இலங்கை

வீட்டில் இருந்து வெளியேற மகிந்த தயார்!

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்குவதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டு அது தொடர்பில் அறிவிக்கப்படும் போது மகிந்த ராஜபக்‌ஷ தற்போது வசிக்கும் வீட்டில் இருந்து வெளியேற வேண்டுமென்றால் அதன்படி செயற்படுவோம் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பின் போது, முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்குவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

குறித்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட பின்னர் அது சட்டமாகியதும் அது தொடர்பில் அறிவிக்க முடியும். அதன்போது அதற்கு ஏற்றவாறு செயற்பட முடியும். இதில் எதுவும் கேட்டு பெற்றுக்கொண்டவை அல்ல. அரசியலமைப்பு ரீதியில் வழங்கப்பட்டமையே. அரச தலைவர்கள் எடுக்க வேண்டிய தீர்மானங்கள் உள்ளன. சில தீர்மானங்கள் சில காலங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய தீர்மானங்களும் இருக்கும். இதனால் அவர் புரிந்துகொள்ள வேண்டும். இது தற்போதைய ஜனாதிபதிக்கும் பிற்பட்ட காலத்தில் பாதிப்பாக அமையலாம். ஆகவே முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு அவசியமில்லை என்று நினைப்பாராக இருந்தால் அது தொடர்பில் பாராளுமன்றத்தில் முன்வைத்து சட்டத்தை நிறைவேற்றி செயற்படுத்த முடியும்.

பல வருடங்களாக நாட்டில் பயங்கரவாதத்துடனேயே வாழ்ந்தோம். இப்போது விடுதலைப் புலிகள் மற்றும் ஜே.வி.பியினரை விடவும் பெரியளவில் திட்டமிட்ட குற்றக்கும்பல்கள் செயற்படுகின்றன. அநுரகுமார திஸாநாயக்க இந்த கும்பல்களுடன் மோதுவதற்கு விருப்பமில்லை என்றால் தீர்மானங்களை எடுக்கலாம் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *