ஜே.வி.பி – தேசிய மக்கள் சக்தி இடையே மோதல்; பிரதமர் ஹரிணியை விலகச் செய்யசதி!

ஜே.வி.பி – தேசிய மக்கள் சக்தி இடையே உருவாகியுள்ள மோதல் நிலைமைகள் வெளிப்படத் தொடங்கியுள்ளன என்றும், பிரதமர் ஹரிணி அமரசூரியவை தானாகவே பதவி விலகச் செய்து தமது பிரதமரை நியமித்துக்கொள்ள ஜே.வி.பியினர் திட்டமிடுகின்றனர் என்றும் பிவித்துறு ஹெல உறுமய கட்சி தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
பிவித்துறு ஹெல உறுமய கட்சி தலைமையகத்தில் நேற்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே கம்மன்பில இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி அண்மையில் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது என்னைப் பற்றி கூறியதுடன், அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு சூழ்ச்சிகள் நடத்தப்படுவதாகவும் அதனை தோற்கடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். உண்மையில் அவர் கூறுவதை கேட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு ஜனாதிபதி மிகவும் அதிருப்தி நிலையில் இருந்து உரையாற்றுவதை போன்றே இருந்தது. ஜனாதிபதி கூறுவதை போன்று அரசாங்கத்தை கவிழ்க்கும் சூழ்ச்சியாக கூறுவது அரசாங்கத்தின் குறைபாடுகளையும், மோசடிகளையும் சுட்டிக்காட்டுவதாக இருந்தால் நான் மறைந்து அல்லாமல் வெளிப்படையாகவே அதனை செய்வேன்.
நீங்கள் எதிர்க்கட்சிகளில் இருந்த போது அரசாங்கங்களை பலவீனப்படுத்துவதற்கான சூழ்ச்சிகளில் ஈடுபட்டீர்கள். கொவிட் மற்றும் பொருளாதார நெருக்கடி காலங்களிலும் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்புகளை வழங்காமல் பொருளாதார நெருக்கடியை அதிகரிக்க முயற்சிகளை செய்தது நீங்களே. இவ்வாறான நிலைமையில் உங்களை போன்று அரசாங்கத்தை கவிழ்க்கும் சூழ்ச்சிகளில் ஈடுபடுட்டதை போன்று எங்களை பார்க்க வேண்டாம் என்று கூறுகின்றோம்.
இதேவேளை கடந்த 6ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் சுப்ரீம் சட் செயற்கை கோள் திட்டமானது வெளிநாட்டு முதலீடே தவிர இலங்கையினதோ, ராஜபக்ஷக்களினதோ முதலீடு அல்ல என்று கூறியிருந்தார். இந்நிலையில் அந்த கருத்து தவறு என்று பிரதமரின் அரசாங்கத்தில் உள்ள கனிஷ்ட அமைச்சரான வசந்த சமரசிங்க கூறியிருந்தார். அவ்வாறு பிரதமரின் கருத்து தவறு என்றால் பிரதமருக்கோ அல்லது ஜனாதிபதிக்கோ அதனை திருத்திக்கொள்ள முடியும். ஆனால் கனிஷ்ட அமைச்சரால் அதனை திருத்த முடியாது. வசந்த சமரசிங்க பிரதமரை உலகின் முன்னால் அசௌகரியத்திற்கு உள்ளாக்கியுள்ளார். அது அரசாங்கத்திற்குள் உள்ள திசைக்காட்டி ஜே.வி.பி மோதல் வெடித்துள்ளது என்பதனை வெளிக்காட்டும் வகையிலேயே அமைந்துள்ளது.
கூடிய விரையில் அமைச்சரவை மறுசீரமைப்பொன்று இடம்பெறுமென்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க மே மாதத்தில் கூறியிருந்தார். அப்போதே நாங்கள் இந்த முறுகல் நிலைமை தொடர்பில் கூறியிருந்தோம். இப்போது ஹரிணியை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி ஜே.வி.பியின் பிரதமராக பிமல் ரத்நாயக்கவை நியமிக்க எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் பிரதமர் பதவியில் இருந்து ஏன் ஹரிணியை நீக்கக்கூடாது என்று அமைச்சரவையில் ஜனாதிபதி 6 காரணங்களை வெளியிட்டுள்ளார்.
அதாவது அரசாங்கத்தின் வாக்கு வங்கியில் பெருமளவானவை ஜே.வி.பிக்கு உரியது அல்ல. திசைக்காட்டியின் தலைவராக ஹரிணியே இருக்கின்றார். அத்துடன் அரசாங்கத்தின் மேற்குலக நாடுகளின் தூதரகங்களின் பிரதிநிதியாக ஹரிணியே இருக்கின்றார். அடுத்ததாக பிரபுக்கள் தரப்பு, அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதியாகவும் அவரே இருக்கின்றார். புத்திஜீவிகள் தொழில்வல்லுனர்கள் துறையிலும் பிரதமரே பிரதிநிதியாக இருக்கின்றார். இதனால் இப்போதைக்கு இவை அனைத்துக்கும் பிரதிநியான ஹரிணியிடமே அந்தப் பதவி இருக்க வேண்டும் என்று ஜனாதிபதி கூறியுள்ளார். ஆனால் ஜனாதிபதியின் நிலைப்பாடு தொடர்பில் அதிருப்தியில் இருக்கும் ஜே.வி.பி தலைவர்கள் பிரதமரை அதிருப்திக்குள் தள்ளி அவரை பதவி விலகச் செய்யவே முயற்சிக்கின்றனர் என்றார்.
![]()