ஜெனீவாவில் புலிக் கொடி!; கொழும்பில் சுவிஸ் தூதரகத்திடம் முறைப்பாடு

ஜெனீவாவில் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை ஏற்பாடு செய்வதன் மூலம் பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதுடன் விடுதலைப் புலி உறுப்பினர்களும் தமிழ் புலம்பெயர்ந்தோரும் இவ்வாறான செயல்களுக்கு தொடர்ந்து அனுமதிக்கப்படுவது ஏன் என்பது குறித்து விளக்கம் கோரி கொழும்பில் உள்ள சுவிற்சர்லாந்து தூதரகத்திடம், போர்வீரர்களைப் பாதுகாப்பதற்கான அமைப்புகளின் கூட்டமைப்பு ஒரு கடிதத்தை கையளித்துள்ளது.
ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகளின் போது, ஐக்கிய நாடுகள் சபை வளாகத்திற்கு அருகாமையில் ஜெனீவாவில் விடுதலைப் புலிகளின் கொடிகள்,சின்னங்கள் மற்றும் அதன் தலைவர்களின் உருவச் சின்னங்களை பொதுவில் காட்சிப்படுத்துவதற்கு எதிராக இந்தக் குழு கடுமையான எதிர்ப்பை தெரிவித்தது.
தற்கொலை குண்டுவெடிப்புகள் , அரசியல் படுகொலைகள், இனச் சுத்திகரிப்பு, பொதுமக்களை படுகொலை செய்தல், சிறுவர்களை ஆட்சேர்ப்பு செய்தல் ,போதைப்பொருள் கடத்தல் மற்றும் மிரட்டிப் பணம் பறித்தல் போன்றவற்றின் மூலம் பயங்கரவாத நிதியுதவி ஆகியவற்றை விடுதலைப் புலிகள் புலம்பெயர்ந்தோர் மூலம் நடத்தியதாக அவர்கள் கொழும்பில் உள்ள சுவிற்சர்லாந்து தூதரகத்திற்கு தெரிவித்துள்ளனர்.
தேசிய மக்கள் கட்சி அரசாங்கம் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதில் ஆர்வம் காட்டவில்லை என்று தோன்றுவதால், இந்தப் பிரச்சினையை சுவிற்சர்லாந்திடம் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இருப்பதாக போர்வீரர்களைப் பாதுகாப்பதற்கான அமைப்புகளின் கூட்டமைப்பின் மூத்த செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
சுவிஸ் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 260 இன் கீழ், பயங்கரவாத கட்டமைப்புகளை மகிமைப்படுத்தும் அல்லது புதுப்பிக்கும் பிரசாரம் மற்றும் இலச்சினையுடன் கூடிய செயல்கள் உட்பட, ஒரு குற்றவியல் அல்லது பயங்கரவாத அமைப்பின் நடவடிக்கைகளில் பங்கேற்பது அல்லது ஆதரிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது என்றும் அவர்களின் எதிர்ப்புக் கடிதம் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்தோடு, பிரிவு 260 பயங்கரவாதத்திற்கு நேரடி அல்லது மறைமுக நிதியுதவியையும் தடை செய்கிறது. பிரிவு 261 வெறுப்பைத் தூண்டுவதையும் குற்றச் செயல்களைப் போற்றுவதையும் தடை செய்வதுடன் ஐ.நா. பாதுகாப்பு சபைத் தீர்மானம் 1373 (2001), சுவிற்சர்லாந்து உள்ளிட்ட நாடுகள் இலச்சினைகளுடன் பிரசாரம் செய்வது உட்பட அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்திற்கான ஆதரவை அடக்குவதை கட்டாயப்படுத்துகிறது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
![]()