கதைகள்

“இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்”… சிறுகதை….  பவித்திரா ராகவன்

காலையில் சுறுசுறுப்பாக எழுந்து காலையுணவு, மதியவுணவு, வீட்டு வேலை என துரித ரயில் வேகத்தில் செயற்பட்டுக் கொண்டிருந்த சுகுனாவின் அதிவேக சுழற்சி அந்த ஒற்றைக் கேள்வியால் நிலை குலைந்து போனது. அப்படியென்ன கேள்வி? யார் கேட்டது எதற்குமே கலங்காத சுகுனாவை ஸ்தம்பிக்க வைக்குமளவிற்கு அவ்வளவு கனமான கேள்வியா?

உண்மையில் மற்றவர்களைப் பொறுத்தவரை அந்தளவிற்கு அதுவொன்றும் பாரதூரமான வினா அல்ல.

ஆம். காலையில் மகன் வினோத்திற்கு தேநீர் எடுத்துச் சென்று படுக்கையருகே வைத்த சுகுனா ,

“வினோத் எழுந்திரு, வேலைக்கு நேரமாகிறது. நான் பம்பரம் மாதிரி சுழலுறேன்.

நீ ஜாலியாகப் படுத்திருக்கிறாய்.” என்றாள்.

“போதும் அம்மா ரொம்பத்தான் சலிச்சுக்கிறாய்.

IMG_7099.jpegஏதோ பெரிய தியாகம் செய்த மாதிரி நீ இல்லையென்றால் இங்க எதுவும் நடக்காதா என்ன?” வினோத்தைப் பொறுத்தவரை தனது தூக்கத்தை கெடுத்த அம்மாவிற்கு விடுத்த ஒரு பதில் அவ்வளவு தான். ஆனால் சுகுனாவிற்கோ அவன் தொடுத்த குற்றப்பத்திரிகை.

அந்த கேள்விக்குப் பின்னர் அவளால் எதுவும் செய்ய முடியவில்லை. இதே பதிலை அவள் அப்பா அம்மாவிடம் கூறிக் கேட்டிருந்தாள். ஏன் அவள் கணவன் சுகுமாரும் பலமுறை சொல்லிக் கேட்டிருக்கிறாள். அதே கேள்வியைத்தான் மகன் வினோத்தும் இன்று கேட்டான். மூன்று தலைமுறைகளிடம் இருந்து வந்த இதே கேள்வியைத்தான் நாளை

அவள் பேரனும் கேட்டாலும் ஆச்சரியமில்லை.இது நாளாந்த வாழ்வில் பெண்கள் ஒவ்வொரிடமும் சொல்லப்படுவதுதான். ஆனால் இந்தக் கேள்வி வெறும் கேள்வியில்லை. அவர்களைப் பற்றிய குடும்பத்தாரின் பரிகாச வார்த்தைகள் . சுகுனாவிற்கு சுள்ளென்று வலித்தது.

சிறுவயதிலிருந்து உயர் நிர்வாக அதிகாரியாக வர வேண்டும், தொடர்ந்து தொழிலில் முன்னேற வேண்டும் என்பதே சுகுனாவின் ஆசை. அவளது விருப்பம் போல் தனியார் வங்கி ஒன்றில் பல்கலைக்கழகம் முடித்தவுடனே வேலை கிடைத்தது. நல்ல சம்பளம் இரண்டு வருடத்திலேயே தொடர் பதவியுயர்வுகள். இன்னும் பத்து வருடங்களில் பிராந்திய தலைமைIMG_7100.jpeg அதிகாரியாக வந்துவிடலாம். அவளது திறமையைப் பார்த்து சிரேஷ்ட அதிகாரிகள் பாராட்டினர். அவளுடன் வேலை செய்தவர்கள் சிறந்த கிளைக்கான விருதினைஅவர்களது வங்கிக்கிளை பெற்ற போது அதற்கு பிரதான பங்களிப்பு சுகுனாதான் என அனைவருமே புகளாரம் சூட்டினர்.

