யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் சர்வதேச நீதி கோரி நாளை மக்கள் எழுச்சிப் பேரணி

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் நாளை சனிக்கிழமை (30) அனுஷ்டிக்கப்படும் நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்குச் சர்வதேச நீதி கோரி மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணி வடக்கு- கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் வடக்கில் யாழ்ப்பாணத்திலும், கிழக்கில் மட்டக்களப்பிலும் நடைபெறவுள்ளது.
நாளை முற்பகல்10 மணியளவில் யாழ்.கிட்டுப் பூங்கா முன்பாகப் பேரணி ஆரம்பமாகிச் செம்மணி வரையும், மட்டக்களப்பு கல்லடிப் பாலத்திலிருந்து பேரணி ஆரம்பமாகி காந்திப் பூங்கா வரையிலும் முன்னெடுக்கப்படும்.
தமிழர்களுக்கு எந்தவித நீதியும், உரிமைகளும் கிடைக்காமையால் சர்வதேச நீதிப் பொறிமுறை ஊடாக நீதியைப் பெற்றுக் கொள்வதற்கும், இனிவரும் காலங்களில் இப்படியான ஆட்கடத்தல் சம்பவங்கள் மீள நிகழாமையை வலியுறுத்தியும் வடக்கு- கிழக்கு இணைந்த தமிழர்களாக ஒருமித்துக் குரல் கொடுக்க வருமாறு வடக்கு- கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
இதேவேளை,காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச நீதி கோரிய மாபெரும் போராட்டத்திற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தனது முழுமையான ஆதரவை வழங்கியுள்ளதுடன் போராட்டத்தில் வடக்கு- கிழக்கிலிருந்து தமிழர் தேசமாக அனைவரும் அணி திரள வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளது.
![]()