இந்த ஆண்டில் 17வது சம்பவம்!; இந்திய அரசுக்கு பறந்த கடிதம்

சென்னை: இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தின் ராமேஸ்வரம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தமிழ்நாடு மீனவர்கள் வங்க கடல் பகுதியில் மீன் பிடித்து வருகின்றனர். இந்த நிலையில் மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை கைது செய்வதும் அவர்களது படகுகளை பறிமுதல் செய்து வருகிறது.
இலங்கை கடற்படையின் அத்துமீறலால் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதற்கிடையே இலங்கை கடற்படை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் அவர்களது படகுகளை ஒப்படைக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில்,
” இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கைக் காவலில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்.
இலங்கைக் கடற்படையினரால் 06.08.2025 அன்று அதிகாலை 14 இந்திய மீனவர்கள், அவர்களது இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகு மற்றும் ஒரு பதிவு செய்யப்படாத நாட்டுப்படகுடன் சிறை பிடிக்கப்பட்டதை மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களின் தனி கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.
இலங்கைக் கடற்படையினரால் தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை முடிவுக்குக் கொண்டுவர ஒன்றிய அரசு தூதரக ரீதியாக தலையிட வேண்டும் என்று தான் பலமுறை வேண்டுகோள் விடுத்த போதிலும், இதுபோன்ற கைது சம்பவங்கள் தொடர்வது மிகவும் கவலையளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் அவர்கள், 2025 ஆம் ஆண்டில் மட்டும் நடைபெற்ற கைது சம்பவங்களில், இது 17-வது சம்பவம்.
தற்போது, 237 மீன்பிடிப் படகுகளும், 80 மீனவர்களும் இலங்கையில் காவலில் இருப்பதாகவும், மீனவர்கள், அவர்களின் ஒரே வாழ்வாதாரமான பாரம்பரிய நீர்நிலைகளில் மீன்பிடிக்கும் உரிமையை இழந்துள்ளதை வேதனையுடன் சுட்டிக்காட்டுகிறேன். எனவே, கைது செய்யப்பட்ட அனைத்து தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிப்பதற்குத் தேவையான உடனடி நடவடிக்கைகளை எடுத்திடுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.
![]()