உதய கம்மன்பில கைது செய்யப்படுவாரா?; நீதிமன்றத்திற்கு சி.ஐ.டி.கூறியதென்ன

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவை கைது செய்வது குறித்து தற்போது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வெள்ளிக்கிழமை (12) மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான உடன்படிக்கையின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தன்னைக் கைது செய்யத் தயாராகி வருவதாகவும், தன்னைக் கைது செய்வதைத் தடுக்க உத்தரவு பிறப்பிக்குமாறும் கோரி உதய கம்மன்பில தாக்கல் செய்த ரிட் மனு வெள்ளிக்கிழமை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சார்பாக ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுதர்ஷன டி சில்வா, மனுதாரர் உதய கம்மன்பிலவை கைது செய்வது குறித்து பொலிஸார் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.
மனுவின்படி, ஆகஸ்ட் 27, 2025 அன்று, கம்மன்பிலவின் கருத்துக்கள் 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான உடன்படிக்கை (ICCPR) சட்டத்தின் பிரிவு 3(1) மற்றும் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 120 இன் கீழ் குற்றமாக உள்ளதா என்பதைத் தீர்மானிக்க விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக சி.ஐ.டி. கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்குத் தெரிவித்ததாக செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அதன் பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
அதன்படி, மனுவின் பரிசீலனை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
![]()