இலங்கை

சிவில் நடைமுறைகளில் இராணுவ தலையீட்டை உடன் நிறுத்துங்கள் ; ஜனாதிபதி அநுரவுக்கு சிறிதரன் எம்.பி கடிதம்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவப்பிரசன்னம் அதிகமாகக் காணப்படுவதோடு போரால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டத்தில் சிவில் நடைமுறைகளில் இராணுவத்தலையீடு தீவிரமடைந்துள்ளதால் அச்செயற்பாட்டை உடன் நிறுத்துமாறு வலியுறுத்தி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் தலைவருமான சிவஞானம் சிறிதரன் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

வடமாகாண ஆளுநர், கிளிநொச்சி மாவட்டச் செயலாளர், கரைச்சி மற்றும் பூநகரி பிரதேச செயலாளர் மற்றும் தவிசாளர்கள் ஆகியோருக்கும் குறித்த கடிதம் பிரதியிடப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

போருக்கு முற்பட்ட காலத்தில் கரைச்சிப் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட கிளிநொச்சி பொதுநூலகம்ரூபவ் பொதுவிளையாட்டு மைதானம் என்பனவற்றுக்குரிய 13.5ஏக்கர் காணி போருக்குப் பின்னர் இராணுவத்தினரால் முழுமையாக கையகப்படுத்தப்பட்டிருந்தது.

இதில் 9பரப்புக்காணி பொதுநூலகத்துக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில் கடந்த 10வருடங்கால போராட்டத்தின் விளைவாக 5பரப்பு காணி மட்டும் விடுவிக்கப்பட்டு நூலக நிர்மாணத்தின் முதற்கட்டப் பணிகள் முடிவுறுத்தப்பட்டுள்ளது.

எனினும் கிளிநொச்சி மாவட்டத்தின் நகர வடிவமைப்பில் முக்கியபங்கு வகிக்கும் பொதுநூலக காணியின் ஒருபகுதி இன்றளவும் இராணுவத்தால் விடுவிக்கப்படாதுள்ளமை தொடர்புடைய தரப்பினரின் திட்டமிடலிலும் செயற்பாடுகளிலும் மாவட்டத்தின் கல்வித்தளத்திலும் பாதகமான தாக்கங்களை உருவாக்கியுள்ளது.

கிளிநொச்சி மாவட்டச் செயலக வளாகத்தின் ஒருபகுதி இராணுவ முகாமாக உள்ள சமநேரத்தில் கிளிநொச்சி மத்திய கல்லூரியின் பயன்பாட்டுக்கு தேவையான காணியில் இராணுவ நினைவுத்தூபி அமைக்கப்பட்டு இராணுவத்தளமாக எல்லைப்படுத்தப்பட்டுள்ளதுடன் குறித்த காணியின் ஒருபகுதியை இலவச இணைதள வலையமைப்பாக பிரகடனப்படுத்தியுள்ள இராணுவத்தினர் அதனைப்பயன்படுத்தி இளைஞர், யுவதிகளை குறித்த பகுதிக்குள் உள்ளீர்ப்பதன் மூலமாக சமூகவிரோதச் செயற்பாடுகளுக்கான பகிரங்க வெளியை ஏற்படுத்தியுள்னனர்.

2010ஆம் ஆண்டு மீள்குடியேற்றம் நடைபெற்றபோது கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கல்வித் திணைக்களங்களின் மேற்பார்வையில் நடாத்தப்பட்டுவந்த முன்பள்ளிகள் இராணுவத்தினரின் சிவில் பாதுகாப்பு படைப்பிரிவினரால் வலுக்கட்டாயமாக கையகப்படுத்தப்பட்டு அங்கு கற்பிக்கின்ற முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் சிவில் பாதுகாப்பு பிரிவின் நிர்வாக ஆளுகைக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் 303பேரும் , முல்லைத்தீவு மாவட்டத்தில் 166பேரும், யாழ்ப்பாணத்தில் 12பேருமாக 481பேர் இராணுவப்படையணிச் சம்பளத்தைப் பெற்று கடமையாற்றுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி நகரிலும், சில கிராமங்களிலும் பொதுப்பயன்பாட்டிடங்களை அண்மித்த பகுதிகளில் உணவகங்களையும் சிகை அலங்கரிப்பு நிலையங்களையும் இராணுவத்தினர் நடாத்திவருகின்றமையானது உள்ளூர் வர்த்தகர்களுக்கு வருமான இழப்பையும் சமூக முரண்நிலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.

கிளிநொச்சியின் முதன்மை அடையாளங்களுள் ஒன்றாக விளங்கும் சுற்றுலாத்தளமான கௌதாரிமுனை கடற்கரைப் பகுதியை கட்டண அறவீட்டுடன் நிருவகிக்கும் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றமையானது பொருத்தமற்றதாகும்.

ஆகவே கிளிநொச்சி மாவட்டத்தின் சிவில் செயற்பாடுகளில் இராணுவத்தின் தலையீட்டை உடனடியாக நீக்குவதோடு முன்பள்ளிகளை உடனடியாக மாகாண கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவருமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *