இலங்கை

வடக்கு- கிழக்கு ஹர்த்தாலுக்கு அனைவரையும் ஆதரவு வழங்கவும்; தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் வேண்டுகோள் 

வடக்கு- கிழக்கில் மக்கள் செறிந்து வாழ்கின்ற பகுதிகளிலே அமைந்திருக்கின்ற இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் எதிர்வரும்- 18 ஆம் திகதி வடக்கு கிழக்குத் தழுவிய ரீதியில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், அரசியலுக்கு அப்பால் ஒரு பொதுவான தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைக்குப் பொதுமக்கள் அனைவரும் ஆதரவு தர வேண்டுமெனவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே சிவஞானம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மக்கள் மத்தியில் இராணுவ முகாம்கள் அமைந்திருப்பதன் காரணத்தினாலேயே முல்லைத்தீவு முத்து ஐயன் கட்டில் பகுதியில் இடம்பெற்றமை போன்ற பல தாக்குதல்கள் நடைபெறுகின்ற காரணத்தினால் இதை ஒரு சுட்டியாகக் கருதி வடக்கு- கிழக்கில் மக்கள் செறிந்து வாழ்கின்ற பகுதிகளில் அமைந்திருக்கின்ற இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும் என்ற அடிப்படைக் கோட்பாட்டின் நோக்கமாக நாங்கள் ஹர்த்தாலுக்கு அழைப்பு விட்டிருந்தோம்.

ஹர்த்தால் சிலருக்கு அசௌகரியமாக இருக்கலாம். குறிப்பாக நாளாந்த உழைப்பாளர்கள், பழுதடைகின்ற பொருட்களை விற்போருக்கு, போக்குவரத்தில் ஈடுபடுவோருக்குப் பாதிப்பாக இருக்கலாம். ஆனால், நீண்ட காலத்திற்கு பின்னர் தமிழரசுக்கட்சி இந்தக் கடையடைப்புக்கு அழைப்பு விடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. வடக்கு- கிழக்குப் பகுதிகளில் எமது கோரிக்கையை ஒற்றுமையாக வெளிப்படுத்துவது அவசியமானது.

இலங்கை- இந்திய ஒப்பந்தத்தில் கூட இராணுவம் பெரிய முகாம்களுக்குச் சென்று திரும்ப வேண்டும் என்ற ஒரு நிபந்தனை இருந்தது. ஆனால், அது இதுவரை நிகழவில்லை அதிலும், மோசமான விஸ்தரிப்புகள் நடைபெறுகின்றன. நாங்கள் ஒட்டுமொத்தமாக எங்களுடைய எதிர்ப்பினைக் காட்டுவது மட்டுமல்ல இராணுவம் மக்கள் குடியிருப்புப் பகுதிகளிலிருந்து விலக வேண்டும் அல்லது வாபஸ் பெற வேண்டும் என்பதை வலியுறுத்துவதே இந்தக் ஹர்த்தாலின் அடிப்படை நோக்கம் எனவும் குறிப்பிட்டார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *