இலங்கை

அமைச்சர்கள் உட்பட 41 அதிகாரிகள் சொத்து விபரங்களைச் சமர்ப்பிக்கவில்லை

இலங்கையின் ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழு வெளியிட்ட ஒரு அறிக்கையின்படி, கடந்த ஆண்டுக்கான சொத்து மற்றும் பொறுப்பு குறித்த விபரங்களைச் சமர்ப்பிக்கத் தவறிய 41 உயர் அதிகாரிகளில் ஒரு அமைச்சரவை அமைச்சர், நான்கு முன்னாள் ஆளுநர்கள், பல இராஜாங்க அமைச்சர்கள், தூதுவர்கள், உயர் இராஜதந்திர அதிகாரிகள் மற்றும் நீதிபதிகள் ஆகியோர் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

​இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) திருத்தப்பட்ட பட்டியலில், முன்னாள் அமைச்சரவை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஆறு முன்னாள் இராஜாங்க அமைச்சர்களான தாரக பாலசூரிய, சாந்த பண்டார, காதர் மஸ்தான், சிவநேசதுரை சந்திரகாந்தன், சுரேந்திர ராகவன் மற்றும் காலஞ்சென்ற லோகன் ரத்வத்த ஆகியோர் தமது சொத்து விபரங்களைச் சமர்ப்பிக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.

​2023ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 80ஆம் பிரிவின் கீழ், அரச அதிகாரிகள் மற்றும் பதவியில் இருப்பவர்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள தங்கள் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்த விபரங்களை காலமுறையில் அறிவிக்க வேண்டும்.

​இந்த பட்டியலில் நான்கு முன்னாள் ஆளுநர்களான ரொஷான் குணதிலக்க, செந்தில் தொண்டமான், நவீன் திசாநாயக்க மற்றும் வில்லியம் கமகே ஆகியோரும் பெயரிடப்பட்டுள்ளனர்.

​CIABOC இன் படி, 11 தூதுவர்கள், பிரதி நிரந்தரப் பிரதிநிதிகள், உயர்ஸ்தானிகர்கள் மற்றும் அமைச்சர்கள் உட்பட குறைந்தது 28 சிரேஷ்ட இராஜதந்திர அதிகாரிகள் மற்றும் இரண்டு முன்னாள் நீதிபதிகளும் இந்தப் பட்டியலில் உள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *