அரசியல் பழிவாங்கல்கள் மூலம்; ஜனநாயகத்தை புதைக்க சவப்பெட்டி தயார்; நாட்டை மீட்க அணி திரளுமாறு எதிர்க்கட்சிகள் கூட்டாக அழைப்பு

அரசாங்கத்தின் செயற்பாடுகள் நாட்டின் ஜனநாயகத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி ஜனநாயகத்தை புதைப்பதற்கான சவப் பெட்டியின் பலகைகள் தயார் படுத்தப்படுவதால் அதற்கு எதிராக கட்சி பேதங்களை மறந்து நாட்டை மீட்டெடுப்பதற்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைதானதை தொடர்ந்து பொது எதிரணியாக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
‘அரசியலமைப்பு சர்வாதிகாரத்தை தோற்கடிப்போம்’ என்ற தொனிப்பொருளில் கொழும்பில் அமரி ஹோட்டலில் இந்த ஊடகவியலாளர் மாநாடு நடத்தப்பட்டது.இதில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் சபநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அதுகோரல, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பொதுச் செயலாளர் சாகர காரியவசம், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஜனநாயக குடியரசுக் கட்சி தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, தமிழ் முற்போக்குக் கூட்டணி இணைத் தலைவர்களான மனோ கணேசன், பழனி திகாம்பரம், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், முன்னாள் அமைச்சர்களான ஜீ.எல்.பீரிஸ், நிமல் சிறிபால டி சில்வா, மகிந் அமரவீர, சுசில் பிரேமஜயந்த, டிரான் அலஸ் ஆகியோரும் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, காவிந்த ஜயவர்தன, ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநயக்க உள்ளிட்ட பெருமளவிலான முன்னாள் அரசியல்வாதிகள் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதிகளாக மகிந்த ராஜபக்ஷ மற்றும் சந்திரிகா குமாரதுங்க ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளதாக முன்னர் கூறப்பட்ட போதும், அவர்கள் இதில் கலந்துகொண்டிருக்கவில்லை. எனினும் சந்திரிகா குமாரதுங்கவினால் அறிக்கையொன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்ததுடன், அதனை ஐக்கிய தேசியக் கட்சி பொதுச் செயலாளர் தலதா அதுகோரல வாசித்தார்.
இங்கு உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறுகையில்,
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டமை தொடர்பில் நான் கவலையை தெரிவித்துக்கொள்கின்றேன். எமது நாடு தற்போது செல்லும் பயணத்தை பார்க்கும் போது நாட்டின் ஜனநாயகம் தொடர்பிலான பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. ஜனநாயகம் என்பது இந்த நாட்டில் இரத்தத்துடன் கலந்த விடயமாக உள்ளது. 1948இல் நாடு சுதந்திரமடைந்த நாளில் இருந்து ஜனநாயகம் கட்டம் கட்டமாக பலமடைந்தது. இப்போது இந்த ஜனநாயக சமுகத்தில் இருந்த அடையாளங்கள் மெதுவாக அழிவடைந்து போவதை பார்க்கக்கூடியதாக இருந்தது. ஜனநாயகத்தை புதைப்பதற்கான பிணப்பெட்டியின் பலகைகள் தயார்ப்படுத்தப்படுவது போன்றே தெரிகின்றது. ஜனநாயகத்திற்கு பிரச்சினை ஏற்படுகின்றது என்று தெரிகின்றது என்றால் கட்சி பேதங்களை மறந்து நாட்டை மீட்டெடுப்பதற்காக ஒன்றிணைய வேண்டும் என்று அனைவரிடமும் கேட்டுக்கொள்கின்றோம். அத்துடன் ரணில் விக்கிரமசிங்கவின் விடுதலை தொடர்பில் நாங்கள் முன்னெடுக்கக்கூடிய நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்றார்.
முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கூறுகையில்,
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. ஜனாதிபதியென்ற வகையில் கிடைத்த அழைப்புக்கமைய நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த நிலையிலேயே அது தொடர்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அது தொடர்பான பொலிஸ் விசாரணைகள் முழுமையடையாமல் அவர் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். அரசாங்கத்திற்கு எதிராக ஏதேனும் கருத்துக்களை வெளியிட்டால் கருத்து வெளியிடுபவர்களை அச்சுறுத்தி மௌனமாக்குவதையே காண்கின்றோம். இதனால் ஜனநாயக நிறுவனங்கள் முழுமையாக இல்லாமல் செய்யப்படுகின்றது. இங்கு எமது உரிமைகள் முக்கியமானவையே. இதனை தோற்கடிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கூறுகையில்,
ஆறு மாதங்களில் நாட்டை அபிவிருத்தி செய்வதாக பொய் வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தன்னால் எதுவும் செய்ய முடியாது என புரிந்துகொள்ளும் போது, தமக்கு எதிரானவர்களை அடக்கி தமது ஆட்சியை முன்னெடுக்க முயற்சிக்கின்றனர். இது நாம் விரும்பும் கருத்துக்கு எதிரான அச்சுறுத்தலாகும். இதனை எமது கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட கட்சியினர் வன்மையாக கண்டிக்கின்றோம் என்றார்.
ஐக்கிய குடியரசுக் கட்சித் தலைவர் சம்பிக்க ரணவக்க உரையாற்றுகையில்,
ரணில் விக்கிரமசிங்கவின் கைதை தொடர்ந்து அனைவரும் சட்டத்தின் கீழ் சமமானவர்கள் என்று அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் அரசாங்கத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள போதும், அது தொடர்பான விசாரணைகள் நடக்கவில்லை. இந்நிலையில் இப்போது ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளார். தனிக் கட்சி முறைமையை முன்னெடுத்துச் செல்வதற்காக உள்ளே கொண்டு செல்லப்படும் அரசியல் செயற்பாடே இது. பல கட்சி முறைமையை ஏற்றுக்கொள்ளும் அனைவரும் இந்த விடயத்தில் ஒன்றிணைய வேண்டும். 87/89 காலத்தில் செய்ய முடியாததை மக்கள் ஆணை கிடைத்துள்ளதாக கூறி நிறைவேற்றுவதற்கே முயற்சிக்கின்றனர். இதனால் சகலரும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.
தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவிக்கையில்,
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நிகழ்த்தப்படும் அரசியல் பழிவாங்கல் செயற்பாட்டை கடுமையாக நாங்கள் கண்டிக்கின்றோம். ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக பட்டலந்த வதை முகாம், மத்திய வங்கி ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. இவற்றுக்கு நடவடிக்கை எடுப்போம் என்று கூறியே ஜே.வி.பி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. அதனை செய்யுங்கள். அதனை செய்திருந்தால் இங்கு இவ்வாறு கூட்டாக அமர்ந்து ஊடக சந்திப்பை செய்ய வேண்டிய தேவை வந்திருக்காது.லண்டனில் நடந்த செலவில் ஏதேனும் பிரச்சினை இருந்திருந்தால் மீளச் செலுத்தும் முறை உள்ளது. அதன்படி அந்தக் கடிதத்தை அவருக்கு அனுப்பியிருக்கலாம். அதன்போது அவர் முடியாது என்று கூறியிருந்தால் நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால் அதனை செய்யாமல் இவ்வாறு அவரை இழுத்துச் சென்று இப்போது அவர் வைத்தியசாலையில் இருக்கின்றார். இது நூறு வீதம் அரசியல் பழிவாங்கல் செயற்பாடே என்றார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறுகையில்,
எதிர்க்கட்சிகள் இப்போ அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றிணைந்துள்ளன. நாங்கள் வரலாற்றில் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். இது ரணில் விக்கிரமசிங்கவின் கைதுக்கு எதிரானது மட்டுல்ல. ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக முன்வந்துள்ளதுடன், இவ்வாறாக ஜனநாயக விரோத செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டாம் என்று ஜனாதிபதி அனுரகுமாரவையும் கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.
![]()