அந்தக்காலப்பகுதியில்தான் அவள் தனது காதலன் சுகுமாரைக் கரம் பிடித்தாள். சுகுமாரும் சுகுனாவிற்கு சளைத்தவன் அல்லன். சுகுமார் ஒரு வைத்தியன். மருத்துவபீடத்தில் முதல் மாணவன். பல பாடங்களுக்கான விருதுகள் அவனுக்கே கிடைத்தன. பெயர்களில் மட்டுமன்றி திறமையிலும் ஒருவருக்கொருவர் இணையானவர்கள்தான். சுகுமாரிற்கு வேலையில் இடமாற்றங்கள் தவிர்க்க முடியாதவை. அவனது நிபுணத்துவத்தால் தொடர்ச்சியாக பல அரச மருத்துவமனைகளில் அவனது சேவை தேவைப்பட்டது.

வினோத் பிறந்த பின்னர் பல நாட்கள் அவன் சுகுனாவின் அரவணைப்பிலேயே இருந்தான். மகனையும் வேலையையும் சுகுனா நன்கே கவனித்தாள். சுகுமாரின் பெற்றோரைக்கூட அவளே கவனித்து வந்தாள். அவர்களின் மறைவிற்கு பின்னர் சுகுமாரிற்கு அமெரிக்காவில் பெரிய மருத்துவமனையொன்றில் வேலை கிடைத்தது. சுகுமாரின் உயர்ச்சியையும் மகனின் எதிர்காலத்தினையும் கருத்தில் கொண்டுதனக்குப் பிடித்த வேலையையும் உதரித் தள்ளிவிட்டு அவர்களுடன் பயணமானாள். அன்று முதல் அவர்கள் இருவருமே அவளது உலகமாகச் சுருங்கினர்.

ஆரம்பத்தில் அவருடன் தொடர்பிலிருந்து பாடசாலைத் தோழிகள் கூட காலங்கள் செல்லச் செல்ல அவளைத் தேடி தொடர்பு கொள்வது குறைந்து கொண்டது. சுகுனா தேடி எடுக்கும் தொலைபேசி அழைப்புக்களின் போது கூட நேரமாற்றம் , வேலை , பிள்ளைகள் என பல சாட்டுக்கள் வெளிப்பட்டன. சுகுனாவும் இதற்கு மேல் அவர்களை தான் தொல்லை பண்ணி தொடர்பு கொள்ள வேண்டாம் என நினைத்துக் கொண்டாள்.

வினோத் பாடசாலை செல்லும் வரை Day Care செலவு அதிகமென்பதால் சுகுமாரின் அறிவிற்கேற்ப அவளே அவனை முழு நேரமும் வீட்டிலிருந்து கவனித்துக் கொண்டாள்.

வேலைக்குச் செல்லாத காரணத்தால் பொருளாதாரச் சுதந்திரமும் குறையத் தொடங்கியது. சுகுமார் கைநிறையச் சம்பாதித்தாலும் ஒவ்வொரு தேவைக்கும் சுகுமாரிடம் பணம் கேட்டு

வாங்க வேண்டியிருந்தது. ஆசைப்பட்டு தனக்கென கைப்பையோ , ஆடையோ வாங்கி விட்டால் “வீட்டிலிருக்கும் உமக்கு இந்த ஆடம்பரச் செலவு எதற்கு ? “என்றான் சுகுமார். இதற்காகவேனும் மறுபடியும் வேலைக்கு செல்ல வேண்டுமென நினைத்துக் கொள்வான். வினோத் பாடசாலை செல்லத் தொடங்கியதும் வாரத்தில் மூன்று நாட்கள் வேலைக்குச் செல்லவும் செய்தாள். ஆனாலும் அவளது முழுக் கவனமும் வினோத்தின் எதிர்காலத்தை நோக்கியே பயணித்தால் வேலையில் சாதிக்க வேண்டுமென்ற எண்ணங்கள் இரண்டாம் பட்சமாகின.

அவள் உழைப்பு வீண் போகவில்லை. வினோத்தும் சுகுமாரைப் போல் மருத்துவத்துறையில்IMG_7101.jpeg தேர்வாகி இப்போது வேலை செய்யவும் தொடங்கிவிட்டான். சுகுனாவும் சுகுமாரினதும் வினோத்தினதும் தேவைகளைஅறிந்து செயற்படுவதும், அவர்களுக்கு ஆரோக்கியமான உணவுகளை தயார் செய்வதும், வீட்டைப் பராமரிப்பதுமென தன் வட்டத்தைச் சுருக்கிக் கொண்டாள். இந்த இருபது வருட வாழ்க்கையில் கோவிலில் காணும் போது கதைக்கும் பானுவைத் தவிர்த்து வேறு தோழிகளை சம்பாதிக்கவும் இல்லை. பள்ளித் தோழிகள் றூயவள WhatsApp group இல் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வார்கள். அப்பாவும் மகனும் பொருளாதாரம், அரசியல் , விளையாட்டு, மருத்துவம் என உரையாடும் பட்டியல் நீண்டு கொண்டே போகும். அந்த உரையாடல்களில் நடுவே சுகுனா எதுவும் சொன்னால்

“சுகுனா இது ஒன்றும் சமையல் இல்லை. உமக்கு இது பற்றி எதுவும் தெரியாது” என்பான் சுகுமார் .

வினோத்தைப் பொருத்த வரை அம்மா நன்றாகச் சமைப்பாள். வீட்டைப்பராமரிப்பாள். அவ்வளவு தான். அவள் பாடசாலை காலங்களில் சிறந்த விளையாட்டு

வீராங்கனை, பல்கலைக் கழகத்தில் பல பதக்கங்களைபெற்றவள் என்பதையோ அவன் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

வினோத்திடம் ஒருநாள்……………..

“வினோத் உனக்கு திருமணம் பற்றிய எண்ணம் என்ன?” என்றான் சுகுமார்.

” அப்பா, அம்மாவைப் போல ஒருத்தி வேண்டும்”, என்றான் வினோத்.

சுகுனாவிற்கு பெரும் மகிழ்ச்சி. மகன் தன்னை அவ்வளவு தூரம் நேசிப்பதாய் எண்ணி பெருமை கொண்டாள்.

அம்மாவைப் போல என அன்று அவன் சொன்னது தன்னையும் வீட்டையும் பார்த்துக் கொள்வதற்குத்தான் என்று சுகுனாவிற்கு இன்று தான் புரிந்தது.

வழமைக்கு மாறாக இன்று வேலை முடிந்து வீடு திரும்பிய சுகுமாரும் வினோத்திற்குச் சுடச்சுட தேநீர் பரிமாறப்படவில்லை. உடுத்த உடைகளை துவைக்கப்படவில்லை. உணவருந்திய பாத்திரங்கள் கழுவப்பட்டிருக்கவில்லை. சமையலறையோ படுக்கையறையோ துப்பரவு செய்யப்பட்டிருக்கவில்லை. சுகுனாவின் கையடக்கத் தொலைபேசியை அழைத்த போது பதில் கிடைக்கவில்லை. அவர்களுக்காக அவள் விட்டுச் சென்றிருந்தது மடல் ஒன்று தான்.

IMG_7102.jpeg“அன்புள்ள சுகுமார் மற்றும் வினோத்திற்கு,

நான் இல்லையென்றால் எந்த சுழற்சியும் நிற்கப் போவதில்லை . எனது பயணத்தில் தவறான ரயிலில் ஏறிவிட்டேன் என்று உணர்ந்ததனால் அதிலிருந்து இறங்கி, நான் செல்ல வேண்டிய இடத்திற்கான விமானத்தில் ஏறுகிறேன். எனது பயணப்பதையும் உங்களது பயணப்பதையும்

எங்கேணும் இணைந்தால் சந்திப்போம்.

இப்படிக்கு,
சுகுணா ”

இம்முறை அவளது பயணம் அவளுக்கானது. புதிய சிந்தனை, புதிய மனிதர்கள். புதிய உறவுகள். எவ்வித எதிர்பார்ப்புகளும் இன்றி பழைய சுகுனாவாகப் பணத்தைத் தொடர்ந்தாள் .

– பவித்திரா ராகவன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *