இலங்கை

செம்மணி மயான வாசலுடன் ஐ.நா. ஆணையாளரை நிறுத்த முயன்றனர்; சிரேஸ்ட சட்டத்தரணி இரத்தினவேல்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோர்க்கர் டேர்க்கர் யாழ்ப்பாணத்துக்கு வந்தபோது அவரை செம்மணி புதைகுழியை பார்க்கவிடாது சித்துப்பாத்தி மயான வாசலுடன் நிறுத்த முயற்சிகள் நடந்ததாகவும் எனினும் யாழ்.நீதவான் நீதிமன்றம்,அவர் உள்ளே செல்வதற்கு அனுமதி வழங்கியதாகவும் சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ்.இரத்தினவேல் தெரிவித்தார்.

கொழும்பு தமிழ் சங்கத்தில் இடம்பெற்ற ‘வன்மம்” கிருஷாந்தி குமாரசுவாமி கொலை வழக்கு நூல் அறிமுகநிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்

அவர் மேலும் கூறுகையில்,

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோர்க்கர் டேர்க்கர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றார் என தகவல் வெளியானதும் அவர் கட்டாயம் செம்மணி மனிதப் புதைகுழி இருக்கும் பகுதியை சென்று பார்க்கவேண்டும், நேரடியாக சென்று பார்க்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தோம். இது முக்கியமான விடயம் அவர் செம்மணிக்கு செல்வது குறியீட்டு முக்கியத்துவம் வாய்ந்தது.அவர் கட்டாயம் செம்மணிக்கு விஜயம் செய்யவேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுத்தோம், இலங்கை வெளிவிவகார அமைச்சும் இதற்கு சாதகமான பதிலை வழங்கியிருந்தது.

எனினும் பின்னர் திடீர் என செம்மணி புதைகுழி நீதவான் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதால் மனித உரிமை ஆணையாளர் அங்கு விஜயம் மேற்கொள்வதற்கு அவருடைய அனுமதி அவசியம் என தெரிவித்தார்கள்.அந்தக் காலப் பகுதியில் அகழ்வுகள் நிறுத்தப்பட்டிருந்ததால் அவரின் அனுமதி அவசியம் என்றார்கள்.

அனுமதி பெறும் விடயத்தை காணாமல்போனோர் அலுவலகம் செய்யும் என்றார்கள் எனினும் பின்னர் திடீர் என சட்டமா அதிபர் திணைக்களம் கையாளும் என்றார்கள்.சட்டமா அதிபர் திணைக்களம் என்றால் இனி ஒன்றும் நடக்காது என்பது எங்களிற்கு தெரியும்.அதன் காரணமாக நாங்கள் உடனடியாக யாழ்.நீதவான் நீதிமன்றத்தை நாடி அனுமதியை கோரினோம்.ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நேரடியாக சென்று பார்வையிடுவதற்கான அனுமதியை வழங்குமாறு கோரினோம்.

நீதிமன்றத்தில் அரசாங்கத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி ஆஜராகியிருந்த பொலிஸ் அதிகாரியொருவர் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் மயானத்தின் கேற்றுக்கு வெளியேதான் நிற்கலாம் அவருக்கு உள்ளே செல்வதற்கு அனுமதி வழங்க முடியாது எனத் தெரிவித்தார்.

எனினும் நாங்கள் இது மிகமுக்கிய – சர்வதேச இராஜதந்திரியை அவமதிக்கும் செயலாக அமையும், இலங்கை அரசாங்கத்துடனான உடன்பாட்டின் அடிப்படையிலேயே வோல்க்கெர் டேர்க் செம்மணிக்கு வருகின்றார் என சுட்டிக்காட்டினோம்.அதனை தொடர்ந்து நீதவான் அதற்கான அனுமதியை வழங்கினார்.

நாடாளுமன்றத்தில் ஒன்றை சொல்கின்றார்கள் வெளியே வேறொன்றை செய்கின்றார்கள்.

கடந்தகால அரசாங்கங்கள் எப்படி செயற்பட்டனவோ அதேபோன்றே இந்த அரசாங்கமும் செயற்படுகின்றது.நிதி அனுமதியை பெறுவது மிகவும் கடினமான விடயமாக உள்ளது என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *