சீமானும் – அவரது அரசியலும் 55 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்திருந்தால்…

சென்னைப் பல்கலைக் கழகத்தின் முன்னால் பேராசிரியர் நேற்றிரவு என்னை அலைபேசியில் அழைத்தார்.
நாளை (இன்று) நடக்கும் ‘மரங்களின் மாநாட்டிற்கு நீங்கள் வருகிறீர்களா? நானும் வருகின்றேன்’ என்றார்.
எனக்கு வியப்பு – காரணம் எப்போதாவது அவர் சீமானை சற்று விமர்சிப்பவராக இருந்தார். அதையொட்டி நீண்ட விவாதமும் நடந்துள்ளது.
நேற்றும் பேசினார்.
சீமானின் இந்த அரசியல் ஒரு 50, 55 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால் தமிழகத்தின் வளம்மிக்கக் காடுகளும், மரங்களும் அழிக்கப் பட்டிருக்காது. கேரளக்காடுகளை விட பல மடங்கு நம் தமிழகத்துக் காடுகள் உலகளவில் பேசப்பட்டிருக்கும்.
கொல்லிமலை, ஜவ்வாது மலை, கல்வராயன் மலை,மேற்கு தொடர்ச்சி மலை, இன்னும் பிற காடுகள் எல்லாம் காக்கப்பட்டிருக்கும். இந்த சீமானின் சிந்தனை – வேகம், இந்த அரசியல் எல்லாம் 55 ஆண்டுகளுக்கு முன்பு இல்லாமல் போனது பெரும் இழப்பு என்றார்.
பேராசியர் கொஞ்சம் குசும்புத்தனம் கொண்டவர். பகடி செய்கிறாரோ என்று நினைத்து குழம்பினேன்.
உண்மையைத்தான் சொன்னார்.
“1970-களில் இப்போதைய உத்தர்காண்ட் மாநிலத்தில் தொடங்கியது சிப்கோ இயக்கம்(ChipKo Movement). இங்கே நம்மாழ்வார் இருந்ததைப் போல அங்கே சுந்தர் பகுகுணா என்பவர் தொடங்கிய ‘மரங்களைக் காப்போம்’ என்ற இயக்கம் அது.

வடகிழக்கு மலைக்-காடுகளில் இருந்த விலை உயர்ந்த, வயது மூத்த மரங்ளை எல்லாம் அரசக் கூலிகள் வேட்டையாடத் தொடங்க, அதற்கு எதிரான பெரும் மக்கள் இயக்கமாக, அதிக பெண்கள் முன்னின்ற இயக்கம் தான் அது.
பெருமளவு மரங்களை வெட்டுவதால் இமயமலையே அழிவை சந்திக்கும், அதனால் மனித குலத்திற்கு பேரழிவு ஏற்படும் – என்ற குரல் அந்த இயக்க மக்களிடம் கோபமாக எழுந்தது.
மரங்களை வெட்டக்கூடாது, வெட்ட அனுமதிக்க மாட்டோம் என்று பெண்களும் சிறுவர்களுமாகச் சென்று ஒவ்வொரு பெருமரத்தையும் சுற்றி நின்று கைகோர்த்து கட்டிப் பிடித்துக் கொள்வார்கள். இது ஒருவித போராட்டம். இது வடகிழக்கு மாநில காடுகள் வரை பரவியது.
அந்த நேரத்தில் தமிழகத்திலும் அப்படி ஒரு இயக்க அரசியலை முன்னெடுக்க ஆட்களும் இல்லை, அரசியலும் இல்லை. பின்னாளில் தான் நம்மாழ்வார் இயக்க அரசியல் வந்தது.
சுந்தர் பகுகுணாவைப் போல் நமக்கொரு ஆள் இல்லாமல் போனார்கள்.
55 ஆண்டுகளுக்குப் பிறகு
இப்போது தான் சீமானின் குரல் – “மரங்களுக்காக பேசுவோம், மரங்களைக் காப்போம்” என கிளம்பி இருக்கின்றது. இலட்சக் கணக்கான இளைய பிள்ளைகள் அவர் பின்னால் நிற்கிறார்கள். இது பெரும் மகிழ்ச்சியை தருகின்றது” என்று அவர் முடித்த போது மேலும் வியந்தேன்.
67 வயதுடைய முன்னாள் பேராசிரியர் இன்று இளைஞர்களைப் போல் சீமானை நோக்கி – சீமான் முன்வைக்கும் இயற்கையை காப்போம் என்ற அரசியலை நோக்கி பயணமாகிக் கொண்டிருப்பதுதான்,
மாற்றத்திற்கான அரசியல்,
மாற்று அரசியல்.
குறிப்பு 1 : 1970 களில் தான் நக்சல்பாரி இயக்கம் இந்தியாவில் வெடித்து எங்கெங்கும் பரவியது. அதற்கு காரணம் வியட்நாம் போர். அதன் தாக்கம் ஐரோப்பா முழுவதும் இளைஞர்களிடையே பரவியது. இங்கே இருந்த திராவிட அரசியல்வாதிகளும் போலி கம்யூனிஸ்ட்டுகளும் அதை எப்படி எல்லாம் மடைமாற்றினார்கள் என்ற அரசியலையும் சொன்னார்.
குறிப்பு 2 : வடக்கு, கிழக்கு மாநிலங்களில் இன்று நடக்கும் நிலச்சரிவுகளும், வெள்ள பாதிப்புகளையும் – இதனூடே காடுகள் அழிக்கப்பட்ட அரசியலையும் விளக்கினார்.
பா.ஏகலைவன்
பத்திரிகையாளர்.
![]()