ஈழ மீனவர்களின் வாழ்வை ஸ்டாலின் அழிக்கக் கூடாது; தமிழக மீனவர்களை தடுத்து நிறுத்துங்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தலை இலக்காக வைத்து பாரத பிரதமருக்கு கடிதம் எழுதி இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினையை தமிழக சட்டமன்றத் தேர்தலோடு அரசியலாக்கி வடக்கு கடலையும் வடக்கு கடற்றொழில் சமூகத்தையும் அழிக்கின்ற செயல்பாட்டிலே தமிழ்நாட்டில் இருக்கின்ற அரசியல் தலைவர்களும் தமிழ்நாட்டு மீனவர் தலைவர்களும் ஒருபோதும் ஈடுபடக் கூடாது என வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடகப் பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார்.
இந்திய – இலங்கை மீனவர் விவகாரம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை கடல் பகுதிக்குள்ளே அத்துமீறி வருகின்ற தமிழ்நாட்டு புதுச்சேரி மாநில மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்த வண்ணம் இருக்கின்றது.
ஆனால் இந்த கைதுகள் தொடரும்போது எங்களுடைய பாதிப்பை எங்களுடைய இழப்பையோ கருத்தில் கொள்ளாத தமிழ்நாட்டில் இருக்கின்ற அரசியல் தலைவர்கள், எல்லை தாண்டி எங்களுடைய பகுதிகளுக்கு வருகிறவர்களை கைது செய்யும்போது அவர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டிலே 2026ம் ஆண்டு நடைபெற இருக்கின்ற சட்டசபைத் தேர்தலை இலக்கு வைத்து முறையற்ற தொழிலுக்கும் சட்டவிரோத தொழிலுக்கும் இலங்கை கடலை பாவிப்பதற்கு அனுமதிக்க வேண்டுமென்று தமிழ்நாட்டினுடைய அரசியல் தலைவர்கள் குரல் கொடுப்பது எங்களுக்கு கவலை அளிக்கிறது.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மூன்று வருடங்களுக்கு முன்பு வடக்கு கடற்றொழில் சமூகம் நல்லெண்ண அடிப்படையிலே மூன்று கடிதங்களை எழுதி இந்த மீனவர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வடக்கு சமூகம் தயாராக இருக்கின்றது என கோரிய போதும் கூட முதலமைச்சர் இன்று வரையும் அதற்கு பதில் தரவில்லை.
தமிழ்நாட்டு சட்டமன்றத் தேர்தலை இலக்காக வைத்து பாரதப் பிரதமருக்கு கடிதம் எழுதி இந்த மீனவர் பிரச்சினையை தமிழ்நாட்டு சட்டமன்றத் தேர்தலோடு அரசியல் ஆக்கி வடக்கு கடலையும் வடக்கு கடற்றொழில் சமூகத்தையும் அழிக்கின்ற செயல்பாட்டிலே தமிழ்நாட்டில் இருக்கின்ற அரசியல் தலைவர்களும் தமிழ்நாட்டு மீனவர் தலைவர்களும் ஒருபோதும் ஈடுபடக் கூடாது என்பதுடன் எங்களுடைய இருப்பும் எங்களுடைய இறைமையும் வடக்கு கடலிலேயே தங்கி இருக்கின்றது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
அதை அழிப்பதற்கு தமிழ்நாட்டு முதலமைச்சர் தலைமையிலான சட்டசபை உறுப்பினர்கள், ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்று நீங்கள் எங்களுக்கு எதிராக அத்துமீறிய இழுவை மடி தொழிலை தொடர்ந்து செய்வதற்கு ஆதரவாக குரல் கொடுப்பதை நீங்கள் நிறுத்த வேண்டும் என்பது எங்களுடைய தயவான வேண்டுகோள் – என்றார்.
![]()