கதைகள்

நடுகைக்காரி- 83…. ஏலையா க.முருகதாசன்

நீங்கள் கிராட்யுவேற்தானே உங்களிடம் ஒரே ஒரு கேள்வி கேட்கிறன் எங்களுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் உங்களால் அதை நிருபிக்க முடியுமா?.இந்தக் கட்டிடத்துக்கும் அங்கை நிக்கிற மரத்துக்குமிடையில் இருக்கிற வித்தியாசத்தை பகுத்தறிவு ரீதியாகவும் சயன்ஸ் ரீதியாகவும் அதன் வித்தியாசங்களை ஒப்பீடு செய்து இரண்டும் வேறு வேறு என்று விபரிக்க முடியும், அது போல நானும் நீங்களும் ஒரே உயிரினம் அல்ல என்பதை உங்களல்ல நிருபிக்க முடியுமா?.

-பார்வதி

பார்வதியின் துணிச்சலை பலர் அவளைப் பார்த்துத் தம் புன்னகையால் இப்படித்தான் துணிச்சலாக இருக்க வேணும் என்பது போல தலையயை ஆட்டி ஆதரித்தார்கள்.
ஒரு சமூகத்தில் எல்லாரும் ஒரேவிதமான பண்பிலோ நடத்தையிலோ இருக்கமாட்டார்கள் என்பதுதானே யதார்த்தம் என்பதற்குச் சான்றாக பார்வதி யரென்பதை அவளின் வீட்டயலில் வாழும் ஒரிருவர் மற்றவர்களுக்குக் கேட்காத விதத்தில் தமக்கருகில் ஒட்டிக் கொண்டு நிற்பது போல நிற்பர்வகளுக்குக் கேட்கிற மாதிரி இதுகளுக்கு வந்த வாழ்வைப் பார் என்று சொன்னது,பார்வதியைப் பாராட்டிவிட்டுப் போன புஸ்பாவின் காதில் விழுந்தது.
பார்வதியைக் குறை சொன்னவர்களைப் பார்த்து நீங்களும் அந்தப் பொம்பிளை மாதிரித்தான்,நீங்களெல்லாரும் படிச்சவைதானே இப்படியெல்லாம் பொறுப்பில்லாமல் கதைக்கிறியளே என வெடுக்கென்று சொல்ல அதற்கு பதில் சொல்ல முடியாமல் அந்த இடத்தைவிட்டுப் போகிறார்கள்.

யாராக இருந்தாலும் புஸ்பா,தவறென்றால் முகத்துக்கு நேரே பிழைகளைச் சுட்டிக்காட்டுவதால் தெல்லிப்பழை வீமான்காமம் பகுதியில் உள்ளவர்களில் பலர் அவளைநேர்மையானவள்; என்றும் இன்னும் சிலர் அவள் திமிர்பிடிச்சவள், தான் அழகென்பதால் அதை வைச்சு அகங்காரியாக இருக்கிறாள் என்றும் சொல்வார்கள்.

ஒவ்வொருவரைப்பற்றிய ஒவ்வொருவருடைய அபிப்பகராயங்களும் எடை போடுதலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.அது போலத்தான் புஸ்பாவைப் பற்றியும் அவளின் வகுப்புச் சக மாணவர்களும் சரி அவள் வாழுகின்ற தெல்லிப்பiழியில் உள்ள குறிச்சியான வீமன்காமத்திலும் சரி அவளைப் பற்றிப் பலரும் பல அபிப்பராயங்களை வைத்சிருந்தனர்.

அவளின் உயர்ந்த நிமிர்ந்த தோற்றமும் அழகான கவர்ச்சியான முகமும் சிரித்தால் தெரிகிற வலது இடதான தொற்றுப் பற்களும் அவளுக்கு அழகு சேர்த்தன.

யாரும் தன்னைக் கவனிக்க வேண்டுமென்றோ தன்னை வார்த்தையால் மட்டுமல்ல பார்வையாலும் பாராட்ட வேண்டுமென்றோ புஸ்பா பார்வதியின் செயலை பாராட்டவில்லை.பார்வதியின் பக்கம் நியாயம் மட்டுமல்ல அவளிடமிருந்த அவளின் சுயமரியாதையையும் உணர்ந்தாள் அதனால்தான் அவள் யார் எவரென்று பார்க்காமல் பார்வதியைக் குறை சொன்னவர்களைக் கண்டித்தாள்.

மகளின் குணத்தை அறிந்த புஸ்பாவின் தாயார் சரி சரி பிரச்சினை சுமுகமாக முடிஞ்சுதானே வா,கனநேரமாகியும் இன்னும் ஏன் துணிக்கடையாலை வராமல் நிக்கினம் என்று கொப்பா பயந்து போய் வந்துவிடுவார் என்று அவளைக் கட்டாயப்படுத்தி அவளின் கையைப் பிடித்து இழுக்க ஞானத்தின் பக்கம் திரும்பி சத்தமில்லாமல் சொண்டு;களை மட்டுமே வாறன் என்பது போல அசைத்தும் கண்களாலும் ஞானத்திடமிருந்து விடைபெறுகிறாள் புஸ்பா.
இவள் யாருக்கு சத்தமில்லாமல் சொண்டுகளை அசைத்து ஏதோ சொல்கிறாளே என்று அவளின் கண் போன திசையில் பார்வையைச் செலுத்த பார்வதியை ஜிஎம்மின் ஒபீசுக்கு கூட்:டிக் கொண்டு போன ஞானத்தைக் காண்கிறாள் தாய்.

ஞானமும் தலையையாட்டி சரி என்பது போல விடை கொடுக்கிறான்.அதே நேரம் மகளின் கையை மெதுவாக அழுத்திய தாய் யாரடி அந்தப் பொடியன் சத்தமில்லாமல் சொண்டாலை கதைக்கிறாய் கண்ணும் ஒருமாதிரியாயிருந்தது,சொல்லு என்று தனது மகளின் காதுக்கு மட்டுமே கேட்கத்தக்கதாகக் கேட்க அம்மா என்ன ஐய்மிச்சப்படுகிறியா அவர் என்னோடை படிக்கிறவர் என்கிறாள் புஸ்பா.

நான் ஐயமிச்சப்படேலை ஆனால் நீ சத்தமில்லாமல் சொண்டை அசைச்சுக் கதைச்சதாலைதான் கேட்டனான் என்கிறாள் தாய்.ஆனால் புஸ்பாவின் தாயாருக்கு அவளின் அறிவின் மூலையில் ஒரு சிறு பொறி போல ஐய்மிச்சம் ஏற்படவே செய்தது.மகளை ஒருமுறை கடைக்கண்ணால் பார்த்தவள் அவளையும் கூட்டிக் கொண்டு கடையைவிட்டு வீதிக்கு வந்து வீட்டை நோக்கிப் போய்க் கொண்டிருந்தாள்.

அதனைத் தொடர்ந்து,சரி வாறம் என்று ஞானத்தின் தாயார்,மங்களேஸ்வரியின்; தாயாருக்கும் ஞானத்துக்கும் சொல்லிவிட்டுப் போக அவர்களின் பின்னால் பார்வதியும், பார்வதியின் தாயாரும் கடையைவிட்டுப் வெளியேவர கிழக்குப் பக்கமாக மாடியிலிருந்து படியிறங்கி வெளியே வந்த சிலம்பரசி பார்வதியைப் பார்த்ததும் வேகமாக அவளருகில் வந்து உனக்கு இப்பொழுது சந்தோசந்தானே, உனக்கு வக்காலத்து வாங்க வந்தாரே ஞானசெல்வம் என்ற ஒருவர் எங்கை அவர் என்றதும்,சிலம்பரசி தன்னைத்தான் சொல்கிறாள் என்பதால் வேகமாக ஞானம் அவளை நோக்கிச் செல்ல தனது மனைவி வெளியில் பிரச்சினையை உருவாக்கப் போகிறாள் என்பதை உணர்ந்த முருகதாசன் தனது மனைவியை விலத்திக் கொண்டு ஞானத்தில் அருகில் வந்தவன் பிளீஸ் ஞானம் எனது வைப் சொன்னதை பெரிதுபடுத்தாதை போங்கள் நான் பிறகு கதைக்கிறன் என்று சொல்ல ஞானத்தின் தாயும் வாவா இனி இதிலை நின்று பிடுங்குப்படப் போகிறியே என ஞானத்தைக் கூப்பிட அவனும் அரைகுறை மனதுடன் தாயுடன் போய்விடுகிறான்.

