இலங்கை

கட்சிக் கட்டுப்பாட்டை மீறி எமது கவன குறைவால் தப்பியோரை விடமாட்டோம்

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் கட்சியினுடைய தீர்மானங்களை மீறி போட்டியிட்ட ஒரு சிலர் எமது கவனக் குறைவால் தப்பி இருக்கிறார்கள். அது தொடர்பிலும் கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கிறது என தெரிவித்த இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அம்பாறையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டத்திற்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே இவ்வாறு கூறிய எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்ற தேர்தல், உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் உள்ளிட்ட மூன்று தேர்தல்கள் சம்ப ந்தமாகவும் கட்சியினுடைய தீர்மானங்களை மீறி செயற்பட்டவர்கள் அனைவருக்கும் எதிராகவும் விளக்கம் கோரி கடிதங்கள் அனுப்பப்பட்டு இருக்கின்றன. நேரடியாகவே எங்கள் கட்சிக்கு எதிராக போட்டியிட்டவர்கள் ஏற்கனவே விலக்கப்பட்டிருக்கிறார்கள்.

அப்படியாக உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் போட்டியிட்ட ஒரு சிலர் எமது கவனக் குறைவால் தப்பி இருக்கிறார்கள். அது தொடர்பிலும் கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கிறது விளக்கம் கோரி எழுதிய கடிதங்களுக்கு சிலர் பதில் எழுதாமல் இருக்கிறார்கள். சிலர் பதில் எழுதி இருக்கிறார்கள். பதில் எழுதாதவர்கள் விளக்கம் ஏதும் இல்லை என்ற அடிப்படையில் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். பதில் வழங்கியவர்களுக்கு அதற்கு மேல் அதிகமாக விளக்கம் தேவை இல்லாவிட்டால் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

கட்சியின் ஒழுக்காற்று முறைமைக்குள்ளே குற்றம் செய்தவர்களாக இருந்தால் கட்சிக்குள்ளேயே ஒரு விதமான ஒழுக்காற்று நடவடிக்கையும், கண்காணித்து ஒரு சந்தர்ப்பத்தை கொடுப்பதாக இருக்கலாம் என்ற கருத்துக்கள் வெளியிடப்பட்டன.அது சம்பந்தமாக நாங்கள் எடுத்து கவனத்தில் கொண்டு செயல்படுவோம்.

கட்சிக்கு எதிராக செய்யப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் சம்பந்தமாக பேசியிருக்கிறோம்.ஒரு சிலர் கட்சிக்கு சில முறைப்பாடுகளை கொடுத்திருக்கிறார்கள். முறையற்ற முறைப்பாடுகளும் வந்திருக்கின்றன . அதனை விசாரிக்க தீர்மானித்திருக்கிறோம். அது சம்பந்தமாக செயல்படுபவர்கள் குறித்தும் கட்சி தொடர்ச்சியான நடவடிக்கையை எடுக்கும். கட்சி மிகுந்த கட்டுப்பாட்டோடு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்சி கட்டுக்கோப்போடு செயல்பட வேண்டும் என்ற கருத்து அனைவராலும் தெரிவிக்கப்பட்டது. கட்சியின் கட்டுப்பாடு சம்பந்தமாக மிகத் தெளிவாக, அனைவரும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் தீர்மானத்துக்கு வந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *