இந்தியா

தேர்தல் ஆணைக்குழு நோக்கி பேரணியாகச் சென்ற ராகுல் காந்தி கைது!

தேர்தல் ஆணைக்குழு நோக்கி பேரணியாகச் சென்ற ராகுல் காந்தி உட்பட இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தியும், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் டெல்லியில்  நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து இந்திய தலைமை தேர்தல் ஆணைக்குழு நோக்கி இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பிரம்மாண்ட பேரணியொன்றை முன்னெடுத்திருந்தனர்.

ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற இப் பேரணியில் 25 கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் பங்கேற்றனர்.

குறிப்பாக காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணமூல் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, இடதுசாரிகள், ராஷ்ட்ரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் இதில் கலந்து கொண்டனர்.

திமுக சார்பில் கனிமொழி எம்.பி, திருச்சி சிவா, டி.ஆர்.பாலு, துரை வைகோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி பேரணி சென்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தடுப்பு காவலில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவருடன் சென்ற பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால், அகிலேஷ் யாதவ், சஞ்சய் ராவத், சாகரிகா கோஷ், கனிமொழி, ஜோதிமணி எம்.பி. தமிழச்சி தங்க பாண்டியன், திருச்சி சிவா, உள்ளிட்ட எம்.பி.க்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதுக்கு பின் பேருந்தில் இருந்தவாறு ராகுல் காந்தி கூறுகையில் ” இப் போராட்டம் அரசியல் சார்ந்தது அல்ல. இந்தப் போராட்டம் அரசியலமைப்பைக் காப்பாற்றுவதற்கானது. இந்தப் போராட்டம் ஒரு மனிதன், ஒரு வாக்குக்கானது. எங்களுக்கு தூய்மையான வாக்காளர் பட்டியல் வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *