செம்மணி மனிதப் புதைகுழி வளாகத்தில் நடத்தப்பட்ட ஸ்கேன் ஆய்வு முழுமையான அறிக்கை நீதிமன்றத்துக்கு சமர்பிக்கப்படவில்லை

யாழ்ப்பாணம், செம்மணி – சித்துப்பாத்தி மனிதப்புதைகுழி வளாகத்தில் நடத்தப்பட்ட ஜி.பி.எஸ். ஸ்கேன் ஆய்வு தொடர்பான முழுமையான அறிக்கை இதுவரை நீதிமன்றத்துக்கு சமர்பிக்கப்படவில்லை.
குறித்த அறிக்கையின் சுருக்கம், பேராசிரியர் ராஜ் சோமதேவவினால் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்துக்கு சமர்பிக்கப்பட்டு, மேலதிக அகழ்வுப் பணிக்காக 8 வாரங்கள் கால அவகாசம் தேவை என முன்னதாக கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
அத்துடன், ஸ்கேன் சோதனைக்கு அமைய, குறித்த பகுதியில் வித்தியாசங்கள் காணப்படுவதால் அகழ்வு மேற்கொள்ளப்பட வேண்டும் எனக்கூறியே கால அவகாசம் கோரப்பட்டதாகப் பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி ரணிதா தெரிவித்தார்.
இதேவேளை இங்கு அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் நாட்டின் இரண்டாவது பெரிய புதைகுழியாக மாறியுள்ளது.
இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய மனித புதைகுழி மன்னாரில் உள்ள சதொச மனித புதைகுழியாகும். அங்கு 28 சிறுவர்களின் எலும்புகள் உட்பட 376 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன.
2013 ஆம் ஆண்டில், இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மூன்றாவது பெரிய புதைகுழியாகக் கருதப்படும் மாத்தளை வைத்தியசாலைக்கு அருகிலுள்ள ஒரு இடத்திலிருந்து 155 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன.
இலங்கையில் நான்காவது பெரிய மனித புதைகுழியான கொழும்பு துறைமுக மனிதப் புதைகுழியிலிருந்து குறைந்தது 88 பேரின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதோடு அதன் அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
ஐந்தாவது பெரிய புதைகுழி மன்னாரில் உள்ள திருக்கேதீஸ்வரம் புதைகுழியாகும். அங்கு 2013 இல் 82 மனித உடல்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வாய்வு பணிகள் நிறைவடைந்த நேரத்தில், 52 நபர்களின் எச்சங்கள் மீட்கப்பட்டன.
![]()