இலங்கை

பல முன்னாள்களிடம் தொடரும் விசாரணை;  இதுவரை 20 க்கும் மேற்பட்டோர் அழைப்பு

முன்னாள் அமைச்சர்கள்,முதலமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவின் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு பொலிஸாரதும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரதும் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினரதும் விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன.

முன்னாள் தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் அமைச்சர் மனுஷ நாணயக்காரவை விசாரணை ஒன்றுக்கு முன்னிலையாகுமாறு நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவின் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு பொலிஸார் அழைப்பு விடுத்துள்ளனர்.

பணச்சலவை குற்றச்சாட்டின் கீழ் மேற்கொள்ளப்படும் விசாரணை தொடர்பில் வாக்குமூலமொன்றைப் பெறுவதற்காகவே அவர்பொலிஸாரினால் அழைக்கப்பட்டுள்ளார்.

பணமோசடி சட்டத்தின் கீழ் இந்த விசாரணை எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக கையூட்டல், ஊழல் மற்றும் வீண் விரயத்துக்கு எதிரான பிரஜைகள் அமைப்பின் தலைவர், நிதி குற்றப்புலனாய்வு பிரிவின் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடளித்துள்ளார்.

மனுஷ நாணாயக்கார தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சராக இருந்தபோது சட்டவிரோதமாக சொத்துக்களை ஈட்டினாரா என்பது குறித்து விசாரணை நடத்துமாறு முறைப்பாட்டாளர் கோரியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதுவரை இவ்வாறு 20க்கும் மேற்பட்ட முன்னாள் அமைச்சர்கள்,முதலமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவின் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு பொலிஸாரதும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரதும் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினரதும் விசாரணைகள் நடைபெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *