இலங்கை

முல்லைத்தீவில் வட்டுவாகல்,கேப்பாப்புலவில் இராணுவ முகாம்களில் உள்ள விகாரைகளின் கீழ் புதைகுழிகள்; ஆய்வுகள் செய்ய வலியுறுத்துகிறார் ரவிகரன் 

இறுதிக்கட்டப் போரின்போது இராணுவத்திடம் சரணடைந்த பொதுமக்கள் மற்றும் போராளிகள் படுகொலைசெய்யப்பட்டு கேப்பாப்புலவு மற்றும் வட்டுவாகல் பகுதிகளில் அமைந்துள்ள இராணுவமுகாம்களின் விகாரைகளின் கீழ் புதைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், குறித்த இராணுவ முகாம்களில் அமைக்கப்பட்டுள்ள விகாரைகள் ஆய்விற்குட்படுத்தப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

அத்தோடு தமிழ் இனவழிப்பு மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், தமிழர்தாயகப் பகுதிகளில் இனங்காணப்பட்ட மனிதபுதைகுழிகள் உள்ளிட்ட விவகாரங்களுக்கு பன்னாட்டு நீதி விசாரணைகளை முன்னெடுப்பதற்கு தற்போதைய தேசியமக்கள்சக்தி அரசாங்கம் பூரண ஒத்துழைப்புக்களை வழங்கவேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் யாழ்ப்பாணம் கிட்டு பூங்காவிலிருந்து செம்மணிவரை மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே ரவிகரன் எம்.பி.இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்தகாலத்தில் தமிழர்கள் மீது இனவழிப்புச் செயற்பாடுகள் இடம்பெற்றன என்பதற்கு வடக்கு, கிழக்கு தமிழர்தாயகத்தில் இனங்காணப்பட்டுள்ள மனிதப் புதைகுழிகளும், மனிதப் புதைகுழிகளிலிருந்து அகழ்ந்தெடுக்கப்படுகின்ற எலும்புக்கூடுகளும்,சாட்சியாக இருக்கின்றன. இதனை யாருமே மறுக்கமுடியாது.

தற்போது செம்மணி மனிதப் புதைகுழி பெரும் பேசுபொருளாக மாறியுள்ளன. செம்மணியில் அகழ, அகழ எம்மவர்கள் எலும்புக்கூடுகளாக மீட்கப்படுகின்ற அவலங்களைக் காண்கின்றோம். கொலைசெய்தவனிடமே

நீதியைக் கோருகின்ற உள்ளக நீதிவிசாரணைப்பொறிமுறையில் எமக்கு கடுகளவும் நம்பிக்கை கிடையாது.

ஆகவேதான் தமிழ் இனவழிப்பு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், மனிதப்புதைகுழிகள் உள்ளிட்ட விவகாரங்களுக்கு தொடர்சியாக பன்னாட்டு நீதி விசாரணையைக் கோருகின்றோம்.

முல்லைத்தீவில் வட்டுவாகல் மற்றும் கேப்பாப்புலவு பகுதிகளில் இராணுவமுகாம்களில் அமைக்கப்பட்டுள்ள விகாரைகள் அகற்றப்பட்டு விகாரைகளின் கீழ்ப்பகுதிகள் அகழ்ந்து ஆய்வுகள் செய்யப்படவேண்டும். அல்லது நவீன கருவிகளின் துணையுடன் ஸ்கேன் செய்யப்பட்டு விகாரையின் கீழ்ப்பகுதியில் உள்ள விடயங்கள் தொடர்பில் வெளிப்படுத்தப்படவேண்டும் எனக் கோருகின்றேன்.

2009ஆண்டு இறுதிக்கட்ட போரின்போது சரணடைந்த போராளிகள் மற்றும் மக்களை இராணுவம் கைதுசெய்துள்ளது. அதன்பின்னர் அவ்வாறு இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டவர்கள் வட்டுவாகல் சப்தகன்னியர் ஆலயத்திற்கு அருகே கடற்கரைநோக்கி போகும் பாதையினூடாக பேருந்துகளில் அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர். அதேபோல் சரணடைந்த பலர் கேப்பாப்புலவு நோக்கியும் இராணுவத்தினரால் பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

அவ்வாறு இராணுவத்தால் பேருந்துகள் மூலம் அழைத்துச்செல்லப்பட்டவர்கள் திருப்பி அழைத்து வரப்படவில்லை. என்ன ஆனார்கள் என்பதும் தெரியாமலுள்ளது. அப்படியெனில் அவ்வாறு அழைத்துச்செல்லப்பட்டவர்கள் எங்கேபோனார்கள்.

தனிச் சைவத் தமிழ் கிராமமான வட்டுவாகலில் எதற்கு பாரிய விகாரை அமைக்கப்பட்டது. அந்த விகாரையை அகற்றி அகழ்வாய்வுகளை மேற்கொள்ளவேண்டும். அல்லது விசேட ஸ்கேன் கருவிகளைப் பயன்படுத்தி பரிசோதனை மேற்கொண்டு உண்மைத்தன்மைகள் வெளிப்படுத்தப்படவேண்டும். அதேபோல் கேப்பாப்புலவு இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள பாரிய விகாரையும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவேண்டும். ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

இதுதொடர்பில் ஏற்கனவே பலதடவைகள் எம்மால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. பாராளுமன்றிலும் இந்த கேப்பாப்புலவு மற்றும் வட்டுவாகல் இராணுவமுகாம்களில் அமைந்துள்ள விகாரைகள் ஆய்வுக்குட்படுத்தப்படவேண்டுமென கோரியுள்ளேன். இதுவரை அந்த விகாரைகளை ஆய்வுக்குட்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *