அண்டங்காக்கையும் ஊர்க்குருவியும் – 02 … சோலையூர் குருபரன்

சுடு தண்ணீர்
இரவு 11.00 மணி இருக்கும். பொன்னன் இருமி இருமிக் கொண்டு படுக்கையில் புரண்டு புரண்டு படுக்கிறான். நித்திரை வரவில்லை. அடி வயிற்றில் இருந்து பிறக்கும் லொக்கு லொக்கு என்ற இருமல் தினமும் அவனை அவஸ்தைப்படுத்துகிறது. ‘நாசமத்த இருமல் தொலையுதில்லையே? என்ன பாடப்படுத்துது’ என மனதுக்குள் சொல்லிப் பொருமிக் கொண்டான. இரும ஆரம்பித்தால் ஒரு மணித்தியாலம் வரையும் நீடிக்கும். புள்ள குட்டிகளுக்கும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கும் அவஸ்தைதான. ‘இப்படித் தும்பப்படுவதைவிட நிம்மதியாச் செத்துக்கித்துப் போயித்தா அன்னத்தோட போய்ச் சேந்திடலாம். தினம் தினம் இருமிச் செத்துப் புழைக்கிறத்தவிர அது நல்ல முடிவாகவும் இருக்கும். சாவு வந்து தொலையுதில்லையே’ எனக் கூறி ஏக்கப் பெருமூச்சுவிட்டான் பொன்னன்.
“புள்ள சாரதா இருமுது கொஞசம் சுடுதண்ணி கொண்டு வாவன். குடிச்சா நல்லா இருக்கும்” என்றான் பொன்னன். “நீங்க தெனமும் லொக்கு லொக்கெண்டு இருமுனத்தால நாங்க ஒருத்தரும் நித்திர போகல்ல. அதுக்குள்ள சுடுதண்ணி வேற. அங்க பானைக்குள்ள பச்சத் தண்ணி இரிக்கு, எடுத்துக் குடிச்சித்துச் சத்தம் போடாமப் படுங்க” என்றாள் சாரதா.
பொன்னனுக்கு இப்போ 64 வயது. கிராமத்துல புள்ள குட்டிகள் சொத்துப் பத்துக்களோடு நல்லாத்தான் வாழ்ந்தான். பொன்னனுக்கு 50 வயதாக இருக்கும்போது மனைவி அன்னத்தின்ர உசிர அற்ப ஆயுசுல பறிச்சித்தான். அன்னத்துக்காகப் பொன்னனும் பொன்னனுக்காக அன்னமும் பிள்ளைகள் மூவருக்குமாக அவர்களும் சந்தோசமாக வாழ்ந்தனர். அன்னம் 45 வயதில் நிற்கதியாகப் பொன்னனையும் பிள்ளைகளையும் விட்டுத்துக் கண்மூடித்தாள்.
அன்னம் கண்மூடுமுன்னர் “அப்பா இஞ்ச வாங்க மூண்டு பிள்ளைகளையும் உங்கள நம்பித்தான் விட்டுத்துப் போறன். அதுகள நல்லா வளத்துப் படிக்க வைச்சி கரை சேர்த்திடணும். அப்பதான் எண்ட ஆத்மா சாந்தியடையும்” எனக் கூறிப் போனபிறகு பொன்னன் பிரமை பிடித்தவன் போலானான். அப்படி இருந்தும் பிள்ளைகளப் படிப்பிச்சுத் தொழிலும் எடுத்துக் கொடுத்து மூவருக்கும் திருமணமும் செய்து வைத்தான்.
மூத்தவன் கண்ணனும் மகள் சுலோவும் அரச தொழில் செய்கின்றனர். சாரதா அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றில் வேலை செய்கிறாள். சாரதா சிடுமூஞ்சி. எதையும் வெடுக்கெனப் பேசுவாள். கோபக்காரி. கண்ணனும் சுலோவும் யாருக்கும் தீங்கு செய்யாதவர்கள். அவர்கள் இருவரும் தொழில் நிமித்தம் தூர இடங்களில் வசிப்பதனால் பொன்னன் சாரதாவோட வாழ்கிறன். மாப்பிள்ள நல்லவர்தான். அவர் தொழிலுக்காகத் திங்கள் அதிகாலை சென்றால் வெள்ளிக் கிழமை இரவுதான் வீடு திரும்புவார். மருமகன் அருளும் அரச தொழில்தான். அவர் வீட்டில் நிற்கும்போது வைத்தியரிடம் கூட்டிச் சென்று மருந்து மாத்திரை எல்லாம் வாங்கிக் கொடுப்பார். அவருக்கு எதிர்மாறு அமுதா. அவளுக்குக் கண்ணனின் பேரில் இருக்கும் தோட்டத்துக் காணியில் ஒரு கண். பெண்கள் இருவருக்கும் வீடு, வளவு, நெற்செய்கைக் காணி எல்லாம் கொடுத்துத்தான் திருமணம் செய்து வைத்தான். அதுவும் போதாதென்று தோட்டத்துக் காணியிலும் பங்கு கேட்கிறாள். அண்ணனிட்டச் சொல்லி அந்தக் காணிய வாங்கித் தருமாறு தினமும் நச்சரிக்கிறாள். அததான் இப்ப பிரச்சினை.
பொன்னன் சுடுதண்ணீர் கிடைக்காததால் பானையில் இருந்த தண்ணீரைக் குடித்துவிட்டு மேலும் இரும ஆரம்பித்தான். சுடு தண்ணீர் குடீத்திருந்தால் இருமல் சற்றுக் குறைந்திருக்கும். மனிதனுக்கு விக்கல், இருமல், கொட்டாவி, தும்மல், வியர்வை எவ்லாம் வரவேண்டிய நேரத்தில் வரும். அதனைத் தடுக்கவும் முடியாது. அடக்கவும் முடியாது. பரிகாரங்களால் மட்டுமே கட்டுப்படுத்திக் கொள்ளலாம்.
மருமகன் எடுத்துவந்த நித்திரைக் குழிசைகளில் ஒன்றை எடுத்து வாய்க்குள் போட்டுத் தண்ணீர் ஒரு மொடக்குக் குடித்துப் படுக்கையில் சாயந்தார் பொன்னன். முன்பு ஒரு நாள் இரவு தடீரென்று பொன்னனுக்கு வயற்றுவலி வந்துவிட்டது. அன்னம் தவித்த தவிப்பும் பட்டபாடும் மனக் கண்முன் படமாக ஓடியது. கசாயம் காய்ச்சிக் கொடுத்தாள். வயிற்றில் சுடுதண்ணீர் ஒத்தடம் கொடுத்தாள். சுடுதண்ணீர் குடிக்கக் கொடுத்தாள். பொன்னன் நித்திரையாகும்வரை அருகில் இருந்து ‘வயிற்றுவலி குறைஞ்சித்தா? எப்படி இருக்கு’ என அடிக்கடி கேட்டவாறு பனை ஓலை விசிறியால் விசிக்கிக் கொண்டு ஆறுதல்படுத்திய சம்பவம் அவனின் மனக் கண்ணில் தோன்றிக் கண்ணீரை வரவைக்கும். இன்றும் அப்படித்தான் இரு கண்களும் குளமாகின.
முதுமை வந்துவிட்டால் தனிமையும் ஏக்கமும் வாட்டி வதைக்க ஆரம்பித்துவிடும்.
நினைவுகளும், கனவுகளும், கற்பனைகளுமே வாழ்கையாகிவிடும். கனவுகளும் கற்பனைகளும்
இல்லை என்றால் பலர் முதுமையில் மன நோயாளி ஆகிவிடுவார்கள். அத்தகைய நிலை வந்து, நடமாட முடியாமல் படுத்த படுக்கையாகி அழுந்திச் சாகக்கூடாது. தனக்கு நல்ல சாவு கிடைக்க வேண்டும் எனத் தினமும் வேண்டிக் கொள்வான் பொன்னன்.
‘அன்னம் இறந்த பின்னர் முன்று பிள்ளைகளுக்கும் பார்த்துப் பார்த்துச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்தேன். அதிலும் கடைசிப் பிள்ளை, கடைசிப் பிள்ளை என்று அமுதாவுக்குத்தானே அதிகம் செய்தேன். அவளல்லவா கடைசி காலத்தில என்னைய நல்லாப் பாத்துக்க வேணும். மூத்தவங்க ரெண்டு பேரும் தங்களோட வந்து இருக்கும்படி கூப்பிடுதுகள். நான்தான் தோட்டத்தையும் பாத்துத்து அமுதாவின் பிள்ளைகளோடு இங்க இருக்கிறன் எண்டு சொல்லித்து இவளோட இருக்கன். அமுதாவும் நான் ஊரில இருந்தாத்தான் அண்ணனிட்டச் சொல்லித் தோட்டக் காணிய எழுதித் தருவார் என்ற கோணப் புத்தியோடு இருக்கிறாள். தோட்டக்காணி இல்லையெண்டா என்னை எப்பவோ அவர்களோடு அனுப்பி வைத்திருப்பாள். தோட்ட வருமானம் எதுவும் கண்ணன் கேட்பதில்லை. முழுவதையும் அமுதாதான் எடுக்கிறாள். அப்படி இருந்தும் காணி முழுவதையும் வளைத்துப் போட நினைக்கிறாள்.
அரைவாசிக் காணியைக் கேட்டாள் அவனிட்டக் கதைத்துப் பார்க்கலாம். முழுதையும் அல்லவா கேக்கிறாள். அவனுக்கும் புள்ள குட்டிகள் இருக்குதே. அவனுக்கும் தேவைதானே. அவனிடமிருந்து காணியை எழுதிக் கொடுத்த மறுகணமே என்னையும் வீட்டிலிருந்து வெளியேற்றி விடுவாள். அமுதாவோடு ஏன் பிரச்சினை எண்டு மருமகனும் பொறுமையாக இருக்கிறார். அவருக்குக் காணி, பூமி எதிலும் அக்கறையில்லை. தனக்குக் கொடுத்தது போதுமெண்டுதான் அவர் கூறுவார். அவரும் பிள்ளைகளும் என்னோடு பாசமாக இருக்காங்க. அது எனக்குப் போதும்’ என்ற திருப்தியோடு கண்களில் நீர் பனிக்க நீண்ட பெருமூச்சும் பொட்டாவியும் விட்டார். சிறிது நேரத்தில் இமைகள் மூட உறங்கிவிட்டார்.
மறுநாள் காலை 10.30 மணி இருக்கும் தோட்டத்துக்குள் சென்று வந்த பொன்னன் மிகக் கடுமையாக இரும ஆரம்பித்தார். சளியும் வேற அதிகமாக இருந்தது. இடைவிடாது தொடர்ச்சியாக இருமிக் கொண்டே இருந்தார். குடிப்பதற்குச் சுடுதண்ணீர் கேட்டார். கொடுக்கவில்லை. இருமல் அதிகமாகித் துடிதுடித்து, தொண்டையில் சளி அடைத்ததனால் மூர்சையாகி நிலத்தில் விழுந்துவிட்டார்.
அமுதாவின் பிள்ளைகள் இரண்டும் அழுத குரல் கேட்டு வீதியால் சென்று கொண்டிருந்த
சயந்தன் ஓடிவந்து நீர் தெளித்துப் பார்த்தான். எந்த ஒரு அசைவும் தென்படவில்லை. அவசர அவசரமாக முச்சக்கர வண்டி ஒன்றை வரவழைத்துச் சயந்தனும் அமுதாவும் பொன்னனை ஏற்றிக் கொண்டு வைத்தியசாலைக்குப் புறப்பட்டனர். மாமரக் கிளையொன்றில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த அண்டங்காக்கை சோகத்துடன் பறந்து சென்றது. பறந்து சென்ற அண்டங்காக்கை ஊரின் மத்தியில் இருகு்கும் உயர்ந்த புளிய மரத்தின் சிறிய கிளை ஒன்றில் சோகத்தோட அமர்ந்து கொண்டது.
வானவெளியில் வேகமாகப் பறந்த கொண்டிருந்த ஊர்க்குருவி புளிய மரக் கிளையில் சோகத்துடன் அமர்ந்திருந்த அண்டங்காக்கையைக் கண்டு தாளப்பறந்து வந்து அருகில் அமர்ந்து கொண்டது.
“அண்ணே! அண்ணே! என்னண்ணே சோகத்தோடு இருக்கீங்க? ஏதும் பிரச்சினையோ” என்றது ஊர்க்குருவி. தம்பியா? நானும் கவனிக்கல்ல. இப்பிடி வா கிட்டவந்து அமரு. அது ஒண்டுமில்ல தம்பி நம்மட பொன்னண்ணனுக்கு ஏதோ பிரச்சினை போல. அவருக்கும் வயது போய் கொண்டிருக்கு. முச்சிழுக்குது. இருமல் வேற. ஏதோ வீசிங் எண்டு சொல்றாங்க. தோட்டத்துக்குள்ள போய் வந்தவரு இருமி மயக்கம் போட்டு விழுந்துத்தாரு. சயந்தன் அண்ணையும் அமுதா அக்காவும் ஏத்திக் கொண்டு பொனாங்க.
அந்த அக்காவும் தோட்டக் காணியக் கேட்டுப் படாத பாடுபடுத்துது. இதுகள் மூண்டையும் வளத்து எடுக்குறத்துக்கு அந்த மனுசன் பட்டபாடு உருக்கே தெரியும். மூத்ததுகள் ரெண்டும் நல்ல குணம். ஆனா ஆமுதா அக்கா ஈவிரக்கம் இல்லாதது. அந்த மனுசனுக்குச் சாப்பாடும் ஒருங்காக் கொடுக்கிறல்ல. அவர்ர மருமகன் வீட்டுல நிண்டா நல்ல கவனிப்பு. அவர் வேலைக்குப் போனா ஏனோ தானோ எண்டுதான் நடத்துவா. பெத்த தகப்பனச் சனியன், எருமமாடு, என்னத்துக்கு இழுத்துக் கிடக்குது. செத்துத் தொலையுறானே எண்டெல்லாம் அமுதாக்கா திட்டுது. பெத்த தகப்பனையே இப்படி நடத்துதுகளே” என்று கூறிப் பெருமூச்சுவிட்டது அண்டங்காக்கை.
“முதியோர் என்பவர் யாரண்ணே? இளைஞனாய் இருக்கும்போது தனக்காகவும், பின்னர் தனது குடும்பத்துக்காகவும் தான் வாழ்க்கப்பட்ட குடும்பத்துக்காகவும் வாழ்ந்து உழைத்து ஓடாகித் தேய்ந்து தனிமை விரக்தியோடு ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். இதில சில விதி விலக்குகளும் உண்டு. வாழும்போது தமது பிள்ளைகளுக்கு நல்லது கெட்டதைச் சொல்லிக் கொடுக்காது, வரவு, செலவு, கைக்கடக்மாக வாழ்றதப் பற்றிச் சொல்லிக் கொடுக்காது, கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்து ஆடம்பரமாக வளர்ந்த பிள்ளைகளில் பலர் தாய் தந்தையரை முதியோர் இல்லங்களிலும், அநாதை இல்லங்களிலும் கொண்டு போய்ச் சேர்த்மிருக்குதுகள். இன்னும் சில வீட்டுக்குள்ள ஒதுக்கி வைச்சி வேலைக்காரன் போலும், அடிமைகள் போலும் நடத்துதுகள். இந்த வாழ்க்கை எத்தனை வேதனை என்பது அந்த வாழ்க்கை வாழ்ந்தவர்களுக்குத்தான் தெரியும்”
“அண்ணே! இன்னும் சில வீடுகளில் வெளியில் காட்டாப்புக் காட்டிக் கொண்டு அங்கீகரிக்கப்படாத வேலைக்காரன் போல் நாகரிகமாக நடத்துதுகள். இதிலும் நோயாளி, அங்கவீனம் என்றால் அருவருப்பாகப் பார்த்துக் கொண்டு பலரைத் திட்டித் தீர்த்து நடத்துதுகள். இதுகள் செய்ததுக்கு ‘தாம் முதுமை அடையும் போது வட்டியும் முதலுமாகத் தமக்குக் கிடைக்கும் என்பதையும் விளங்கிக் கொள்ள வேண்டும். பொன்னண்ணை தனது மூத்ததுகளை விட கடைசிப் பொண்ணுக்காகப் பார்த்துப் பார்த்துச் செய்தார். இப்ப என்ன நடந்திருக்குது. அத அவ நெனைச்சுங்கூடப் பாக்கல்லையே. இதுதான் அண்ணே மனித வாழ்க்கை. அதக்கு ஏத்தாப் பொல வாழ்ந்துத்துப் போறதுதான் நல்லது”
“நாகரிக வாழ்க்கையும் சிமார்ட் போணும் பெரும்பாலானோரின் வாழ்க்கைய மாத்திப் போட்டுது. அதுகள் ஆறறிவு உள்ளதுகள். தாமாகத் திருந்தினாத்தான் உண்டு. நம்மால என்ன செய்ய முடியும். நடக்கிறது நடக்கட்டும். யாவும் கடந்து போகும். காலம் பதில் சொல்லும். அண்ணே எனக்கும் நேரமாகுது” எனக் கூறிக் கொண்டு, இறகுகளைச் சொண்டினால் நீவிவிட்டுச் சிறகடித்துப் பறந்து சென்றது ஊர்க்குருவி.
ஊர்க்குருவியோடு பேசியதால் சற்று ஆறுதலடைந்த அண்டங்காக்கை சுற்றுமுற்றும் பார்த்து தன்னிரு இறகுகளையும் நீண்ட சொண்டினால் நீவிவிட்டு இரை தேடுவதற்காகச் பறந்து சென்றது. ஊர்க்குருவியும் வேகமாகப் பறந்து வான்வெளியில் கலந்துவிட்டது.
வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற பொன்னனைப் பரிசோதித்த வைத்தியர் ‘நீண்டநாள் சளியினால் நிமோனியாவாகி நுரையீரல் பாதிப்படைந்து மூச்சுத் திணறி இறந்துவிட்டார். இருமல் வரும்போது மருந்து மாத்திரைகளும் சுடு தண்ணியும் கொடுத்திருந்தால் அவரைப் பாதுகாத்திருக்கலாம்’ எனக் கூறக் கையைவிரித்தார்.
![]()