இலங்கை

புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை திருப்திப்படுத்தவே மஹிந்த ராஜபக்ஷவை நெருக்கடிக்குள்ளாக்க அரசாங்கம் முயற்சி

பிரிவினைவாத கொள்கையுடைய புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை திருப்திப்படுத்தவே மஹிந்த ராஜபக்ஷவை நெருக்கடிக்குள்ளாக்க அரசாங்கம் முயற்சி. உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து மஹிந்த ராஜபக்ஷவை வெளிவேற்றினால் பெரும்பாலான மக்கள் உறுதிப்பத்திரத்துடன் அவருக்கு வீடுகளை வழங்குவார்கள். பழிவாங்கும் நோக்கில் சிறுப்பிள்ளைத்தனமாக செயற்படுவதை அரசாங்கம் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள சர்வஜன சக்தியின் காரியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்துச் செய்யும் வகையில் சட்டமூலம் ஒன்று வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, கோட்டபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதியான ரணசிங்க பிரேமதாசவின் பாரியாரான ஹேமா பிரேமதாச ஆகியோர் இந்த சட்டத்தால் பாதிக்கப்படுவார்கள்.

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்ட முன்னாள் ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்க முன்னாள் ஜனாதிபதிக்குரிய எவ்வித சலுகைகளையும் பெற்றுக்கொள்ளவில்லை.

யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நெருக்கடிக்குக்குள்ளாக்க இந்த அரசாங்கம் பல்வேறு வழிகளில் முயற்சிக்கிறது.பிரிவினைவாத கொள்கையுடைய புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை திருப்திப்படுத்தவே மஹிந்த ராஜபக்ஷவை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் தான் இந்த சட்டமூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டவுடன் முன்னாள் ஜனாதிபதிகள் எவரும் வீதிக்கு வருவதில்லை.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை விஜேராம அரச இல்லத்தில் இருந்து வெளியேற்றினால் அவருக்கு பெரும்பாலான மக்கள் உறுதிப்பத்திரத்துடன் தமது வீடுகளை கையளிக்க தயாராகவுள்ளார்கள்.

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச ஆடைக்கைத்தொழில்துறையை அறிமுகப்படுத்தியதால் தான் இன்றும் பல்லாயிரம் கணக்கான நடுத்தர குடும்பங்கள் வாழ்கின்றன. ஆகவே முன்னாள் ஜனாதிபதிகளை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பல்ல அது தேசியத்தின் கடமை. பழிவாங்கும் நோக்கில் சிறுப்பிள்ளைத்தனமாக செயற்படுவதை அரசாங்கம் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *