சீனாவில் சிக்குன்குனியா நோய் வேகமாகப் பரவும் அபாயம் – 7,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

சீனாவில் சிக்குன்குனியா நோய் பரவும் அபாயம் தீவிரமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஜூலை மாதம் முதல் இதுவரை 7,000 க்கும் மேற்பட்ட சிக்குன்குனியா நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன.
அனைத்து மருத்துவமனை படுக்கைகளிலும் நுளம்புவலைகள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், சிகிச்சைக்குப் பின் குணமானவர்கள் ஒரு வாரத்திற்குப் பிறகு அல்லது சிகிச்சை தேவையில்லை என உறுதி செய்யப்பட்ட பின்னரே மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் ஏஜிப்தி வகை பெண் கொசுக்கள் கடிப்பதன் மூலம் சிக்குன்குனியா பரவுகிறது. காய்ச்சல் மற்றும் மூட்டு வலி ஆகியவை இதன் பொதுவான அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் சில சமயங்களில் பல ஆண்டுகளாக நீடிக்கலாம்.
சிக்குன்குனியா ஒருவரையொருவர் தொடுவதால் பரவும் நோய் அல்ல. பாதிக்கப்பட்ட ஒருவரைக் கடித்த கொசு ஆரோக்கியமான மற்றொருவரைக் கடிப்பதன் மூலம் இது பரவுகிறது.
சீன அறிக்கைகளின்படி, தற்போது நோயின் தீவிரம் குறைவாகவே உள்ளது. சிகிச்சை பெற்றவர்களில் 95% பேர் 7 நாட்களுக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இந்த நோய் மேலும் பரவாமல் தடுக்க அதிகாரிகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். வீடுகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நீர் சேகரிக்கும் கொள்கலன்களை அகற்றுமாறு அல்லது அழிக்குமாறு சீன மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவுறுத்தலைப் பின்பற்றாதவர்களுக்கு 10,000 யுவான் (1,400 டொலர்) அபராதம் விதிக்கப்படும்.
மேலும், சிக்குன்குனியா பரப்பும் கொசுக்களை உண்ணும் ராட்சத கொசுக்களையும், கொசுக்களை உண்ணும் மீன்களையும் நீர்நிலைகளில் விடுவிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். கடந்த வாரம், 5,000 மீன்கள் நீர்நிலைகளில் விடப்பட்டன. நீர் தேங்கும் இடங்களைக் கண்டறிய அதிகாரிகள் ட்ரோன்களைப் பயன்படுத்தியுள்ளனர்.
![]()