ஆனால் சிலம்பரசி சொன்னதைக் கேட்டு பரவாயில்லை என்று தலைகுனிஞ்சபடி பார்வதியால் போக முடியவில்லை.தனது மகளுக்கும் சிலம்பரசிக்குமிடையில் மீண்டும் வாக்குவாதம் ஏற்படப் போகின்றது என்பதை உணர்ந்த பார்வதியின் தாய் வாடி போவம் நீ அங்கை போய் அவாவோடை மல்லுக்கட்டிக் கொண்டு நிற்காதை என்று சொல்ல அம்மா நானா மல்லுக்கட்டுறன் பேசாமல் போக, என்னைக் கூப்பிட்டு அவாதானே வேணுமென்று பிரச்சினைப்படுத்துகிறா என்னிலை ஒரு பிழையும் இல்லை என்று சொல்லிக் கொண்டே தாயினடியில் நின்று சொல்லத் தொடங்கியவள்,சொல்லிக் கொண்டே சிலம்பரசியடியில் சொல்லி முடிச்சவள்,நான் உங்களைப்பற்றி வேணுமென்று சங்க மனேஜரிடம் கொம்பிளைன்ற் குடுக்கவில்லை,உங்களுக்கும் எனக்கும் முன்பிருந்தே எந்தக் பழக்கமும் இல்லை கோபமும் இல்லை,நீங்கள் என்னைப் பார்த்து காகங்கள் என்றும் குளிக்காமல் வந்திடுங்கள் என்று சொன்னது எனக்கு விளங்கவில்லையென்றா நினைச்சனீங்கள்.

நான் நிறையப் பத்திரிகைகள் புத்தகங்கள் வாசிக்கிறவள்.நான் யூனியன் கொலிஜ்ஜிலை எஸ்.எஸ் சி படிக்கிறவள்,எங்களைப் பற்றிச் தமிழ்ச் சமூகம் என்ன கணீப்பீடு வைச்சிருக்கின்றது என்று எனக்கும் தெரியும் என்ன அர்த்தத்தில் நீங்கள் அப்படிச் சொன்னனீங்கள் என்றும் தெரியும் நான் ஒன்றும் வாயிலை விரலை வைச்சால் கடிக்கத்தெரியாத குழந்தை அல்ல எனக்கும் எல்லாம் விளங்கும் என்றவள், எனக்கிருந்த கோபத்துக்கு ஜிஎம்மின் அறையிலேயே உங்களைப் பேசியிருப்பேன் ஆனால் அது சரியில்லை என்றுதான் பேசாமிலிருந்தனான்.இப்ப நான் என்பாட்டுக்கு போகவிருந்த என்னை வலிஞ்சு கோபப்படுத்தியது மட்டுமிலi;ல, என்னிலை ஏதோ நியாயம் இருக்கிறது என்றதைக் கண்டறிந்த ஒருவர்,அவருடைய பேரே எனக்குத் தெரியாது,அவர் எனக்காகக் கதைக்க வந்ததால் அவருக்கும் எனக்கும் முடிச்சுப் போடப் பார்க்கிறியள்,அவர் யாரோ நான் யாரோ.

நீங்கள் கிராட்யுவேற்தானே உங்களிடம் ஒரே ஒரு கேள்வி கேட்கிறன் எங்களுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் உங்களால் அதை நிருபிக்க முடியுமா?.இந்தக் கட்டிடத்துக்கும் அங்கை நிக்கிற மரத்துக்குமிடையில் இருக்கிற வித்தியாசத்தை பகுத்தறிவு ரீதியாகவும் சயன்ஸ் ரீதியாகவும் அதன் வித்தியாசங்களை ஒப்பீடு செய்து விபரிக்க முடியும், அது போல நானும் நீங்களும் ஒரே மனித உயிரினம் அல்ல என்பதை நிரூபிக்க முடியுமா?.

