்மானம்.
ஒரு வருடத்தை கடந்த தேசிய மக்கள் சக்தி அரசு பொறுப்பு கூறல் சம்பந்தமாகவும் தமிழ் மக்களின் இன பிரச்சினை சம்பந்தமாகவும் எந்த விதத்திலும் ஒரு முன்னேற்றத்தை ஏற்படுத்தாமல் மாறாக இதற்கு முதல் ஆட்சியில் இருந்த இனவாத அரசாங்கங்கள் செயல்பட்டதை போன்றே அதே நிலைப்பாடுகளையும் நடவடிக்கைகளையும் தொடர்கின்றதாகத் தான் இருக்கிறது.
அப்படி இருக்கின்ற நிலையிலும் ஜெனீவாத் தீர்மானம் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்படுவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்கின்ற அடிப்படை துரோகம். முழுக்க முழுக்க தங்களுடைய நலன்கள் சார்ந்த முடிவுகளாக இந்த நாடுகள் எடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த விதத்திலும் நன்மை கொடுக்காத,மாறாக நிரந்தரமாகவே பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய வகையிலே இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதை உண்மையில் நாம் கண்டிக்கிறோம்.
அந்த வகையில் செம்மணியிலே சுழற்சி முறையில் போராடிக் கொண்டிருந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய குடும்பங்கள் இந்த வருட ஐ.நா.வின் அறிக்கையை எரித்தார்கள்.
2009 ஆம் ஆண்டில் இருந்து பொறுப்புக்கூறலுக்கு அரசாங்கத்தை வலியுறுத்தி உள்ளக ரீதியாக செய்ய வேண்டும் எனக் கேட்டும் அந்த கோரிக்கையை முன் வைக்கின்ற வகையிலும் சர்வதேச கோணத்தில் எந்த விதமான பொறுப்பு கூறலும் வலியுறுத்தாமல் இருப்பது இந்த தீர்மானம் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மக்களை ஏமாற்றுகிறது.
இந்த தீர்மானத்தை ஆதரித்துள்ள சுமந்திரன் தலைமையிலான செயற்பாடுகளை கண்டறிய வேண்டும். சுமந்திரன் தமிழ் அரசுக் கட்சியின் செயலாளராக பதவி ஏற்ற பின்னர் பிரித்தானியாவிற்கு இரகசியமாக சென்று இந்த வரைவை தயாரிப்பதில் பணியாற்றினார்.
பாதிக்கப்பட்ட தரப்பிற்கு சார்பான ஒரு வரைவை உருவாக்குவதற்கான முயற்சியை நிராகரித்து தமிழ் அரசுக் கட்சியின் எட்டு பாராளுமன்ற உறுப்பினர் குழுவை விலத்தி வைத்திருந்து தீர்மானத்தின் இறுதி வடிவங்களை வரைந்திருந்த சூழலில் அவர் அந்த தீர்மானத்தை ஆதரித்து நிறைவேற வேண்டும் என்ற கருத்துக்களையும் கூறி பச்சைக் கொடி காட்டுகின்றார்.
மக்களால் நிராகரிக்கப்பட்ட நபர் தன்னுடைய செல்வாக்கை கட்சிக்குள் பயன்படுத்தி மக்களால் தெரிவு செய்யப்பட்ட தரப்புகளுடைய செல்வாக்கை தன்னுடைய தோல்வி அடைந்த போக்குக்கு பயன்படுத்துகின்ற அவல நிலையை நாங்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிப்படையாக சுமந்திரன், சிவஞானம் போன்றவர்களின் படுமோசமான செயற்பாடுகளை விளங்கிக்கொண்டு மக்கள் நிராகரிக்கின்ற தரப்புகளை கட்சிக்குள் எதிர்ப்பதற்கு முன்வர வேண்டும். அல்லது அவர்களும் சேர்ந்து இந்த படுமோசமான செயற்பாடுகளை தமிழ் மக்களுக்கு எதிராக செயலாற்றுகிறார்கள் என்ற முடிவுக்கு நாங்கள் வர வேண்டி இருக்கும் என்றார்.
![]()