சீனாவின் வெற்றி நாள் கொண்டாட்டம்; புதின், கிம் ஜாங் உன் பங்கேற்பு!

சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் செப்டம்பர் 3-ஆம் திகதி, இரண்டாம் உலகப் போரில் ஜப்பானுக்கு எதிரான வெற்றி தினத்தின் 80-வது ஆண்டு விழா கொண்டாடப்பட உள்ளது.
இந்த கொண்டாட்டத்தின் முக்கிய நிகழ்வான ராணுவ அணிவகுப்பில், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் உட்பட 26 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தியான்மென் சதுக்கத்தில் நடைபெறும் இந்த அணிவகுப்பு நிகழ்ச்சியின் போது, சீனாவின் அதிநவீன இராணுவ ஆயுதங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. இதன் மூலம், உலகின் மிக சக்திவாய்ந்த இராணுவங்களில் ஒன்றாக சீனா வளர்ந்துள்ளதை உலகிற்கு வெளிப்படுத்த அந்த நாடு திட்டமிட்டுள்ளது.
இந்த நிகழ்வு, அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் பதற்றங்களுக்கு மத்தியில் நடைபெறுவதால், சர்வதேச அளவில் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
மேற்குலக நாடுகளும், உலகளாவிய பார்வையாளர்களும் இந்த அணிவகுப்பை உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்கள். ஏனெனில், இது சீனாவும் அதன் நட்பு நாடுகளும் ஒன்றிணைந்து, உலக அரங்கில் தங்கள் செல்வாக்கை நிலைநிறுத்துவதற்கான ஒரு முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.
![]()