மனிதப்புதை குழிகள் விவகாரம்; சர்வதேச விசாரணைகோரி தொடர்ந்து வலியுறுத்தல்

செம்மணி மனித புதைகுழியில் இனங்காணப்பட்ட 147மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளில் 90வீதத்திற்கும் அதிகமானவை நிர்வாணமாக்கப்பட்டுப் புதைக்கப்பட்டவையென கடந்த 14ஆம் திகதி சட்டவைத்திய அதிகாரியால் நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.
இதன்மூலம் இங்கு பாரியகுற்றச்செயல்கள் இடம்பெற்றுள்ளமை அம்பலமாகியிருக்கின்றது.எனவே இந்த செம்மணி சித்துபாத்தி மனிதப்புதைகுழிக்கு விவகாரத்திற்கு தலையீடுகளற்ற சுயாதீன சர்வதேச நீதிவிசாரணை மேற்கொள்ளப்படவேண்டும். அந்த சர்வதேச நீதிவிசாரணைகளில் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்சவின் சாட்சியங்களும் பெறப்படவேண்டும் என தமிழரசுக்கட்சியின் வன்னி மாவட்ட எம்.பி. துரைராசா ரவிகரன் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் இடம் பெற்ற உற்பத்தித் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட கட்டளை, நிதிச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி மற்றும் நிர்மாணத் தொழில் அபிவிருத்திச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு வலியுறுத்திய அவர் மேலும் பேசுகையில்,
செம்மணி சித் துபாத்தி மனிதப்புதைகுழி அகழ்வாய்வில் சர்வதேச கண்காணிப்பு அவசியமென்பதை வலியுறுத்துவதுடன், சர்வதேச நிபுணத்துவம் பின்பற்றப்பட்டு அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்படவேண்டும். அத்தோடு செம்மணி அகழ்வாய்வுப்பணிகளுக்குரிய தொழில்நுட்பம்சார் நிபுணத்துவத்தை வழங்குவதுதொடர்பில் ஆராய்ந்துவருவதாக பிரித்தானியாவின் வெளியுறவு மற்றும் அபிவிருத்தி விவகாரங்கள் இராஜாங்கசெயலாளர் டேவிட் லமி அண்மையில் தெரிவித்துள்ளார். அவரின் இக்கருத்தினை வரவேற்பதுடன்,அவருக்கு எனது நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
இதுவரை குறித்த செம்மணி மனிதப்புதைகுழியிலிருந்து மொத்தம் 147மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகள் இனங்காணப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து 140மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நாளை (இன்று) 22ஆம் மீண்டும்அகழ்வாய்வுப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. மேலும் இந்த அழ்வாய்வுகளில் ஈடுபடும் தொல்லியல் பேராசிரியர் ஜ்சோமதேவ கடந்த 14.08.2025அன்று நீதிமன்றுக்கு சமர்ப்பித்த அறிக்கையில், அகழ்வாய்விற்கு இன்னும் குறைந்தது எட்டுவாரங்கள் தேவைப்படுமெனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுவரை இனங்காணப்பட்ட 147மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளில் 90வீதத்திற்கும் அதிகமானவை நிர்வாணமாக்கப்பட்டுப் புதைக்கப்பட்டவையென கடந்த 14ஆம் திகதி சட்டவைத்திய அதிகாரியால் நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது. இதன்மூலம் இங்கு பாரியகுற்றச்செயல்கள் இடம்பெற்றுள்ளன என்பதும், இந்தப் புதைகுழியில் பெண்கள், சிறுவர்கள், குழந்தைகளென பல்வேறு தரப்பினரும் மிகக் கொடூரமாகப் படுகொலைசெய்யப்பட்டு புதைக்கப்பட்ட விடயமும் தற்போது அம்பலமாகியிருக்கின்றது.
செம்மணியில் எலும்புக்கூடுகளை அடையாளங் காணும் பணிதொடர்பான விசாரணைகளில் வாக்குமூலங்களையளிக்கவரும் மக்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் அச் சுறுத்தப்பட்டுள்ளனர். இவ்விடயம்தொடர்பில் கடந்த 14ஆம்திகதி சட்டத்தரணிகளான எம்.ஏ.சுமந்திரன், கே.குருபரன், வி.மணிவண்ணன் ஆகியோரால் நீதிமன்றிலும் முறையீடுசெய்யப்பட்டுள்ளது.
கடந்த 1999இல் யாழ்ப்பாணத்தில் காணாமல்போனோர்குறித்து விசாரிக்க இலங்கை மனிதஉரிமை ஆணைக்குழுவினால் கலாநிதி தேவநேசன் நேசையா தலைமையில், கே.எச்.கமிலஸ் பெர்னான்டோ, ஜெஸிமா ஸ்மாயில், சி.எம்.இக்பால் ஆகியநால்வர் அடங்கிய விசாரணைக்குழு நியமிக்கப்பட்டது. குறித்த விசாரணைக் குழுவினால் 210பக்கங்களைக்கொண்ட நீண்ட விசாரணை அறிக்கை கடந்த 2003 ஒக்டோபர் 28ஆம் திகதி வெளியிடப்பட்டது.அவ்வறிக்கையில் காணாமல்போனவர்களில் பெருமளவானோர் இராணுவத்தினால் கொல்லப்பட்டிருக்கலாமெனக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், படுகொலையுடன் தொடர்புடைய இராணுவமுகாம்கள், இராணுவஅதிகாரிகள், இராணவத்தினரின் பெயர்களும் அவ்வறிக்iயில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
எனவே இந்த மனிதப் புதைகுழி விசாரணைகள் மும்முரமாக இடம்பெறும்போது அந்தச் சம்பவங்களுடன் தொடர்புடைய படையினர் தப்பியோட வாய்ப்புள்ளது. ஆகவே அதற்குமுன்னர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
கடந்த 1996ஆம்ஆண்டு காலப்பகுதியில் செம்மணி இராணுவசோதனைச்சாவடியில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலைவழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச உட்பட ஆறு இராணுவத்தினருக்கு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் கடந்த 1998ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 3ஆம் திகதி மரணதண்டனை வழங்கியிருந்தது. நீதிமன்றத்தின் இந்தத்தீர்பையடுத்து, இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச செம்மணியில் 300தொடக்கம் 400வரையான மக்கள் கொன்றுகுவிக்கப்பட்டதாக நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.
இவ்வாறு சோமரத்ன ராஜபக்ச நீதிமன்றில் சாட்சியமளித்ததற்கமைய அப்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள், அதனைத்தொடர்ந்து செம்மணியில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப்பணிகளில் 15 எலும்புக்கூட்டுத்தொகுதிகளும் மீட்கப்பட்டிருந்தன. பின்னர் இந்தவிசாரணைகள் கொழும்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து இதுதொடர்பான வழக்குவிசாரணைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
இந்நிலையில் இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச அப்போது நீதிமன்றிற்கு வழங்கிய சாட்சியத்தை ஆதாரப்படுத்தும்வகையில் தற்போது செம்மணியில் மனித எலும்புக்கூடுகள் மிக அதிகளவில் இனங்காணப்படுகின்றன. எனவே குறித்த வழக்குமீள எடுத்தக்கொள்ளப்பட்டு தற்போதைய மனிதப்புதைகுழி வழக்குடன் தொடர்புபடுத்தப்படவேண்டும். யாழ் நீதவான் நீதிமன்ற வழக்கேட்டிலிருந்து கொழும்பு நீதிமன்றுக்கு அனுப்பப்பட்ட பி2899 என்னும் வழக்கு மீளவும் யாழ்ப்பாணம் நீதிமன்றிற்கு பாரப்படுத்த நடவடிக்கை .
இத்தகையசூழலில் சர்வதேச விசாரணையொன்று முன்னெடுக்கப்படும்பட்சத்தில் கடந்த 1996காலப்பகுதயில் செம்மணி தொடக்கம் துண்டி இராணுவ முகாம் வரை இராணுவத்தால் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சகல படுகொலைகள், பலசேனா தலைமையகம் முதல் இராணுவத்தால் சித்திரவதைக்கூடங்கள் நடத்தப்பட்ட விதம்பற்றிய விபரங்கள், மணியம்தோட்டம் பகுதியிலுள்ள புதைகுழி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் சாட்சியமளிக்க தயாராக இருப்பதாக அண்மையில் இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச தெரிவித்துள்ளார். அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா , அப்போதைய பாதுகாப்புச்செயலர் உள்ளிட்டதரப்பினரும் இத்தகைய வதைமுகாம்கள்தொடர்பில் அறிந்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அக்காலப்பகுதியில் இத்தகைய குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களாக 7ஆவது படைத்தலைமையகத்தின் புலனாய்வு அதிகாரிகளான கப்டன் லலித் ஹேவாகே, கப்டன் பெரேரா, லெப்டினன்ட் துடுகல, லெப்டினன்ட் உதயகுமார ஆகியோருடன் பொலிஸ் பரிசோதகர்களான அப்துல் ஹமீட் நஸார், சமரசிங்க ஆகியோரின் பெயர்களும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
எனவே இந்த செம்மணி சித் துபாத்தி மனிதப்புதைகுழிக்கு விவகாரத்திற்கு தலையீடுகளற்ற சுயாதீன சர்வதேச நீதிவிசாரணை மேற்கொள்ளப்படவேண்டும். அந்த சர்வதேச நீதிவிசாரணைகளில் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்சவின் சாட்சியங்களும் பெறப்படவேண்டும்.
அவ்வாறு மேற்கொள்ளப்படுகின்ற சர்வதேச நீதிவிசாரணைக்கு இந்த அரசானது தனது முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கவேண்டும். சர்வதேச நீதிவிசாரணைமாத்திரமே பாதிக்கப்பட்ட எமது தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்று த்தரும் ஒ ரே மார்க்கமாகஅமையும்.
மேலும் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழிவிவகாரத்திற்கும் சர்வதேசநீதிவிசாரணை வேண்டும் என்றார்.
![]()