இலங்கை

இலங்கையில் மனித உரிமைகள் மீறல்களுக்கு  உள்நாட்டு பொறிமுறையை வலுப்படுத்த வேண்டும்

மனித உரிமைகள் மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பானவிவகாரங்களைக் கையாள ஒரு சுயாதீனமான விசேட ஆலோசகர் உட்பட ஒரு பிரத்தியேக நீதித்துறை பொறிமுறையை நிறுவுமாறு இலங்கை அரசாங்கத்திடம் ஐ. நா . மனிதஉரிமைகள் பேரவையின் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க் வலியுறுத்தியதுடன் இந்த நடவடிக்கைகளுக்கு மனித உரிமைகள் பேரவை உட்பட சர்வதேச ஈடுபாடு அவசியமானது என்றும்அவர் சுட்டிக்காட்டியுள்ளார் ,

ஐ. நா. மனித உரிமைகள்பேரவையின் 60 ஆவது அமர்வு நேற்று திங்கட் கிழமை ஜெனீவாவில் ஆரம்பமாகியிருந்த நிலையில் பேரவை உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் அறிக்கையை சமர்ப்பித்து அவர் உரையாற்றினார்

அறிக்கையை சமர்ப்பிக்கும் போது சர்வதேச ஈடுபாட்டிற்கு அழைப்பு விடுத்திருக்கும் ,அவர் இதன் மூலம் பொறுப்புக்கூறல் , நீண்டகால நல்லிணக்கம் மற்றும் நிலையான அமைதிக்கு ஆதரவளிக்க முடியும்.என்றும் தெரிவித்திருக்கிறார்

சர்வதேச சட்டத்தின் கீழ் கூறப்படும் குற்றங்களை விசாரித்து வழக்குத் தொடுப்பதும், பொறுப்புக்கூறலை உறுதி செய்வதும் இலங்கை அரசாங்கத்திடம் முதன்மையான பொறுப்பு என்றாலும், இதை சர்வதேச வழிமுறைகளால் பூர்த்தி செய்து ஆதரிக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்

மேலும் இலங்கை தொடர்பாக முன்னர் நிறைவேற்றப்பட்ட மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களின் கீழ் பொறுப்புக்கூறல் தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்கும், இலங்கையிலும் சர்வதேச அளவிலும் அர்த்தமுள்ள வகையில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க முயற்சிகளுக்கு பங்களிப்பதற்கும், மனித உரிமைகள் பேரவையும் ஐ. நா.சபையின் உறுப்பினர்களும் மனிதஉரிமைகள் பேரவையின் உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் வலுப்படுத்தப்பட்ட ஆற்றலுடன் கூடிய வகிபாகத்தை தொடர்ந்து ஆதரிக்க வேண்டும் என்றும்அதனைப் பயன்படுத்த வேண்டும்.

பல தசாப்தங்களாக ஆதிக்கம் செலுத்தி வந்த வன்முறை மற்றும் தண்டனையின்மை சுழற்சிகளிலிருந்து மீள்வதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பை இலங்கை தற்போது பெற்றுள்ளது.

மாற்றத்தக்க சீர்திருத்தம், பொறுப்புக்கூறல், உண்மை மற்றும் நீதி ஆகியவற்றிற்காக நாடு முழுவதிலுமிருந்தும், அரசாங்கத்திற்கு தெளிவான ஆணை கிடைத்துள்ளது.

அண்மையில், தாம், இலங்கைக்கு விஜயம் செய்த போது, நாட்டின் மிக நீண்டகால பிரச்சினைகளுக்கு, புதிய திசை நோக்கிய பயணத்திற்கு, அந்த நாட்டின் தலைமை உறுதியளித்துள்ளது .இந்த நிலையில், புதிய அணுகுமுறை, ஒத்திசைவானதும், காலக்கெடுவை வழங்கக் கூடியதாகவும் அமைய வேண்டும் .

பொறுப்புக்கூறல், நீதியை வழங்குதல், நீண்டகாலமாக இலங்கை மக்கள் அனுபவித்துவரும் அரசியல் ரீதியான பாகுபாடுகள் மற்றும் பிரிவினையை நீக்குதல் போன்ற விடயங்களில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

இலங்கை அரசாங்கம், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் குறித்து தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.அவையே,எதிர்கால குணப்படுத்துதல், நல்லிணக்கம் மற்றும் நிலையான அமைதியை வளர்ப்பதற்கு அவசியமானவை.

எனது இலங்கை பயணத்தின்போது, மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களால் பாதிக்கப்பட்டவர்களின் தொடர்ச்சியான துன்பங்களை நேரடியாக கண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

செம்மணி மனித புதைகுழியில், தமது ஒரு அன்பானவரின் இழப்பை தாங்கிக்கொள்ளாத துக்கத்தில் இருக்கும் ஒரு குடும்பத்தைச் தாம் சந்தித்ததாக குறிப்பிட்ட டர்க், தென் மாகாணத்தை ஒரு பெண்ணும் 30 ஆண்டுகளுக்குப் பிறகும் தனது கணவரைத் தேடி வருவதாக தம்மிடம் கூறியதாக தெரிவித்துள்ளார்

தண்டனையிலிருந்து விலக்கு என்பது, இரண்டாவது வன்முறை வடிவமாகும்.இது தீங்கு சுழற்சிகளை நிலைநிறுத்துகிறது.இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்களின் கோரிக்கைகள் தொடர்பில் கவனிக்கப்பட வேண்டும்.

அவர்களின் குரல்கள் பொறுப்புக்கூறல், உண்மை, நீதி மற்றும் இழப்பீடு குறித்த அரசாங்கத்தின் கொள்கைகளை வழிநடத்த வேண்டும்.

அத்துடன், உள்நாட்டுப் போரின் போது மனித உரிமை மீறல்கள் உட்பட மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களை முறையாக ஒப்புக்கொள்ள வேண்டும்.அரசு மற்றும் அதன் பாதுகாப்புப் படைகள் அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும்.

அவர்கள் செய்த உரிமை மீறல்கள் மற்றும் குற்றங்களின் நீடித்த தாக்கத்தை அங்கீகரிக்க வேண்டும்.

இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகளைப் போன்ற அரசு சாராத ஆயுதக் குழுக்களால் மேற்கொள்ளப்பட்டவை தொடர்பிலும், உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும்.இதுவே, பொதுவான நீதி வழங்கப்படுகிறது என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும்.

இலங்கை அரசாங்கம் ஆழமான அரசியலமைப்பு, சட்ட மற்றும் நிறுவன சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய அவசரத் தேவை உள்ளது .கடந்த கால துயரங்கள் மீண்டும் ஒருபோதும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு இது மிகவும் முக்கியமானது.

சுயாதீன அங்கத்தவர்களை கொண்ட, சுயாதீன பொது வழக்கு தொடுநர் அலுவலகம் ஒன்றை அமைப்பதற்கான இலங்கை அரசாங்கத்தின் முயற்சி வரவேற்கத்தக்கது.

முன்னைய தசாப்தங்களில் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டத்தின் மீறல்களை ஆராய ஒரு சுயாதீனமான விசேட ஆணைக்குழு மற்றும் பிரத்தியேக நீதித்துறை பொறிமுறையை இலங்கையில் ஸ்தாபிப்பதற்கும், அவர் தனது அறிக்கையில் பரிந்துரைத்துள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் குடியரிமை தொடர்பான நாடாளுமன்ற சீர்திருத்தத்தை தாம் தீவிரமாக ஊக்குவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்வதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாடு இருந்தபோதிலும், இந்த சட்டத்தின் கீழ் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் தன்னிச்சையான கைதுகள் மற்றும் தடுப்புக்காவல்களுக்கு உடனடி தடை விதிக்குமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலும், பொறுப்புக்கூறல் தொடர்பிலும், காணி விவகாரங்கள் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பிலும் பணியாற்றுபவர்கள் இலக்கு வைக்கப்படுகின்றனர். இந்த நிலை மாற்றப்பட வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

அதேவேளை இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட நிலங்களை விடுவித்தல், பயங்கரவாதத் தடை சட்டத்தைரத்து செய்தல் மற்றும் நீண்டகாலமாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவித்தல் ஆகியவை உயர் ஸ்தானிகரின் ஏனைய பரிந்துரைகளில் அடங்கியுள்ளன

அத்துடன்உயர்ஸ்தானிகர் சர்வதேச மனித உரிமைகள் கடமைகளை நிறைவேற்றுவதற்காக விரிவான பாதுகாப்புத் துறை மறுசீரமைப்பு மற்றும் பரந்த அரசியலமைப்பு, சட்ட மற்றும் நிறுவன மாற்றங்களையும் அறிக்கையில் பரிந்துரைத்திருக்கிறார்

உயர் ஸ்தானிகர் சமீபத்தில் இலங்கைக்கு விஜயம் செய்து, அதிகாரிகள், சிவில் சமூகம், அரசியல் கட்சிகள் மற்றும் மதத் தலைவர்களைச் சந்தித்ததைத் தொடர்ந்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஜெனீவா வில் நெற்று காலை தொடங்கிய மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வு அக்டோபர் 8 ஆம் திகதி வரைஇடம்பெறும்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *