ஸ்கான் பரிசோதனை; செம்மணியில் பல மனிதப் புதைகுழிகள்; மேலும் எட்டு வாரங்களுக்கு புதைகுழிகள் தோண்டப்படும்!

செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானம் உள்ள பிரதேசத்தில் மேலும் பல மனிதப் புதைகுழிகளில் மனித எலும்புக்கூடுகள் இருக்காலாமென ஸ்கான் பரிசோதனையில் தெரியவந்த நிலையில் மேலும் எட்டு வாரங்களுக்கு அகழ்வுப் பணிகளை நடத்த யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 1 மணியளவில் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது சித்துபாத்தி மனிதப் புதைகுழி வளாகத்தில் முன்னெடுக்கப்பட்ட ஸ்கேன் ஆய்வுகளின் அறிக்கையை அடிப்படையாக வைத்துக் இந்த விடயம் நீதிமன்றத்திற்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
அதில்,இங்குள்ள மனிதப் புதைகுழியில் ஏற்கனவே அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள என்புக் கூடுகளின் அளவை ஒத்த என்புக் கூடுகள் புதைக்கப்பட்டிருக்கலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய வழக்கு விசாரணையின் போது அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட பகுதிகளுக்கு மேலதிகமாகப் புதைகுழிகள் காணப்படுகின்றனவா? என்பதைக் கண்டறியும் நோக்குடன் கடந்த வாரம் முன்னெடுக்கப்பட்ட ஸ்கேன் ஆய்வு நடவடிக்கையின் அறிக்கை, மண் பகுப்பாய்வு அறிக்கைகள் மற்றும் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமா தேவா உள்ளிட்ட குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை அறிக்கைகள் யாழ்.மாவட்ட சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவநாதனால் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டன.
அந்த அறிக்கைகளின் படி, குறைந்தது மேலும் எட்டு வாரங்களுக்கு அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் இந்த அகழ்வை செய்ய வேண்டும் என பேராசிரியர் ராஜ் சோமதேவவால் சுட்டிக்காட்டப்பட்டது.
இந்நிலையில் அது சம்பந்தமான நடவடிக்கைகளுக்கான ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு
உரிய தரப்புகளுக்கு யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா கட்டளையிட்டார்.
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்விடத்தில், மேலதிக புதைகுழிகள் இருப்பதை கண்காணிக்கும் நோக்கில் தரைகீழ் ஊடுருவும் ஸ்கான் பணிகள் கடந்த 4ஆம் 5ஆம் திகதிகளில் நடைபெற்றது.
செம்மணி மனித புதைகுழி இனங்காணப்பட்ட அரியாலை சித்துப்பாத்தி இந்து மயான வளாகத்தில் சுமார் 60 பரப்பில் இந்த ஸ்கான் பரிசோதனை, யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் மேற்பார்வையில் துறைசார் வல்லுனர்களின் ஒத்துழைப்புடன் நடைபெற்றது.
இந்த நடவடிக்கைக்கு, கொழும்பு ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடம் தொழில்நுட்பம் ஒத்துழைத்தது.ஜி.பி.ஆர். ஸ்கானர் (தரையை ஊடுருவும் ராடர்) மூலம், பரந்துபட்ட ஸ்கான் நடவடிக்கைகளை முன்னெடுக்க பாதுகாப்பு அமைச்சின் அனுமதிகள் கிடைக்கப்பெறாத நிலையிலேயே மேற்படி ஸ்கான் பணிகள் நடைபெற்ற நிலையிலேயே அதன் அறிக்கைகள் நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட போதே, குறைந்தது மேலும் எட்டு வாரங்களுக்கு அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் இந்த அகழ்வை செய்ய வேண்டும் என பேராசிரியர் ராஜ் சோமதேவவால் சுட்டிக்காட்டப்பட்ட நிலையில் அது சம்பந்தமான நடவடிக்கைகளுக்கான ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு உரிய தரப்புகளுக்கு யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா கட்டளையிட்டார்.
சித்துப்பாத்தி இந்து மயானத்தில் உள்ள செம்மணி மனிதப் புதைகுழிகளில் முதல் கட்டமாக 9 நாளும் இரண்டாம் கட்டத்தில் 45 நாள் அகழ்வு செய்ய தீர்மானிக்கப்பட்டு இதுவரை 32 நாளும் என மொத்தமாக 41 நாள் அகழ்வு பணிகள் நடைபெற்றது.
இந்த மனித புதைகுழிகளில் இருந்து 147 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டதுடன் 140 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
நேற்றைய வழக்கு விசாரணையின் போது ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சிரேஷ்ட சட்டத்தரணி க.சுகாஷ் உட்பட 30 இற்கு மேற்பட்ட சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.
![]()