“பாதகத்தி” … சிறுகதை…. மீனாசுந்தர்.

பாலக்காடு வீட்டிற்கு வந்த புதிதில் மணிவாசகம் செய்த முதல் வேலை அது தான். சட்டமிடப்பட்ட மனைவி காஞ்சனாதேவி புகைப்படம் நிலைவாசலுக்கு நேரே நடுவீட்டில் ஆணியில் தொங்கிக் கொண்டிருந்தது. அதில் சந்தன மாலையை எடுத்துப் போட்டு முகம் பொத்திக் குலுங்கினார். பிள்ளைகளுக்கு இன்னும் சரியாக விபரம் தெரியவில்லை. தந்தை அழுவதைப் பார்த்து அமைதிப் பள்ளத்தாக்கில் சவமாய் அவர்கள் வீழ்ந்து கிடந்தனர்.
மூத்தவனுக்கு விழிகளில் மெல்லிய பனிப்படலம். துக்கத்தைப் புரிந்து கொள்ளும் பருவமில்லை அவனுக்கு. இளையவனுக்கு ஒன்னரை வயது. விளையாட்டுப் புத்தி மாறாப் பாலும்பிஞ்சு. அவனைச் சோகம் தன் சிசுவெனத் தத்தெடுத்துக் கையிலேந்தித் தாலாட்டிக் கொண்டிருந்தது. துவண்டிருந்த அவன் அப்பாவின் இடப்புறம் உரசி நின்று கொண்டான். மணிவாசகம் அவனை ஆதரவாய் அணைத்துக் கொண்டார்.
மணிவாசகம் பல வீடுகள் மாறி விட்டார். ஒவ்வொரு வீட்டிலும் வெவ்வேறு பரிமாணங்கள். அவரால் மாற்றிக் கொள்ள முடியவில்லை. அப்படிச் செய்ய வேண்டிய மன நெருக்கடியில் அவர் இருந்தார். அருகிருப்பவர் அவரின் வினோதச் செயல் கண்டு மனக் கூச்சமடைவதும் சிலர் நெகிழ்வதும் வழக்கமாகியிருந்தன. அவ்விடம் சிலர் உரையாடிக் கொள்வதுண்டு.
“இருந்தாலும் யிந்த மனுசன் ரொம்ப மோசம்ய்யா. எதுனா இருந்தா தான் இன்னாங்குறன்? தங்க ஊசின்னா வயித்துலயா குத்திக்கின முடியும்? இவ்ளோ பாசங் கூடாதுய்யா? போயிஞ் சேந்துட்டா புண்ணியவதி. அவெ திரும்ப வரப் போறாளா? காரியம் முடிஞ்சி கை ஈரங் காய்றதுக்குள்ள அடுத்ததுக்கு அடிபோடத் தொடங்கிடுறனுக பாவிங்க. இவ்ரு இன்னுமோ சின்ன புள்ளயாட்டம் மூக்கச் சிந்திக்கிட்டு ஆமா..…”
வாழ்க்கையை அதன் போக்கில் வாழப் பழகிக் கொள்ளவது தான் உத்தமம். வேறென்ன செய்ய முடியும்? அது தான் ஆழ்மன அமைதிக்கு வழி. இயல்பின் ஆத்மார்த்த அழகு. நடந்ததை நினைத்து வாழ்வை ரணப்படுத்தி என்ன விளைய போகிறது? எல்லாம் அந்ததந்தக் காலத்துப் படிப்பினைகள். அவ்வளவு தான் என்பர் சில தெருக்கோடிச் சித்தர்கள்.
மணிவாசகத்திற்கு அப்படியொன்றும் வயதாகி விடவில்லை. அதிகமாகப் போனால் முப்பத்தைந்து இருக்கலாம். அவனுக்கு இருபத்தியிரண்டு ஆன போது அவன் தாய் தவறிப் போனார். வாழ்வு துயரமப்பிய இருளுக்குள் காணாமல் போனச் சிறு கடுகைப் போலச் சூன்யத்திற்குள் சிக்கித் தவித்தது. வீட்டில் விளக்கேற்றுவதற்கு ஒரு பெண் வேண்டும். அப்பா பிடியாய் நின்றார். மணிவாசகம் ஒத்துக் கொள்ளவில்லை. உறவினர்கள் சாரை சாரையாக வீட்டிற்குப் படையெடுத்தனர். அவர்கள் மணிவாசகத்தைக் கரைத்தனர். “அப்பாவோட ஆச நியாயமானது தான். இன்னும் ரெண்டு வருசங்க போகட்டும்“
அம்மாவின் துக்கம் மனதைப் பிழியத் தேம்பிப் பதிலிறுத்தான்.
பெண் இல்லா வீடு பேயடங்கும் சத்திரமென ஆழமாக நம்பினார் அப்பா. வேண்டும் போது ஒரு வாய் தண்ணீர் கொடுக்க வீட்டிற்கு லட்சுமியாய் ஒரு பெண் அவசியமென்பது அவர் அனுபவப்பாடம்.

“பொம்முணாட்டி இல்லியின்னா ஊடு ஊடாவா ருக்கும்? இருட்டடஞ்சி அவுஞ்சிப் பொயிடும். தரித்திரியம் ஜம்பமா வந்து நடு ஊட்ல குந்திக்கிணும். தெரியாதா?”
சதா அவர் அச்சமூட்டி வலியுறுத்திக் கொண்டே இருந்தார். அடிக்க அடிக்க அம்மியும் நகரும், கரைக்க கரைக்க கல்லும் கரையும். மணிவாசகம் கரைந்தான். திருமண ஏற்பாடுகள் நிகழ்ந்தேறத் தொடங்கின.
காஞ்சனாதேவி பார்க்க லட்சணமாக இருந்தாள்.
இளமை பொங்கி வழிய மூக்கும் முழியுமாய்த் திரண்டு நின்றாள். நல்ல நிறம். அளவெடுத்துச் செய்ததைப் போன்ற நளின உடல்வாகு. பின்புறத்தில் தாளம் இசைக்கும் அடர்நீளக் கூந்தலில் ஒரு தேவைதையாக ஜொலித்தாள். தன் இளமை தாகத்தைப் பக்குவமாய் ஒதுக்கி வைத்துவிட்டு சிந்தித்தான் மணிவாசகம்.
எதுவும் இப்போதைக்கு முக்கியமில்லை. தந்தையை நன்றாய்ப் பேணிக் கவனித்துக் கொள்ள வேண்டும். புரிந்து நடக்க வேண்டும். வாழ்வென்றால் ஏற்ற இறக்கம் இருப்பது நியதி. கடைசிவரை உடலும் உயிருமாய் இன்ப துன்பங்களில் கைகோர்த்து நிற்க வேண்டும்.
வாழ்ந்து சலித்த அனுபவஸ்தனைப் போல நிதானித்தான் மணிவாசகம். பெண்ணை அப்பாவுக்கு மிகவும் பிடித்து விட்டது. பையன் அப்பனைப் போல் சிந்திக்கிறான். முறை மாப்பிள்ளைகள் கிண்டிலடித்துச் சிரித்துக் கொண்டார்கள்.
ஒரு சுப நாளில் திருமணமும் முடிந்து போயிற்று.
காஞ்சனாதேவி ஏமாற்றவில்லை. எதிர்பார்த்ததை விடவும் கூடுதலாக நடந்து கொண்டாள். அன்பால் வீட்டை நிறைத்தாள். உறவுகளை அனுசரித்துக் கொண்டாள். வீட்டிற்குப் புதிய ஒளி வந்திருந்தது. அதைக் காஞ்சனா ஒவ்வொரு செயலிலும் உணர்த்திக் கொண்டிருந்தாள். அப்பாவிற்கு ஏக திருப்தி. சந்தோசத்தில் மிதந்தார். அவருக்கு மகள் இல்லாக் குறையை நிறைவு செய்து கொண்டிருந்தாள் காஞ்சனா. அம்மா இழப்பின் துக்கத்திலிருந்து மீண்டு கொண்டிருந்தார் அப்பா. எங்கள் வீட்டிற்கு மகாலட்சுமி வந்துவிட்டாள் என்று வாயார ஊரெல்லாம் பெருமையாக உலாத்திக் கொண்டு திரிந்தார்.
திருமண வாழ்வின் சாட்சியாய் மறுவருடம் வியாகுலன் பிறந்தான். இரண்டு வருடம் கழித்துச் சின்னவன் நகுலன். இருவரும் இரண்டு அதிசய முத்துகளைப் போல வளர்ந்தனர். அப்பாவிற்குப் பேரன்களோடுப் பொழுது போக்கச் சரியாய் இருந்தது. பேரன்கள் தாத்தாவின் மடியில் இன்னொரு தாய்மையை உணர்ந்து கொண்டிருந்தனர். இரவில் அப்பாவுடனே தூங்கி எழுந்தனர். குழந்தைகள் பக்கத்திலில்லா இரவில் சரியாய்த் தூக்கம் வராக் குறை இருப்பதாகப் புலம்பித் திரிந்தார் அப்பா. தாத்தாவும் பேரன்களும் அப்படி ஒட்டிக் கொண்டார்கள்.
சீராக போய்க் கொண்டிருந்த வாழ்வில் திடீரென ஒரு நாள் இடி இறங்கிற்று. அப்பாவை வரப்பில் கிடந்த சர்ப்பம் ஒன்று தீண்டுயதாகச் செய்தி வந்தது. அவசரமென மருத்துவமனைக்குக் கொண்டு ஓடினால் ரொம்ப தாமதம் என்றனர். விஷம் தலைக்கேறிவிட்டதாகக் கைவிரித்தார்கள். படுக்காமல் புலம்பாமல் அப்பா போய் சேர்ந்து விட்டார். அத்தனை சீக்கிரம் அப்பா தங்களை வேரிழந்த மரமாய் இப்படித் தவிக்க விடுவார் என்று கனவிலும் மணிவாசகம் நினைத்துப் பார்த்ததில்லை. சர்ப்பம் தீண்டினாலும் அப்பாவிற்கு நல்ல சாவு என்று சிலர் பேசிக் கொண்டார்கள். அந்த இழப்பை அவனால் நெடுநாள் வரைச் செரித்துக் கொள்ள முடியவில்லை. வெகுநாட்கள் தூக்கம் வராமல் இரவைச் சபித்தான். கண்ட நேரங்களில் எழுந்து உட்கார்ந்து கொண்டு மௌனமாய் அழுதான்.
எல்லாமும் கனவைப் போல நடந்து முடிந்திருந்தன.
அப்பா இல்லையென்பதை மனம் ஏற்க மறுத்தது. அவர் வேலையாக ஊருக்குப் போயிருப்பதைப் போன்ற பிரமை. வீட்டின் வெறுமை அவர்களைப் பலமாய்த் தாக்கிற்று. ஒவ்வொருவரும் அவரின் நினைவுத் துயரில் உச்சிவெயில் சாலைப் புழுவாய்த் துடித்தனர். குறிப்பாகக் குழந்தைகள் தாத்தாவைக் காணாமல் நூலறுந்த பட்டமாகியிருந்தார்கள். அவரில்லா வெற்று அறையை பரிதாபமாய் எட்டிப் பார்த்து மிரட்சியில் அழுதனர். அவர்களைச் சமாதானம் செய்ய யாருக்கும் தெரியவில்லை.
மணிவாசகம் இரண்டு குழந்தைகளுக்குத் தகப்பனாகி இருந்தானேயொழிய இன்னும் சிறு பிள்ளை தான். அவன் வீட்டின் எந்தச் சூழல் குறித்தும் இதுவரை கவலை கொண்டவனல்லன். எவ்வளவோ நெருக்கடியிலும் கலங்கி நின்றதில்லை. தம்மைத் தாங்கிக் கொள்ள அப்பா இருக்கிறார் என்ற தெம்பில் எல்லாவற்றையும் மிக எளிதாக எதிர்கொண்டான். அதில் இழப்பு வந்தாலும் அப்பா துணை நின்று மகனைத் தேற்றினார். அப்பாவின் பொருட்டு வீட்டிலும் வெளியிலும் எதிலும் கவனம் செலுத்தியதில்லை. உறவுகளின் வீட்டுச் சடங்குகள், விழாக்கள், நல்லது கெட்டதற்கு என்னென்ன பொருட்கள் வேண்டுமென்று கூட அவனுக்குத் தெரியாது. அப்பாவின் திடீர் மரணம் அவனைத் தரையில் விழுந்த மழைத் துளியெனச் சிதறடித்து நிலைகுலையச் செய்திருந்தது.
எப்படியோ கொஞ்சம் கொஞ்சமாய்த் தன்னைத் தேற்றிக் கொண்டவன் குடும்பத்தின் மொத்தச் சுமைகளைக் சுமக்கத் தொடங்கிய போது தான் முழுதாய் உணர்ந்தான். அப்பா இந்த வீட்டின் எவ்வளவு சுமைகளைச் சுமந்திருக்கிறார்? அப்பாவைக் காணாத விவசாய நிலங்கள் அனாதைப் பிள்ளைகளைப் போலத் தவித்தன. இவன் வயலுக்குப் போனால் அப்பாவின் நினைவுகள் படுத்தின. எந்த வரப்பைக் கண்டாலும் அதில் ஒரு சர்ப்பம் இவனுக்காகக் காத்துக் கொண்டு படுத்திருப்பதைப் போலத் தோன்றிற்று. அவனால் வரப்பில் கால் வைக்க முடியவில்லை. பாதங்கள் கூசின. உறக்கதில் அனுதினமும் வகை வகையாய் சர்ப்பங்கள் நெளிந்து பயமுறுத்தின.
விவசாயத்தின் மீது தீராத வெறுப்பு ஏற்பட்டது. இந்த வயல்கள் இருந்ததால் தானே அப்பா விவசாயம் செய்தார். அதன் பொருட்டுத் தானே அவர் வரப்பில் நடந்தார். சர்ப்பம் அப்பாவைத் தேடி வந்தா தீண்டியது? இந்தச் சனியன்கள் எதற்கு? அப்பாவைக் காவு வாங்கிய சனியன்களை நானும் கட்டிக் கொண்டு அழ வேண்டுமா? மனத்தில் ஆயிரம் குழப்பச் சர்ப்பங்கள். அவை ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தபடி படமெடுத்தாடி இம்சித்தன. வயல்களைச் சுமந்து கொண்டு நிம்மதியாய் இனி வாழவியலாது என்ற முடிவிற்கு வந்தான் அவன். அவற்றை முற்றிலும் துறந்துவிட முடிவு செய்தான். தகவல் அறிந்ததும் காத்திருந்ததைப் போலச் சிலர் விலைக்குக் கேட்டு அணுகினர். காஞ்சனாதேவியும் அதற்கு ஒத்து ஊதினாள். ஒரு விவசாய மரபும் வாழ்வும் சுபமாய் முடிந்து போயிற்று.
அப்பா இல்லா வீட்டில் இருக்கப் பிடிக்கவில்லை. பிள்ளைகளை நகரத்தில் படிக்க வைக்கவும் ஆசை துளிர்விட்டிருந்தது. வீட்டை வாடகைக்கு விட்டால் கிடைக்கும் தொகையுடன் கொஞ்சம் கையிலிருந்து புரட்டினால் போதும். நகரத்து வாடகையைச் சமாளித்து விடலாம். அங்கு வயல் சேற்றில் உழலும் வேதனையிருக்காது. கடையில் கணக்கு எழுதிக் கூடப் பிழைத்துக் கொள்ளலாம். இவனாகவே எல்லாவற்றையும் முடிவு செய்து கொண்டான். வீட்டைத் துறந்து நகரத்திற்குத் தன்னைத் தானே அகதியாக்கிக் கொண்டு ஒப்பு கொடுத்தான்.
நகரத்து வீடு விஸ்தாரமாக இல்லை. பத்துக்குப் பத்து என இரண்டு அறைகள். அதற்குள் தான் எல்லாமும். குறை காணாது அதற்குள் மகிழ்ச்சியாக முடங்கிக் கொண்டார்கள். சிரமத்திற்கிடையிலும் வாடகையைத் தவறாது செலுத்தித் தன் நகர நாகரிகத்தைப் பாதுகாத்துக் கொண்டான்.
மணிவாசகம் மளிகைக் கடையில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். காலை எட்டு மணிக்குச் சென்றால் திரும்ப இரவு பத்தாகி விடும். கொஞ்ச நாட்களிலேயே அவன் மிகவும் சோர்ந்து விட்டான். அவன் துவளும் நேரங்களில் அப்பாவின் நினைவுகள் படுத்தியெடுத்தன. கண்கள் பொத்துக் கொண்ட கொப்புளம் போல அதுவாகவே வழியும். அவரின் வெற்றிடத்தை நகரத்தில் நன்றாகவே உணர்ந்தான். வேறு வழியில்லை. கிடைக்கும் வேலையை விடவும் மனமில்லை.
வீட்டின் கடினச்சூழல் நெருக்கடிக்குள்ளாக்கியது. எனினும் மனைவியை வேலைக்கு அனுப்புவதில்லை என்பதில் உறுதியாக இருந்தான். தன் கஷ்டம் தன்னோடு.
அவள் தாங்க மாட்டாள். வீட்டைக் கவனித்துக் கொண்டு வேலைக்கும் சென்று அவளால் சமாளிக்க முடியாது. அவள், குழந்தைகளைப் நல்லபடிக் கவனித்துக் கொண்டால் பொதும் என்று முடிவு செய்தான்.
ஒருநாள் வெளியில் செல்லாமல் மனைவி சம்பாதிப்பதற்கு ஒரு வழி கிட்டிற்று. தொடக்கத்தில் தயங்கி பின் வீட்டிலிருந்து ஓய்வு நேரத்தில் செய்வது தானே என்று ஒத்துக் கொண்டான். அங்குள்ள யமுனா உணவகத்திற்குத் தினமும் இரண்டு வேளையும் இட்லி மாவு தேவைப்பட்டது. தினமும் அரைத்துத் தர வேண்டும். பெண்கள் அரைத்தால் பக்குவமாக இருக்கும் என்று விரும்பினார் உரிமையாளர். மணிவாசகம் பணியாற்றிய மளிகைக்கடை வாடிக்கையாளர் அவர். கடைக்கு வந்த போது எதார்த்தமாக விசாரிக்க உடனே ஒத்துக் கொண்டாகிவிட்டது.
மாவு அரைக்க மூலப் பொருட்கள் தினமும் கடையிலிருந்து வந்து விடும். அதனை ஊற வைத்து அரைத்து உப்பைக் கரைத்து வைத்திருந்தால் போதும். மாவை உணவகத்திலிருந்து வந்து எடுத்துக் கொள்வார்கள். மாவு எடுக்க வரும் போது அடுத்த நாள் அரைப்பதற்குரிய அரிசி உளுந்து வந்து விடும். மணிவாசகம் இதை அற்புதமான வாய்ப்பு என்று கருதினான். பொருளாதார நெருக்கடிக்குக் கை கொடுக்குமென்று இருவரும் ஆமோதித்தார்கள்.
கொஞ்சம் சேர்த்து ஊற வைத்தால் வீட்டிற்கும் மாவு ஆகிவிடும். மிச்சமிருப்பின் தேவையானவர்களுக்கு விற்றுக் கொள்ளலாம் என்ற பலமான வரவு செலவு தீட்டப்பட்டது. எல்லாமும் அடுத்த வாரமே நடைமுறைக்கும் வந்தன. தொடக்கத்தில் சற்று தடுமாறிய காஞ்சனா விரைவாகவே அதற்குத் தன்னைப் பழக்கிக் கொண்டாள்.
எல்லாமும் நல்லபடியாகப் போய்க் கொண்டிருந்தது. மணிவாசக்திற்கு பணமுடை சற்று குறைந்ததில் உள்ளுர மகிழ்ச்சி. கடைக்குப் போவதற்குள் என்னென்ன உதவிகள் செய்ய முடியுமோ செய்து கொடுத்தான். அவள் மறுத்தாலும் வலிய போய்ச் செய்வான். அவள் மட்டும் துன்பப்படுவதை அவனால் சகித்துக் கொள்ள முடியவில்லை. தகுந்த வழியில் தாங்கிப் பிடித்துக் கொணடான். வாழ்க்கை நிதானமாக மழைநீரில் மிதக்கும் காகிதக் கப்பலைப் போலப் போய்க் கொண்டிருந்தது. அக்கப்பல் திடீரென ஒரு தடையில் மாட்டித் தடுமாறினால் ஓட்டம் என்னாகும்? மாவு எடுக்க வந்த கோவிந்தன் அவர்கள் வாழ்க்கையில் மெல்ல திருட்டுப் பூனையென உள்ளே நுழைந்தான்.
கோவிந்தன் திருமண வயதைக் கடந்தும் முறையாக கன்னி கழியாமல் இருந்தான். யமுனா உணவகம் தொடங்கிய காலத்திலிருந்து அவன் பணியில் இருக்கிறான். வேலையில் நல்ல சுட்டி. சொல்வதைக் கேட்டு நாணயமாக நடந்து கொள்வான். முதலாளி பாலையாவுக்கு கோவிந்தனை ரொம்பவும் பிடித்துப் போயிருந்தது. சமையல் வேலையிலும் அவன் தேறியிருந்தான். சமைப்பவர் விடுப்பெடுக்கும் நாட்களில் கடையைச் சமாளிக்க கோவிந்தன் பெரிய உதவியாயிருந்தான். உணவக மேல் அறையில் பாலையா அவனைத் தங்க வைத்திருந்தார். கடைக்கும் இரவில் பாதுகாப்பாக ஓர் ஆள் வேண்டுமென்பது அவர் எண்ணம். அனுபவஸ்தர் என்பதால் பலவிதமான கணக்கு. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.
தினமும் கோவிந்தன் மாவு எடுப்பதற்குப் போய் வந்தான். மாவு எடுக்கும் மூன்று சக்கர மிதிவண்டியை அவன் நன்றாக ஓட்டக் கற்று வைத்திருந்தான். எனவே அவனைத் தொடர்ந்து அனுப்ப வேண்டியதாயிற்று. அவனும் தங்கு தடையின்றி மாவைக் குறிப்பிட்ட நேரத்தில் சேர்த்துக் கொண்டிருந்தான். மாவு எடுக்கச் செல்லும் சமயங்களில் காஞ்சனா தனியாகத் தான் இருப்பாள். அந்நேரம் மணிவாசகம் மளிகைக் கடையில் பொட்டலம் கட்டிக் கொண்டிருந்தான். வியாகுலன் பள்ளிக்குச் சென்றிருந்தான். நகுலன் சாப்பிட்டு உறங்குகிற நேரம்.
அரைத்த மாவைத் தூக்கி வண்டியில் வைக்க உதவி கோரி கோவிந்தன் காஞ்சனாவுடன் இணைந்து கொள்வது சாதாரணமாகத் தான் நடந்து கொண்டிருந்தது. நாளடைவில் மெல்ல சிரித்துப் பேசத் தொடங்கினர். தனிமை ஒருவர் சிரிப்பை ஒருவர் ரசிக்கச் செய்தது. நினைவுகள் திசைமாறிச் செல்லத் தொடங்கின. கோவிந்தன் மாவு எடுக்கும் நேரம் எப்போது வருமென்று ஏங்கத் தொடங்கினான். இடையில் சாக்குபோக்கு சொல்லி அங்குப் போக முடியுமா என்று யோசித்தான்.
பொருட்கள் கொடுக்கப் போகையில் அவளுக்குத் தேவையானவற்றை வாங்கிச் செல்லத் தொடங்கினான். நாளடைவில் அவள் சொல்லாமலே அது மல்லிகை, பிரியாணி என்று நீண்டது. அதை வாங்குகையில் அவளுக்கு எல்லையில்லாக் கொள்ளைச் சிரிப்பு. தனியாக இருப்பவளிடம் அங்கங்கே கை வைத்துப் பேசத் தொடங்கினான். அவள் தொடக்கத்தில் தயங்கினாள். பிறகு அது அவளுக்குப் பெரும் கிளர்ச்சி ஊட்டிற்று. அவன் ஸ்பரிசத்திற்காக அவள் ஏங்கத் தொடங்கினாள். பழிபாவத்திற்கு அஞ்சாமல் பறவைகள் உல்லாசமாய்ப் பழகத் தொடங்கின. ஒன்றோடு ஒன்று கலந்தன. மணிவாசகம் அப்பாவியாய் ஏமாந்து கொண்டிருந்தான்.
காமம் கண்களை மறைத்தது. ஒரு கட்டத்தில் கட்டிய கணவனை, பெற்ற பிள்ளைகளை இரண்டாம் பட்சமாய் நினைக்கச் செய்தது. உடற்பசி உலகத்தில் எல்லாவற்றையும் மறக்கச் செய்தது. அடைமழை நீர் சத்தம் போட்டபடி வெடிப்பின் அடியாழம் வரை சென்று தாகம் தீர்த்தது. நிலம் குளிர்ந்து மகிழ்வின் எல்லையில் செழித்தது. மயக்கம் தயக்கத்திற்கு விடை கொடுத்தது. ஒரு நாள் இரண்டும் இணைந்து நிகழ்காலக் கூட்டை விட்டு வெளியேறி புதிய கூட்டை நோக்கிப் பறந்தன.
என்ன செய்வதென்று புரியாமல் சிறு பிள்ளைகளைப் பிடித்துக் கொண்டு தனிமரமாய் நின்றழுதான் மணிவாசகம். வெளியிலும் சொல்ல முடியவில்லை. அவமானத்தில் குறுகினான். இந்தப் பாலும்பிஞ்சுகளை வைத்துக் கொண்டு எப்படிச் சமாளிக்கப் போகிறோமென்று மருகினான். அங்கிருந்து வெளியேறி கண்காணாத் தேசத்திற்குச் சென்று விடுவது தான் அப்போதைக்கு உசிதமாய்ப் பட்டது. கணநேரத்தில் அவளை மனத்திலிருந்து வழித்துத் துடைத்து எறிந்தான். மனத்திற்குள் வைராக்கியம் பொங்கிற்று. காஞ்சனா அவனைப் பொருத்தமட்டில் இறந்து போயிருந்தாள். காரியம் செய்வதாய் நினைத்து அவனும் பிள்ளைகளும் எண்ணெய் தேய்த்துக் குளித்தனர். தலை முழுகிவிட்டு அன்று இரவே சிதம்பரத்திலிருந்து பேருந்து ஏறிவிட்டான்.
எப்பாடு பட்டும் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்க வேண்டும். பிள்ளைகள் வளர வளர அம்மா இறந்துவிட்டாள் என்ற எண்ணத்தை மனத்தில் அழுத்தமாய் ஏற்ற வேண்டும். செல்லுமிடத்தில் யாரும் சந்தேகிக்கா வண்ணம் அப்படியொரு நம்பிக்கையை உறுதி படுத்த வேண்டும். எல்லாவற்றையும் முடிவு செய்த பின் தான் காஞ்சனாவின் சட்டமிடப்பட்ட புகைப்படமும் மாலையும் பிறப்பு இறப்பு தேதியுடன் மணிவாசகம் குடியேறும் வீடுகளில் நிலைக்கு எதிரே தொங்கத் தொடங்கிற்று.
அம்மா இறந்து விட்டாளென நாளடைவில் பிள்ளைகள் நம்பத் தொடங்கினர். இப்படியொரு கேடுகெட்ட தாய் தங்களைப் பெற்றாளெனத் தெரிந்தால் அதுவே அவர்களுக்குத் தீரா மனநோய் ஆகிவிடும். அந்தக் குற்றவுணர்ச்சி குழந்தைகளை மனத்தளவில் கொன்றுவிடும். அம்மா உறவுகளில் உன்னதம். அது மானுடத்தின் அதி உச்சம். அஃது எதிர்பார்ப்பில்லா புனித உறவு. அது பலருக்கும் உலகில் பரிசுத்தமானதாக அமைந்திருக்கையில் தன் பிள்ளைகள் தவித்துப் போய்விடக்கூடாது என்று மணிவாசகம் எண்ணினார்.
பிள்ளைகள் ஓரளவு வளர்ந்து விடடிருந்தார்கள். இரண்டு பேரும் படிப்பில் சுட்டியாக விளங்கினர். அவர்களுக்கு அம்மாவின் ஏக்கம் வராத அளவிற்குப் பார்த்துக் கொண்டார் மணி. அவர்கள் அம்மாவைப் பற்றிக் கேட்டால் மிக உயர்வாகச் சொல்லுவார். “அந்த புண்ணியவதி மட்டும் செத்துப் போவாம இருந்திருந்தா எனக்கேன் இவ்வளவு கஷ்டம்” என்று புலம்புவதைப் போல நடிப்பார். இதே நடிப்பு தான் வேற்றாள் கேட்டாலும் கூட. காஞ்சனா இன்னொருவனோடு ஓடிவிட்டாள் என்ற செய்தி எந்தக் காலத்திலும் யாருக்கும் தெரியா வண்ணம் பாதுகாத்தார் மணி. அதற்காகவே, பிறந்து வளர்ந்த ஊரையும் மறந்து போயிருந்தார். பிள்ளைகளும் அது பற்றிப் பேசியதில்லை. மணிவாசகம் தன் தாத்தா காலத்திலே அங்குக் குடியேறிவிட்டதாகப் பொய் சொல்லி நம்ப வைத்திருந்தார்.
பட்ட பாட்டிற்கு பலன் கிடைக்காமல் இல்லை. வியாகுலன் உயர்கல்வி கற்பதற்கான வாய்ப்பு சென்னையில் புகழ்பெற்ற கல்வி நிறுவனத்தில் கிடைத்தது. நகுலன் பத்தாம் வகுப்பைத் தாண்டியிருந்தான். பிள்ளைகள் வளர்ந்து நின்றதில் அவருக்கு எல்லையில்லா மகிழ்ச்சி. வியாகுலனைக் கல்லுாரியில் சேர்ப்பதற்கான நாளும் வந்தது. நகுலனைத் தனியே விட்டுச் செல்ல வேண்டாமென்று அவனையும் அழைத்துக் கொண்டு சென்னை வந்து விட்டிருந்தார் மணி.
சென்னையில் கல்வி நிறுவனத்திற்குச் சென்று எல்லாமும் நல்லபடியாய் முடிந்து விட்டதில் மணி ஆனந்தத்தின் எல்லையில் பறந்து கொண்டிருந்தார். இன்னும் பத்து நாட்கள் கழித்து கல்லூரி தொடங்கிவிடும். வியாகுலனுக்கு இனி சென்னை தான் வாழ்க்கை என்று உரையாடியபடி ஊருக்குத் திரும்பிச் செல்ல மத்திய இரயில் நிலையம் வந்துக் காத்திருந்தனர். சென்னையிலிருந்து பொள்ளாச்சி சென்று அங்கிருந்து பேருந்தில் பாலக்காடு செல்வதாகத் திட்டம்.
இரவு ஒன்பது மணிக்குப் பொள்ளாச்சிக்கு ரயில். எட்டு மணி வாக்கில் சாப்பிட்டு வந்துவிட எண்ணினார் மணி. பிள்ளைகளை அழைத்துக் கொண்டு வெளியில் வந்தார். கையில் காசு குறைவாக இருந்தது. பெரிய உணவகங்களில் சாப்பிடும் நிலை இப்போதைக்கு ஒத்து வராது. அருகில் தள்ளுவண்டியில் ஆவி பறந்து கொண்டிருந்தது. சுற்றிலும் ஆளுக்கொரு தட்டை ஏந்தி அவசரத்தில் இட்லிகளைப் பிட்டு விழுங்கிக் கொண்டிருந்தனர்.
மூன்று இட்டலி தட்டுகளுக்கு குரல் கொடுத்தார் மணி.
பரிமாறிக் கொண்டிருந்த பையன் எடுத்துக் கொடுத்தான். ஆளுக்கொன்றை வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். இட்லி சாப்பிடும் போதே ஆளுக்கொரு தோசை என்றார்.
தோசை ஊற்றிக் கொண்டிருந்த பெண்ணிடம் மூன்று தோசை போடுங்கம்மா என்று மணி குரல் கொடுத்தார். குரல் கேட்ட அடுத்த நிமிடம் அவள் நிமிர்ந்து மணியைப் பார்த்தாள். ஒரு நொடிக்குள் மின்சாரத்தை மிதித்ததைப் போலத் துடித்த மணி அந்த இடத்தில் உடல் நோவுற்றதைப் போலத் தளர்ந்து நின்றிருந்த காஞ்சனாவை எதிர்பார்க்கவில்லை.
அவ்வளவு தான். அப்படியே இட்லித்தட்டை தூக்கி வாளிக்குள் எறிந்தார். மகன்களின் தட்டையும் பிடுங்கி எறிந்தார். மகன்களிடம் ரயில் நேரம் மாற்றிட்டாங்களாம் சீக்கிரம் வாங்க. அங்கப் போயி கை கழுவிக்கலாம் என்று சொல்லியபடி ஓர் அரக்கனைப் போலப் பிள்ளைகளை இழுத்துக் கொண்டு வேகவேகமாய் ரயில் நிலையத்திற்குள் ஓடினார்.
இவ்வளவு நாள் கழித்து இந்தச் சூழலில் அவர்களைக் காஞ்சனா சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. வளர்ந்து நின்ற தன் பிள்ளைகளையும் கணவனையும் பார்த்ததும் காஞ்சனா துடித்துப் போனாள். அவளுக்கு குற்ற உணர்ச்சியில் நெஞ்சு அடைப்பது போலிருந்தது. அவள் தன்னிலை மறந்தாள். விம்மி வெடித்தாள். தோசைப் புரட்டியை வீசியெறிந்து விட்டு மணி ஓடிய திசையில் துரத்திக் கொண்டு ஓடத் தொடங்கினாள்.
அவர்களைப் பார்த்துக் கொண்டே ஓடினாள். மனத்தில் அப்படியொரு பதற்றம். ஆற்றாமை. ரணத்தில் கத்தியிடும் வலி. தவறிழைத்த துரோக விரக்தி. அவள் மனம் அவளைத் தானாய் இழுத்துக் கொண்டு ஓடிற்று. கண நேரத்தில் அவர்கள் அவளின் பார்வைக்குத் தப்பியிருந்தார்கள். அவள் தானாய்ப் புலம்பியபடி தலையிலும் மார்பிலும் வயிற்றிலும் மாறிமாறி அடித்துக் கொண்டாள். தலைமுடிகள் அவிழ்ந்து அலங்கோலமாய்ப் பறந்தன.
அவள் பேயுரு கொண்டு, அடித்தொண்டை அறுந்து குரல் வீழ, வலியில் கதறும் யானையைப் போலப் பிளிறி, கேவி கேவி இழுத்தபடி ஒடிக் கொண்டிருந்தாள்.
![]()