வலிந்து காணாமலாக்கப்படல்கள் குழுவின் 29 ஆவது கூட்டம் செப்டெம்பரில் ஆரம்பம் ; வட, கிழக்கிலிருந்து பாதிக்கப்பட்ட தரப்பினர் பங்கேற்பதற்கு ஆயத்தம்

ஜெனீவாவில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவிருக்கும் வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான குழுவின் 29 ஆவது கூட்டத்தில் வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் சார்பில் ஓரிரு பிரதிநிதிகள் கலந்துகொள்வதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
ஐக்கிய நாடுகள் சபையின்கீழ் இயங்கிவரும் கிளைக்கட்டமைப்புக்களில் ஒன்றான வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான குழு என்பது சகல நபர்களையும் வலிந்து காணாமலாக்கப்படல்களிலிருந்து பாதுகாத்தல் தொடர்பான பிரகடனமானது அதனை ஏற்றுக் கையெழுத்திட்டுள்ள உறுப்புநாடுகளால் உரியவாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்பதைக் கண்காணிப்பதற்கான சுயாதீன நிபுணர்களை உள்ளடக்கியதொரு கட்டமைப்பாகும்.
மேற்படி வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான குழுவானது அதன் உறுப்புநாடுகளால் முன்மொழியப்படும் 10 உறுப்பினர்களை உளடள்க்கியிருக்கும்.
இக்கட்டமைப்பின் 29 ஆவது கூட்டம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 22 ஆம் திகதி ஆரம்பமாகி ஒக்டோபர் மாதம் 3 ஆம் திகதி வரை ஜெனீவாவில் நடைபெறவிருக்கிறது.
இந்நிலையில் இலங்கையில் வலிந்து காணாமலாக்கப்படல் விவகாரம் கையாளப்படும் முறைமை, அதனுடன் தொடர்புடைய கட்டமைப்புக்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், பாதிக்கப்பட்ட தரப்பினரின் நிலைப்பாடு என்பன தொடர்பில் தெளிவுபடுத்தி அரச கட்டமைப்புக்களின் சார்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் என்பனவும், சிவில் சமூகத்தின் சார்பில் கொள்கை ஆய்வுக்கான அடையாளம் நிலையம், சர்வதேச மன்னிப்புச்சபை, தமிழ் உலகம் அமைப்பு, கிழக்கு சமூக அபிவிருத்தி அமையம், இனத்துவக் கற்கைகளுக்கான சர்வதேச நிலையம், பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு உள்ளிட்ட அமைப்புக்களும் தமது அறிக்கைகளை இக்குழுவுக்கு அனுப்பிவைத்துள்ளன.
அதற்கமைய வலிந்து காணாமலாக்கப்படல் விவகாரம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிப்பதில் பாதிக்கப்பட்ட தரப்பினர், சிவில் சமூக அமைப்புக்கள், தேசிய மனித உரிமைகள் கட்டமைப்புக்கள் வழங்கியிருக்கும் பங்களிப்பைத் தாம் பெரிதும் வரவேற்பதாக வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான குழு தெரிவித்துள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவிருக்கும் இக்கூட்டத்தில் வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் சார்பில் ஓரிரு பிரதிநிதிகள் கலந்துகொள்வதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக அறியமுடிகின்றது.
![]()