நேபாளத்தில் உச்சக் கட்ட பதற்றம் பிரதமர், ஜனாதிபதி இராஜினாமா! ; நிதி அமைச்சரை ஓட ஓட விரட்டித் தாக்குதல்

நேபாளத்தில் சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையால் நேற்று போராட்டம் வெடித்தது. ஜென் Z தலைமுறையினர் நடத்திய இந்த போராட்டம் கட்டுக்கடங்காமல் சென்றது. போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் 19 பேர் கொல்லப்பட்ட நிலையில், 300-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். நிலமை கையை மீறி சென்றதால் பிரதமர் பதவியில் இருந்து கே.பி. சர்மா ஒலி ராஜினாமா செய்த நிலையில் சில மணி நேரங்களுக்குப் பின்னர் ஜனாதிபதி ராம் சந்திர பவுடலும் பதவி விலகியுள்ளார்.
இதற்கிடையில் நேபாள நிதி அமைச்சரை போராட்டக்காரர்கள் தெருவில் ஓட ஓட விரட்டி தாக்கிய காட்சிகள் வெளியாகியுள்ளன
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்று நேபாளம். இமயமலையின் அடிவாரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் அமைந்திருக்கும் நேபாளத்தில், சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையால் திட்டவட்டமாக எதிர்ப்பு எழுந்தது. பேஸ்புக், வாட்ஸ்அப், யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டன.
இதற்கு எதிராக இளைஞர்கள் போராட்டத்தில் குதித்தனர். தங்களை ஜென் Z தலைமுறை என குறிப்பிடும் அவர்களின் போராட்டத்தில் நேற்று முன்தினம் வன்முறை வெடித்தது. தலைநகர் காத்மாண்டு உள்பட பல்வேறு நகரங்களில் போராட்டக்காரர்கள் மற்றும் போலீசார் இடையே மோதல் ஏற்பட்டது. மேலும், பாராளுமன்ற வளாகத்திற்குள் போராட்டக்காரர்கள் நுழைந்தனர். இதையடுத்து பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 19 பேர் பலியானார்கள். 300-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இளைஞர்கள் போராட்டம் காரணமாக சமூக வலைத்தளங்கள் மீதான தடையை நேபாள அரசு திரும்ப பெற்றது. தடை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அனைத்து முக்கிய சமூக வலைத்தளங்களும் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தன.
சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீக்கப்பட்ட போதிலும் இளைஞர்களின் போராட்டம் நீடித்தது. நேபாள பிரதமர் கே.பி. ஒலிக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. துப்பாக்கிச் சூட்டில் 19 பேர் உயிரிழந்ததற்கு பொறுப்பு ஏற்று கே.பி. சர்மா ஒலி பதவியை விலக வேண்டும் என்று வலியுறுத்தி இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் ஆட்சி மாற்றம் செய்ய வேண்டும் என்றும் கோரினர். நேபாள பிரதமர் மற்றும் ஜனாதிபதியின் இல்லங்களுக்கு தீ வைக்கப்பட்டன.
அதே போல முக்கிய அரசியல் பிரமுகர்களின் வீடுகளையும் போராட்டக்காரர்கள் குறிவைத்தனர். அவர்களின் வீடுகள் மீது கற்கள் வீசப்பட்டன. தகவல் தொடர்பு அமைச்சர் பிருத்வி சுப்பா குருங்கின் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டது. போராட்டம் காரணமாக தலைநகர் முழுவதும் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டது. ஆனால் ஊரடங்கு உத்தரவை மீறி தலைநகர் காத்மாண்டுவில் இளைஞர்கள் போராட்டங்களை தீவிரப்படுத்தினர்.
அவர்கள் தெருக்களில் கூட்டமாக பேரணியாக சென்றனர். கட்டுக்கடங்காத வன்முறையால் நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும் ஹெலிகொப்டரில் அண்டை நாட்டிற்கு தப்பியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இது குறித்த உறுதியான தகவல் தெரியவில்லை.
இந்த நிலையில் பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்த நிலையில் சில மணி நேரங்களுக்குப் பின்னர் ஜனாதிபதி ராம் சந்திர பவுடலும் பதவி விலகியுள்ளார்.
இதற்கிடையே, நேபாள நாட்டு நிதி அமைச்சரை போராட்டக்காரர்கள் ஓட ஓட விரட்டி தாக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. நேபாள நிதி அமைச்சர் விஷ்ணு பிரசாத் பவுடேலை போராட்டக்காரர்கள் காத்மாண்டுவில் விரட்டுவதும், அதில் ஒரு போராட்டக்காரர் எட்டி உதைக்கும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இதனால் தடுமாறி விழும் அமைச்சர் உடனடியாக எழுந்து அங்கிருந்து ஒட்டம் பிடிக்கிறார். அப்போதும் விடாமல் போராட்டக்காரர்கள் அவரை துரத்தும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
ஊரடங்கு உத்தரவை ஏற்க மறுத்து காத்மாண்டுவில் போராட்டக்காரர்கள் தீவிர போராட்டத்தை முன்னெடுத்து வருவதால் நேபாளம் முழுவதும் உச்ச கட்ட பதற்றம் நிலவுகிறது. நேபாள எல்லையை ஒட்டிய பகுதிகளில் இந்தியாவும் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.
![]()