சுயநிர்ணய உரிமைக்காகப் போராடிய பலருக்கும் அங்கீகாரம்; ஈழத் தமிழர்களை ஐ.நா.வும் சர்வதேசமும் புறக்கணிப்பு

“தமிழ் மக்கள் போன்று தமது சுயநிர்ணய உரிமைக்காக போராடிய – எரித்திரியர்கள், கிழக்கு தீமோரினர்கள், தென் சூடானியர்கள், கோசவாவினர்கள ஐ.நா.வினாலும், பெரும் தொகையான அங்கத்துவ நாடுகளின் அங்கீகாரத்தினாலும் தமது வெளிவாரியான உரிமையை பெற்றுள்ளனர். ஆனால் தமிழீழ மக்கள் ஐ.நா.வினாலும், சர்வதேசத்தினாலும்
மிக நீண்ட காலமாக அலட்சியப்படுத்துவது மிக கவலைக்குரிய விடயம் என தமிழர் மனித உரிமைகள் மையத்தின் பொது செயலாளர் ச.வி.கிருபாகரன் ஜெனிவாவில் கவலை வெளியிட்டுள்ளார்.
ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா.மனித உரிமை சபையின் 60 வது கூட்ட தொடரில் பொது விவாதம் ஒன்றில் ‘வியன்னா பிரகடன செயல் திட்டம்’ என்ற தலைப்பில் பேசியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இங்கு தொடர்ந்து பேசிய கிருபாகரன்;
வியன்னா பிரகடனம் மற்றும் செயல் திட்டம் (VDPA) என்பது ஆஸ்திரியாவின் வியன்னாவில், 1993ம் ஆண்டு ஜூன் மாதம் 14-25 ஆம் திகதிகளில் நடைபெற்ற உலக மனித உரிமைகள் மாநாட்டில் உருவானது.
சர்வமத சர்வதேச நிறுவனத்தின் உறுப்பினர்கள், குறிப்பாக தமிழ் மனித உரிமை மையம் (TCHR) இந்த மாநாட்டில் பங்கேற்றது.இதில் பல தசாப்தங்களாக தமிழ் தேசத்தின் மீது இலங்கையில் நடத்தப்பட்ட அட்டூழியங்களை காட்சிப்படுத்த ஒரு கண்காட்சி நடைபெற்றது.
வியன்னா பிரகடனம் மற்றும் செயல் திட்டத்தின் பத்தி இரண்டில் (2), ‘அனைத்து மக்களுக்கும் சுயநிர்ணய உரிமை உண்டு. அந்த உரிமையின் மூலம் அவர்கள் தங்கள் அரசியல் நிலையை சுதந்திரமாக தீர்மானிக்கிறார்கள். மேலும் அவர்களின் பொருளாதார, சமூக மற்றும் கலாசார வளர்ச்சியை சுதந்திரமாகத் தொடர்கிறார்கள்’ என்று கூறுகிறது. மேலும் பத்தி பதினைந்து (15) அனைத்து வகையான இனவெறி மற்றும் இனப் பாகுபாடு, அந்நிய வெறுப்பு மற்றும் தொடர்புடைய சகிப்பின்மை ஆகியவற்றை விரைவாகவும் விரிவாகவும் நீக்குவது சர்வதேச சமூகத்திற்கு முன்னுரிமை அளிக்கும் பணியாகும் என்று கூறுகிறது. இது ஐ.நா. உறுப்பு நாடுகளால் நடைமுறையில் உள்ளதா?
உதாரணமாக இலங்கையில் ஈழத் தமிழர்களின் இன போராட்டத்தின் உண்மைகளை ஐ.நா. மற்றும் உறுப்பு நாடுகளால் தீர்க்கப்பட்ட எரித்திரியர்கள், கிழக்கு திமோர், தெற்கு சூடான் மற்றும் கொசோவன் போராட்டங்களுடன் ஆராய்ந்தால், அவை ஈழத் தமிழர்களின் போராட்டம் போலவே இருக்கின்றன. ஆனால் இலங்கைத் தீவில் உள்ள ஈழத் தமிழர்கள், ஐக்கிய நாடுகள் சபையால் சமமாக நடத்தப்படவில்லை என்பது ஏமாற்றமளிக்கிறது.
வியன்னா பிரகடனம் மற்றும் செயல் திட்டம் பகுதி பி, பத்தி, இருபத்தி நான்கு (24), இன அழிப்பு நடைமுறையை விரைவாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அனைத்து நாடுகளும் தனித்தனியாகவும் கூட்டாகவும் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறது.
இருப்பினும், ஆபிரிக்கா, ஆசியா, மேற்கத்திய நாடுகள் மற்றும் பிற நாடுகளில் உள்ள பல நாடுகள் இன்னும் இன அழிப்பு முறையைப் பின்பற்றுவதை நாம் காண்கிறோம். எனவே, தமிழ் மக்கள் போன்று தமது சுயநிர்ணய உரிமைக்காக போராடிய – எரித்திரியர்கள், கிழக்கு தீமோரினர்கள், தென் சூடானியர்கள், கோசவாவினர்கள ஐ.நா.வினாலும், பெரும் தொகையான அங்கத்துவ நாடுகளின் அங்கீகாரத்தினாலும் தமது வெளிவாரியான உரிமையை பெற்றுள்ள நிலையில், தமிழீழ மக்கள் ஐ.நா.வினாலும், சர்வதேசத்தினாலும் மிக நீண்ட காலமாக அலட்சியப்படுத்துவது மிக கவலைக்குரிய விடயம் என அவர் தெரிவித்துள்ளார்.
![]()