சர்வதேச நீதிமன்ற செயன்முறைக்கு செல்லுமாறு ஐ.நா. ஆணையாளருக்கு தொடர்ந்தும் அழுத்தம்!

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக காலாகாலமாக இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தொடர்ந்தும் சர்வதேச நீதி விசாரணையை கோருவதுடன் சர்வதேச மட்டத்தில் ஆதாரங்களை தேடுதல் கடந்த 10 வருடங்காளக நடந்துள்ளன. இது இனி சர்வதேச நீதிமன்ற செயன்முறைக்கு கொண்டு செல்லப்பட வேண்டும். ஆகவே சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இதனை ஒப்படைப்படக்கப்பட வேண்டும் என்று கோருவதுடன் இதற்காக ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்டர் டேர்க்கிற்கு தொடர்ச்சியான அழுத்தங்களை வழங்கி வருவதாக சிவில் சமூக அமையத்தின் இணைப் பேச்சாளரான சட்டத்தரணி கலாநிதி கு. குருபரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
2025ஆம் ஆண்டு ஜுலை 15ஆம் திகதி மற்றும் ஆகஸ்ட் 4ஆம் திகதியிட்டு எங்களால் அனுப்பட்ட கடிதத்திற்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்டர் டேர்க் பிரத்தியேகமாக பதிலளித்துள்ளார். இது வெறுமனே, கடிதம் கிடைத்துள்ளது என்ற பதிலாக அல்லாமல் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உள்ளடக்கங்கள் தொடர்பில் பல விடயங்கள் உள்ளன.
ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை விஜயத்தின் இறுதி நாளில் வெளியிடப்பட்ட கூற்றுக்கள் தொடர்பான ஜுலை 15ஆம் திகதி அனுப்பப்பட்ட கடிதத்திற்கு பதிலாக உள்ளது.
புதிய அரசாங்கம் தொடர்பில் தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும், புதிய விசாரணைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாகவும், சிவில் சமூகங்கள் மத்தியில் நம்பிக்கை கொண்டதாக அரசாங்கம் இருக்கின்றத என்றும் இந்த அரசாங்கம் இனவாதமற்ற அரசாங்கம் என்றும் குறிப்பிட்டு கூறிய விடயங்களை சற்று கடினமான தொனியில் கண்டித்து எழுதிய கடிதத்திற்கான பதிலாக அமைந்துள்ளது. அது சிவில் சமுகத்தினால் எழுதப்பட்ட கடிதமாகும். அதனை தொடர்ந்து ஆகஸ்ட் 4ஆம் திகதி தமிழ்த் தேசியத்துடன் நிற்கும் கட்சிகளும் 115 சிவில் சமூகங்களும் பல்வேறு சமய பெரியவர்களும் கையெழுத்திட்ட கடிதமாகும். அந்தக் கடிதத்தில் எதிர்வரும் 60ஆவது ஐநா பேரவையின் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படும் அறிக்கை எவ்வாறு இருக்க வேண்டும் என்றும், ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் தீர்மானம் மீளக் கொண்டுவரப்பட்டதால் அதில் என்ன குறிப்பிடப்பட வேண்டும் என்றும் எழுதப்பட்ட கடிதமாகும்.
இது தொடர்பில் தற்போது கிடைத்துள்ள பதிலில் தான் இலங்கை வந்திருந்த போது, நிலங்கள் விடுவிப்பு, பயங்கரவாத தடைச் சட்டம் போன்ற விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்துடன் பேசியுள்ளதாக கூறியுள்ளார். அவர் விஜயத்தின் போதான இறுதிக் கருத்துக்களில் அதனை உள்ளடக்க தவறியிருந்ததாக குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் பொறுப்புக் கூறலை செய்யத் தவறியுள்ளதாக வெளிப்படையாக மனித உரிமைகள் ஆணையாளர் பதில் கடிதத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.
இதேவேளை இந்த அரசாங்கத்தை உண்மை மற்றுமன்றி பொறுப்புக்கூறலுடன் செயற்படுமாறு தான் அறிவுரை வழங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார். இது தொடர்பில் சர்வதேச மட்டத்தில் எடுக்கப்படும் சமாந்திரமான நடவடிக்கைகள் தொடர்பில் தான் கரிசனையுடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயத்திலேயே எமக்கு மாற்றுக் கருத்துக்கள் உள்ளன. அதாவது இலங்கை அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் நினைவூட்டல் என்பன பிரயோசனமற்ற நடவடிக்கையாகவே பார்க்கின்றோம். ஐநா ஆணையாளர் ஒவ்வொரு வருடமும் இதனை திரும்ப திரும்ப கூறுகின்றனர். ஆனால் அரசாங்கங்களின் காதுகளுக்கு செல்வதில்லை. இதனால் எந்த அரசாங்கமாக இருந்தாலும் பொறுப்புக் கூறல் செயற்பாட்டுக்கு சென்றால் சிங்கள பௌத்த கருத்தியலுக்கு எதிராக செல்ல வேண்டும் என்பதனால் எந்த அரசாங்கத்தினாலும் பொறுப்புக்கூறலை செய்ய முடியாத நிலைமை இருக்கின்றது. இது எந்த அரசாங்கம் மாறினாலும் மாறாத கருத்தியலே. இதனாலேயே சர்வதேச நீதி விசாரணையை கோருகின்றோம். சர்வதேச மட்டத்தில் ஆதாரங்களை தேடுதல் கடந்த 10 வருடங்காளக நடந்துள்ளன. இது இனி சர்வதேச நீதிமன்ற செயன்முறைக்கு கொண்டு செல்லப்பட வேண்டும். ஆகவே சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இதனை ஒப்படைப்படக்கப்பட வேண்டும் என்று கோருகின்றோம். ஏதேனும் அரசாங்கம் இனப்படுகொலை தொடர்பான பொறுப்புக்கூறலை வலியுத்தி சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட வேண்டும் என்று இந்தக் கடிதத்தை எழுத்தியிருந்தோம்.
தற்போது மனித உரிமைகள் ஆணையாளர் சமாந்திரமாக சர்வதேச நடவடிக்கைகளிலும் தான் கவனம் செலுத்துவதாக கூறியுள்ளதால் தன்னுடைய அறிக்கையில் இதனை உள்ளடக்குவாரா, நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவை முன்வைக்கப்படும் தீர்மானத்தில் இது உள்ளடக்கப்படுமா என்று அவதானத்துடன் இருப்பதுடன், உரிய தரப்பினருக்கு தொடர்ச்சியான அழுத்தங்களை நாங்கள் வழங்கி வருவோம்.
![]()