இந்தியா

சோனியா காந்தியின் குடியுரிமை சிக்கல்

இந்திய குடியுரிமை பெறுவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே வாக்காளர் பட்டியலில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் பெயர் சேர்க்கப்பட்டது குறித்து பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.

மக்களவை தேர்தலின் போது வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்யப்பட்டு, வாக்குத் திருட்டு நடைபெற்றதாக குற்றம்சாட்டிய ராகுல் காந்தி, கடந்த வாரம் ஆதாரங்களை வெளியிட்டார்.

இதனைத் தொடர்ந்து, நாள்தோறும் வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகள் சம்பந்தமான செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில், குடியுரிமை பெறுவதற்கு முன்பே, வாக்காளர் பட்டியலில் சோனியா காந்தியின் பெயர் இடம்பெற்றிருப்பதாக பாஜக குற்றச்சாட்டு எழுப்பியுள்ளது.

இதுதொடர்பாக பாஜக தேசிய தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் அமித் மால்வியா வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:

”சட்டத்துக்கு புறம்பாக இந்திய வாக்காளர் பட்டியலில் சோனியா காந்தியின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. 1980 ஆம் ஆண்டு அவர் இத்தாலி குடிமகளாக இருந்தபோது, இந்திய குடியுரிமை பெறுவதற்கு முன்பே, சோனியா காந்தியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்துள்ளது.

அந்த சமயத்தில், பிரதமர் இந்திரா காந்தியின் குடும்பத்தினர் அதிகாரப்பூர்வ இல்லமான 1, சஃப்தர்ஜங் சாலையில் வசித்து வந்தனர்.

அந்த முகவரியில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் பட்டியலில், இந்திரா காந்தி, ரஜீவ் காந்தி, சஞ்சய் காந்தி மற்றும் மேனகா காந்தி பெயர்கள் இருந்தன.

1980 ஆம் ஆண்டு டில்லி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்காளர் பட்டியல் திருத்தப்பட்ட போது, வாக்குச் சாவடி 145, எண் 388 இல் சோனியா காந்தியின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்திய குடியுரிமை உள்ள ஒருவரே வாக்காளராக இருக்க முடியும், இது சட்ட மீறலாகும். 1982 ஆம் ஆண்டு இதுகுறித்து கேள்வி எழுந்தபோது, அவரது பெயர் நீக்கப்பட்டு, மீண்டும் 1983 இல் சேர்க்கப்பட்டது.

அப்போதும் பிரச்னை எழுந்தது. சோனியா காந்திக்கு ஏப்ரல் 30, 1983 ஆம் திகதிதான் இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது.

ஆனால், ஜனவரி 1, 1983 திகதியின்படி, திருத்தம் செய்யப்பட்ட வாக்காளர் பட்டியலில் சோனியா காந்தியின் பெயர் வாக்குச் சாவடி 140, எண் 236 இல் இடம்பெற்றிருந்தது.

குடியுரிமை பெறுவதற்கு முன்னதாகவே, இரண்டு முறை வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தியை திருமணம் செய்த பின்னர், இந்திய குடியுரிமையை ஏற்க சோனியா காந்திக்கு 15 ஆண்டுகள் ஆனது ஏன்? என்றுகூட நாங்கள் கேட்கவில்லை.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *