டெல்லி பாபா மீது 17 மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு!

டெல்லியின் ஆடம்பரமான பகுதியாகக் கருதப்படும் யாவசந்த் குஞ்ச் பகுதியில் உள்ள ஒரு பிரபல ஆசிரமத்தின் இயக்குனர் மீது அங்குள்ள மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த ஆசிரமத்தின் பணிப்பாளராக செயற்பட்ட சுவாமி சைதன்யானந்தா மீது இதுவரை அங்குள்ள 17 மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீ சாரதா இந்திய முகாமைத்துவ நிறுவனத்தைச் சேர்ந்த சுவாமி சைதன்யானந்த சரஸ்வதி என்ற பார்த்த சாரதி, பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவுகளில் (EWS) உதவித்தொகையுடன் முதுகலை மேலாண்மை டிப்ளோமா படிப்புகளைத் தொடரும் மாணவர்களைத் துன்புறுத்தியதற்காக அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்த ஆசிரமத்தில் இருந்து பயிலும் 32 மாணவர்களிடம் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
அவர்களில் 17 மாணவிகள், சுவாமி சைதன்யானந்தா மீது தவறான வார்த்தைகளைப் பயன்படுத்துதல், ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்புதல் மற்றும் கட்டாய உடல் தொடர்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன் குறித்த ஆசிரமத்தில் கடமையாற்றிய சில பெண் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக உறுப்பினர்களும் சைதன்யானந்தாவுக்கு உதவிகளை வழங்கியிருப்பதும் தெரியவந்துள்ளது.
மாணவிகள் வழங்கிய வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சந்தேகநபருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சுவாமி சைதன்யானந்தாவின் மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்தமையை அடுத்து அவர் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகின்றது.
பொலிஸார் தனி குழுக்களை அமைத்து அவரை கைது செய்வதற்கு தீவிர தேடுதலை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது அவர் பயன்படுத்தியதாக கூறப்படும் வாகனத்தில் இருந்து போலியான இராஜதந்திர தூதரக வாகன இலக்கத் தகடு ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
![]()