மேலதிகமாக என்னிடம் சொத்திருந்தால் பறிக்கலாம்; நாமல் ராஜபக்ஸ தெரிவிப்பு

என்னால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள எனது சொத்து மதிப்பு விபரங்களுக்கு மேலதிகமாக ஏதேனும் சொத்து இருக்குமாக இருந்தால் அதனை உடனடியாக அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தை கோருவதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
நேற்று வியாழக்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போது, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் சொத்து மதிப்பு விபரங்கள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
எங்களுடைய சொத்து மதிப்புகள் தொடர்பில் ஜே.வி.பி, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் நல்லாட்சி அரசாங்கம் போன்றன ஒன்றாக தேடின. இப்போது பொலிஸுக்கு பொறுப்பான அமைச்சர் அப்போது ஊழல் ஒழிப்பு குழுவின் செயலாளராக விசாரணைகளை நடத்தினார். நாங்கள் தகவல்களை மறைக்கவில்லை. நாங்கள் கிராம மக்களுடன் அரசியல் செய்தோம். ஆனால் பொய்களை கூறி அரசியல் செய்யவில்லை. நான் அரசியலுக்கு வந்த நாள் முதல் எனது சொத்து விபரங்களை வெளிப்படுத்தியுள்ளேன்.
இப்போது சிலர் எனது மனைவியின் சொத்துக்களையும் எனது சொத்துக்களுடன் சேர்த்து கதைக்கின்றனர். அவரின் தந்தை நான் பிறக்க முன்பிருந்தே செல்வந்தரே. இதனால் நாங்கள் முறையாக சொத்து விபரங்களை சமர்ப்பித்துள்ளோம்.
சொத்து விபரங்களில் எங்களுக்கு மறைப்பதற்கு எதுவும் கிடையாது. இதில் எவருக்காவது பிரச்சினை இருந்தால் விசாரிக்கலாம். மனைவியின் சொத்தக்களை எனது சொத்துக்களுடன் சேர்க்க முடியாது. அந்த காணி, அந்த தென்னந்தோட்டம் நாமலுடையது என்று அரசாங்கத்தில் உள்ளவர்கள் கூறலாம். ஆனால் அவை என்னுடையவை அல்ல.
என்னால் குறிப்பிட்டுள்ள சொத்துக்களுக்கு அப்பால் ஏதேனும் சொத்து இருக்குமாக இருந்தால் உடனடியாக அதனை அரசுடமையாக்கி மக்களுக்கு பகிர்ந்தளியுங்கள் என்று கோருகின்றேன் என்றார்.
![]()