இலங்கை

எதிர்கட்சிகளின் ஒன்றிணைந்த பயணம் எதிர்கால அரசியலிலும் தொடரவேண்டும்

நாட்டில் பல கட்சி ஜனநாயக முறைமையை முற்றாக அழிப்பதற்கும், எதிர்க்கட்சிகளை முடக்குவதற்கும் அரசாங்கம் முயற்சிக்கிறது. அரசாங்கத்தின் இந்த முயற்சியை எதிர்த்து அனைவரும் ஒருமித்து குரல் கொடுக்க வேண்டும். என்னை கைது செய்தபோது ஏற்பட்ட இந்த ஒற்றுமை இந்த மேடையோடு நின்று விடக் கூடாது. இது எதிர்கால அரசியல் நோக்கி முன்னோக்கிக் கொண்டு செல்லப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதியும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் 79ஆவது சம்மேளனத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், நாட்டின் பல கட்சி ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். நான் கியூபா மற்றும் நியூயோர்க் நகரங்களுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தேன்.

அங்கு சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களுடன் கோள அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் கடன் பிரச்சினை குறித்து கலந்துரையாடினேன். இது ஒரு அத்தியாவசியமான உத்தியோகபூர்வ பயணம்.

பயண மாற்றங்கள் காரணமாக லண்டனில் ஒரு இரவு தங்க நேர்ந்தது. அங்கு கிடைத்த அழைப்பின் பேரில் ஒரு பல்கலைக்கழக நிகழ்விலும் பங்கேற்றேன். இவை அனைத்தும் உத்தியோகபூர்வ நிகழ்வுகளே. ஆனால், இந்த உத்தியோகபூர்வ பயணத்தை அடிப்படையாகக் கொண்டு, என்னை கைது செய்ய முயற்சித்தனர். ஜனாதிபதியின் செயலாளரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதென பின்னர் அறிந்து கொண்டேன்.

நான் கைது செய்யப்பட்ட போது, எனது நண்பர்கள் மட்டுமல்ல, அரசியல் எதிரிகளும் கூட ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக எனக்காக ஒன்றிணைந்தனர். இந்த ஒற்றுமைக்கு நன்றி தெரிவிக்கவே இந்த மாநாடு பிரதானமாக ஏற்பாடு செய்யப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, சந்திரிகா பண்டாரநாயக்க மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ உட்பட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்களும் எனது கைதுக்கு எதிராக ஒன்றிணைந்தனர். நாம் அனைவரும் தற்போது ஒன்றுபட்டுள்ளோம்.

தற்போதைய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் அரசியலமைப்பு ரீதியான அடக்குமுறைகளை நாம் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும்.

அரசாங்கம் சர்வாதிகாரத்தை நிலைநிறுத்த முயற்சிக்கிறது. பல கட்சி ஜனநாயகத்தை அழிக்க முயல்கிறது. நாட்டின் 77 ஆண்டுகால ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகளாலேயே அநுரகுமார திசாநாயக்க இன்று ஆட்சி செய்வதற்கு ஒரு நாடு எஞ்சியிருக்கிறது.

ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை நாம் எதிர்க்கவில்லை, ஆனால்அரசாங்கத்தின் நடவடிக்கைகள் எதிர்க்கட்சிகளை அடக்குவதை நோக்கியே செல்கின்றன. நாம் பயந்து அடிபணிவோம் என அரசாங்கம் நினைக்கிறது.

ஆனால், நாட்டில் பல கட்சி ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டுமானால், நாம் அனைவரும் தொடர்ந்து ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும். இந்த செய்தியை கிராமப்புறங்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும். எனவே, கிராமிய மட்டங்களில் ஒன்றிணைந்த கூட்டங்களை நடத்தி, இந்த அரசியல் பயணத்தை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *