நல்லைக் கந்தன் ஆலயத்திற்கு தங்க நகைகள் அணிந்து வருவதைத் தவிர்த்துக் கொள்ளவும்

நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் நடைபெறும் நாட்களில் இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் தங்க நகைகளைத் திருடும் நோக்குடன் ஆண்கள், பெண்கள் வருகை தந்து கோவில் வளாகத்தில் நடமாடுவதற்கு அதிக வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. எனவே, தங்க நகைகளை அணிந்து வருவதனைத் தவிர்த்துக் கொள்ளுமாறும், தங்களுடைய தங்க நகைகளின் பாதுகாப்புத் தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்துமாறும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத் தலைமைப் பொலிஸ் பரிசோதகர் சம்லி பளிகேன வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பில் வெள்ளிக்கிழமை (08) அவர் அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பக்தர்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு அநாவசியமாகச் செல்வதைத் தவிர்க்கவும். தங்களுக்கு அருகில் உள்ள நபர் பற்றி ஏதாவது சந்தேகங்கள் தோன்றுமாயின் உடனடியாக அருகிலிலுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அறிவிக்கவும்.
உங்களின் பாதுகாப்புக்காகச் சிவில் உடையிலும், சீருடையிலும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பொருத்தப்பட்டுள்ள சிசிடிவிக் கமரா மூலம் தங்களின் சகல நடவடிக்கைகளும் அவதானிக்கப்படுகின்றன எனவும் அந்த அறிவித்தலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
![]()