நான் இங்கேயே சவால் விடுகிறேன்,நானும் நீங்களும் அறிவியல் ரீதியாக ஒரே மனிதர்களல்ல என்று நீங்கள் புருப்: பண்ணினால் நான் உங்களுக்க அடிமையென்று எழுத்திலை தாறன் என்ற பார்வதி, என்னிலையில் நீங்கள் இருந்தால் அந்த வலி தெரியும்.நெஞ்சில் இரத்தம் வரும் என்பார்களே நான் அதை பலபேருக்கு முன்னால் அனுபவிச்சன்.இது தன்மானப் பிரச்சினை சுயகௌரவப் பிரச்சினை என்று பொரிந்து தள்ளிய பார்வதியை வாடி கதைச்சது போதும் என்று சொல்லியவாறு பார்வதியின் தாயார் செல்லாச்சி அவளை இழுத்துக் கொண்டு போக,மங்களேஸ்வரியின் தாயார் பார்வதியின் தலையைத் தடவி,அவ அப்படிக் கதைச்சது நூறு வீதம் பிழைதான் பிள்ளை என்கிறாள். நீ கவலைப்படாதை உன்னிலை எந்தப் பிழையும் இல்லை உன் இடத்தில் யார் இருந்தாலும் கோபமும் ரோசமும் வரத்தான் செய்யும் என்று ஆதரவாகச் சொல்ல,மங்களேஸ்வரியும் அவளுக்கருகில் வந்து அவளின் கைளை ஆதரவாகப் பிடிச்ச போது,பார்வதியின் கண்கள் தன்மானத்தால் வெதும்பி கலங்கி நிற்பதைக் காண்கிறாள்.
மங்களேஸ்வரிக்கு என்ன தோன்றிச்சோ தெரியாது தனது கையில் வைச்சிருந்த லேஞ்சியால் அவள் கண்களைத் துடைச்சுவிடுகிறாள்.அந்த ஆதரவு அவளை மெய்சியலிர்க்க வைக்கிறது.பாசத்துடன் மங்களேஸ்வரியின் கையைப் பிடிக்கிறாள் பார்வதி.
பெரும் மழை இடியுடன் பெய்து ஓய்ந்தது போல அந்த இடம் இருந்தது. பார்வதியின் கேள்விகளால் திகைச்சு நின்ற சிலம்பரசியால் தனது தவறுகளை உணர முடியாதவாறு அவளின் ஈகோ அவள் அறிவை மறைத்து நின்றது.

பார்வதியின் கோபத்திலும் கேள்விகளிலும் நியாயமிருந்ததால்,இரண்டு நிமிடங்களுக்குள் அவளின் தன்மான உணர்ச்சியினால் எரிமலை நெருப்பாய் பொங்கிய வார்த்தைகளுக்கு பதில் சொல்ல முடியாமல் அவளின் கோபத்தின் சிலம்பரசியின் கணவனான முருகதாசனை அவை தடுத்து நின்றது.

அப்பொழுது எதிர்பாராத ஒரு சம்பவம் அங்கே நடந்தது.முருகதாசன் சிலம்பரசியைக் காதலிச்சுக் கல்யாணம் செய்ததன் பின் ஒருவருடமாக சிலம்பரசி முருகதாசனின் தாய்தகப்பன் வீட்டுக்குப் போனதே கிடையாது.

தனது மைத்துனியான மங்களேஸ்வரியை வழிதெருவில் சந்திச்சால் சிலம்பரசி அவளுடன் அக்கறையாக கதைப்பதோடு மட்டும் மைத்துனி என்ற உறவு நீடித்து வந்தது.
முருகதாசன் தாய் தகப்பன் வீட்டுக்கு அடிக்கடி போய் வந்தான்.ஒரு அகங்காரியைத் தனது மகன் காதலிச்சு கல்யாணம் கட்டியதில் அவனின் தாய்தகப்பனுக்கு கொஞ்சம் கவலைதான்.
மங்களேஸ்வரியும் தாயாரும் சிலம்பரசியை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.சரி பிழைகளுக்கப்பால் தனது மருமகள் பலபேருக்கு முன்னால் குற்:றவாளியாக நிற்கிறாளே என முருகதாசனின் தயாருக்கு கவலையாகவே இருந்தது.

தனது மருமகள் பார்வதியை சொற்களால் காயப்படுத்தியது பிழையேதான் என உணர்ந்து பார்வதியின் தலையை வருடிவிட்ட மங்களேஸ்வரியின் தாயார்,தனது மருமகள் கூனிக்குறுகி அவமானப்பட்டு நிற்கிறாளே என்ற போது அவளுக்காகவும் கவலைப்பட்டாள்.

அண்ணியை ஆறுதல்படுத்துவம் என்று மங்களேஸ்வரி அவளை நோக்கி நடக்க எத்தனிக்க வேகமாக ஓட்டமும் நடையமாக வந்த சிலம்பரசி மாமி என்று கலங்கிய குரலுடன் முருகதாசனின் தரயாரைக் கட்டியணைத்து அவளின் தோளில் சாய்கிறாள்.

பொலபொலவென்று சூடான கண்ணீர் வழிந்து மாமியாரின் கழுத்தை நனைக்கிறது.அழாத பிள்ளை என ஆறதல் படுத்துகிறாள் முருகதாசனின் தாயார்.

(தொடரும்…)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *